பொய்யான ஹதீஸ்கள்

சுலைமான் நபிக்கு மறைவான ஞானம் உள்ளதா?

sulaimannabikku

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தாவூத் (அலை) அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள் இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள் என்று கூறினார்கள். அதற்கு அவருடைய தோழர் ஒருவர் அல்லாஹ் நாடினால் என்று சொல்லுங்கள் எனக் கூறினார். சுலைமான் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று சொல்லாமலிருந்து விட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும் கூட) தன் இரு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயோரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபதுபேரும் பிறந்து) அல்லாஹ்வின் பாதையில் போராடியிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். Read more

விவசாயம் செய்தால் இழிவு வருமா?

vivsayam

அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள் இந்தக் கருவி ஒரு சமூகத்தினரின் வீட்டில் புகும் போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.  Read more

பல்லி இறைத்தூதருக்கு எதிராக செயல்பட்டதா?

palli

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (நபி தீக் குண்டத்தில் எறியப்பட்ட பேது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி) 

நூல் : புகாரி (3359)

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராகப் பல்லி செயல்பட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. நபிக்கு எதிராகச் செயல்படுவது அல்லாஹ்விற்கு எதிராக செயல்படுவதைப் போன்றது. பல்லி மட்டும் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் மனிதனைத் தவிர்த்து வானம் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடப்பதாகக் குர்ஆன் கூறுகிறது. 

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

அல்குர்ஆன் (3 : 81)

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

அல்குர்ஆன் (13 : 15)

வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் (22 : 18)

ஒருவரது பாவச்சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது.

இப்ராஹிம் நபி காலத்தில் இருந்த பல்லி அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டதால் கியாமத் நாள் வரும் வரைக்கும் நாம் எந்தப் பல்லியை பார்த்தாலும் அதைக் கொல்ல வேண்டும் என்று பல்லி சம்பவம் கூறுகிறது. இப்ராஹீம் நபியின் காலத்திலிருந்த பல்லிகள் செய்த குற்றத்திற்காக நமது காலத்தில் வாழும் பல்லிகளைக் கொல்வது எப்படி நியாயமாகும்? 

இஸ்லாத்திற்கும் கி றிஸ்தவத்திற்கும் மத்தியில் உள்ள மாபெரும் வேறுபாடு என்னவென்றால் ஒருவர் செய்த பாவச் சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பதாகும். கி றிஸ்தவர்கள் மனிதர்களின் பாவங்களை ஏசு சுமந்து கொள்வார் என்று கூறுவார்கள். ஆனால் ஒருவர் செய்த குற்றத்திற்கு இன்னொருவரை தண்டிக்க முடியாது என்று திருக்குர்ஆன் அழுத்தமாகப் பல இடங்களில் கூறுகிறது. 

இந்த அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த பல்லிகள் செய்த குற்றத்திற்காக பின்வரும் காலங்களில் ஜீவிக்கும் பல்லிகளைக் கொல்வது இஸ்லாமியக் கொள்கைக்கு மாற்றமானது.

(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். 

அல்குர்ஆன் (6 : 164)

நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

அல்குர்ஆன் (17 : 15)

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார். கனத்தவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது. 

அல்குர்ஆன் (35 : 18)

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. 

அல்குர்ஆன் (39 : 7)

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் “ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

அல்குர்ஆன் (53 : 36)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே அவர் தமது (பயண) மூட்டைகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி கட்டளையிட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு உங்களைக் கடித்தது ஒரே ஒரு எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?) என்று வஹீ அறிவித்(து அவரைக் கண்டித்)தான். 

அறிவிப்பர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3319)

ஒரு எறும்பு தீங்கு செய்ததற்காக எல்லா எறும்புகளையும் நபி கொன்று விட்டார். ஒருவர் செய்த குற்றத்திற்கு அவரது இனத்தையே பலி வாங்கக் கூடாது என்பதால் இதை இறைவன் கண்டிக்கிறாôன். இப்ராஹிம் நபி காலத்தில் வாழ்ந்த பல்லிகள் செய்த தவற்றுக்காக பல்லி இனத்தையே பலி வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினால் எறும்பைக் கொன்ற நபி தவறு செய்ததைப் போல் நபி (ஸல்) அவர்களும் தவறு செய்துவிட்டார்கள். பிறரை தவறு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்கள் என்று அர்த்தமாகும். 

இஸ்லாத்தில் அநீதி இல்லை.

ஒருவர் செய்யாத குற்றத்தைப் பிறரின் மீது சுமத்தி தண்டனைக் கொடுப்பது அநியாயம். இந்த அநியாயத்தை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான். 

இன்றைய தினம் ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

அல்குர்ஆன் (40 : 17)

இன்றைய தினம் எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் (36 : 54)

ஒருவன் செய்த குற்றத்திற்கு அவனுடைய உறவினரைப் தண்டிக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். : எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம். தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவன் தண்டிக்கப்பட மாட்டான். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : நஸயீ (4058) 

இப்ராஹீம் நபியவர்களுக்கு எதிராக மக்கள் சூழ்ச்சி செய்ததாகவும் அவர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடித்ததாகவும் தான் குர்ஆனில் சொல்லப்படுகிறது. பல்லிகளைப் பற்றி அங்கு பேசப்படவில்லை.

“நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர். “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடு” என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம். அவரையும், லூத்தையும் காப்பாற்றி நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் (சேர்த்தோம்).

அல்குர்ஆன் (21 : 68)

இப்ராஹிம் நபியை எரிப்பதற்காக உருவாக்கப்பட்ட நெருப்பைச் சிறிய படைப்பான பல்லியால் ஊதிப் பெரிதாக்க முடியவே முடியாது. நெருப்பிற்கு அருகில் சென்றால் அதன் அனல் தாங்க முடியாமல் துடிதுடித்து இறந்து விடும். அடுப்பில் இருக்கும் நெருப்பை மூட்டுவதற்குத் தாய்மார்களே சிரமப்படும் போது அளவில் சிறியதாக இருக்கும் இந்த உயிரி ஊதுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 

பல குர்ஆன் வசனங்களுக்கு இச்செய்தி முரண்படுவதே இது பொய்யானது என்பதற்கு போதுமான சான்று. இச்செய்தியை சரிகாணுபவர்கள் ஏற்றுக்கொண்ட விதியின் பிரகாரமும் இந்த ஹதீஸ் பலவீனமாகிறது. 

பல்லி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டது என்ற தகவல் ஆயிஷா மற்றும் உம்மு ஷரீக் ஆகிய இரண்டு நபித்தோழியர்களின் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளும் பலவீனமான செய்திகளாகும்.

உம்மு ஷரீகின் வழியாக அறிவிக்கப்படும் செய்தியின் உண்மை நிலை.

உம்மு ஷரீக் (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் மேலுள்ள செய்தி பின்வரும் அடிப்படையில் தவறான செய்தியாகும். உம்மு ஷரீக்கின் வழியாக பல்லி சம்பந்தமான ஹதீஸ் இரண்டு விதங்களில் வருகிறது. 

1. பல்லிகளைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள். 

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி) 

நூல் : புகாரி (3307)

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (அலை அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி) 

நூல் : புகாரி (3359)

                முதல் அறிவிப்பில் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளை மாத்திரம் இடம் பெற்றுள்ளது. ஆனால் இரண்டாவது அறிவிப்பில் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளையோடு இப்ராஹிம் நபியவர்களுக்கு எதிராக பல்லிகள் நெருப்பை ஊதிவிட்டன என்ற செய்தி கூடுதலாக இடம்பெற்றுள்ளது. 

பல்லி தொடர்பான செய்தியை உம்மு ஷரீக்கிடமிருந்து சயீத் என்பார் அறிவிக்கிறார். சயீத் என்பாரிடமிருந்து அப்துல் ஹுமைத் என்பார் அறிவிக்கிறார். அப்துல் ஹுமைத் என்பாரிடமிருந்து சுஃப்யான் மற்றும் இப்னு ஜுரைஜ் ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள். 

அப்துல்ஹுமைத் என்பவருக்கு சுஃப்யான் மற்றும் இப்னு ஜுரைஜ் என்ற இரண்டு மாணவர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜிடமிருந்து இப்னு வஹப், ரவ்ஹ், முஹம்மத் பின் பக்ர். அபூ ஆசிம் மற்றும் உபைதுல்லா ஆகிய ஐந்து நபர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு ஜுரைஜிற்கு ஐந்து மாணவர்கள் உள்ளனர். 

இவர்களில் உபைதுல்லாவைத் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாணவர்களும் இப்னு ஜ,ýரைஜிடமிருந்து இப்ராஹிம் நபிக்கு எதிராக பல்லி நெருப்பை ஊதி விட்டது என்ற வாக்கியத்தைக் கூறாமல் பல்லியைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்பதை மட்டுமே அறிவிக்கிறார்கள். 

உபைதுல்லாஹ் மட்டும் அந்த நான்கு நபர்களுக்கு மாற்றமாக இப்ராஹிம் நபிக்கு எதிராக பல்லி நெருப்பை ஊதி விட்டது என்ற வாக்கியத்தையும் சேர்த்து அறிவிக்கிறார். இப்னு வஹப் ரவ்ஹ் முஹம்மத் பின் பக்ர் மற்றும் அபூ ஆசிம் ஆகிய நான்கு நபர்கள் ஒரே மாதிரி அறிவிப்பதால் இவர்களுடைய அறிவிப்புத் தான் சரியான அறிவிப்பு. இவர்களுக்கு மாற்றமாக உபைதுல்லாஹ் மட்டும் தனித்து அறிவிப்பதால் இவரது அறிவிப்பு நிராகரிக்கப்பட வேண்டியது. 

அப்துல் ஹுமைத் என்பாரிடமிருந்து இப்னு ஜ,ýரைஜ் மற்றும் சுஃப்யான் அறிவிப்பதாக முன்பே கூறினோம். சுஃப்யான் அவர்களும் அந்த நான்கு நபர்கள் அறிவிப்பதைப் போன்றே பல்லி நெருப்பை ஊதிவிட்ட தகவலைக் கூறாமல் அதைக் கொல்ல வேண்டும் என்பதை மட்டும் கூறுகிறார். உபைதுல்லாஹ் தான் நெருப்பை ஊதிவிட்டத் தகவலை தவறுதலாக கூறியுள்ளார் என்று இதன் மூலமும் புரிந்து கொள்ளலாம். 

உறுதிமிக்க நம்பகமானவர்கள் பலர் அறிவிக்கும் செய்திக்கு நம்பகமான ஒருவர் மாற்றமாக அறிவித்தால் அந்த ஒருவருடைய செய்திக்கு ஷாத் (பின்தள்ளப்பட்ட செய்தி) என்று ஹதீஸ் கûலியில் சொல்வார்கள். உறுதி மிக்கவர்கள் அறிவிக்கும் செய்தி மஹ்ஃபூள் (முன்னுரிமை தரப்பட்ட செய்தி) என்று சொல்லுவார்கள். 

இந்த அடிப்படையில் பல்லி நெருப்பை ஊதி விட்டது என்று உபைதுல்லாஹ் மட்டும் அறிவிக்கும் செய்தி பின்தள்ளப்பட்ட செய்தியாகும். எனவே புகாரியில் இடம்பெற்றிருக்கிதே என்றெல்லாம் குருட்டுத்தனமாக பேசாமல் இந்த ஹதீஸ் கலை விதிக்கு கட்டுப்பட்டு நடப்பதே அறிவாளிகளின் வழியாகும். 

ஆயிஷா (ரலி) அவர்களின் வாயிலக அறிவிக்கப்பட்ட செய்தியின் உண்மை நிலை

பல்லி நெருப்பபை ஊதிவிட்ட சம்பவம் ஆயிஷா (ரலி) அவர்களின் வாயிலாக பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்களின் வீட்டில் ஈட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். முஃமின்களின் தாயே இதை (இந்த ஈட்டியை) வைத்து தாங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இதை வைத்து நாங்கள் பல்லிகளைக் கொல்வோம். ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (இவ்வாறு) சொன்னார்கள். இப்ராஹிம் (அலை) அவர்கள் நெருப்பில் போடப்பட்ட போது பல்லியைத் தவிர பூமியிலிருந்த எல்லா உயிரினமும் நெருப்பை வாயால் ஊதி அனைத்தது. ஆனால் பல்லி மாத்திரம் அவர்களுக்கு எதிராக (நெருப்பை) ஊதிவிட்டது. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கொல்லும்படி கட்டளையிட்டார்கள் என்று ஆயிஷா கூறினார். 

அறிவிப்பவர் : சாயிபா 

நூல் : இப்னு மாஜா (3222)

இதே செய்தி அஹ்மதில் (23393) (24643) (23636) ஆகிய எண்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

ஆயிஷா (ரலி) அவர்களிடம் இந்தச் செய்தியை அறிவிக்கும் சாயிபா என்ற பெண்மனியின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. இவர் நம்பகமானவர் தான் என்று இப்னு ஹிப்பானைத் தவிர வேறுயாரும் சான்றளிக்கவில்லை. இப்னு ஹிப்பான் அறியப்படாத ஆட்களுக்கெல்லாம் நம்பகமானவர் என்று சான்றுதரக் கூடியவர் என்பதால் அவருடைய கூற்றை ஆதாரமாக எடுக்கலாகாது. எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது. 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பின்வருமாறு ஹதீஸ் அஹ்மதில் இடம்பெற்றுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை நீங்கள் கொல்லுங்கள். ஏனென்றால் அது இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டது. ஆயிஷா (ரலி) அவர்கள் பல்லிகளை கொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று (உர்வா என்ற அறிவிப்பாளர்) கூறியுள்ளார். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) 

நூல் : அஹ்மத் (24463)

இந்த ஹதீஸில் சாயிபா இடம்பெறவில்லை. மாறாக அப்துல்லாஹ் பின்அப்திர் ரஹ்மான் என்ற நபர் இடம்பெறுகிறார். இவரது நம்பகத்தன்மைûயும் யாராலும் நிரூபிக்கப்படவில்லை. இவர் யாரென்றும் தெரியவில்லை. எனவே இந்த செய்திக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

நெருப்பை ஊதிவிட்டதற்காக பல்லியை கொல்ல வேண்டுமென்றால் மற்ற மற்ற உயிரினங்கள் நெருப்பை அனைத்திருக்கிறது. எனவே பல்லியைத் தவிர உள்ள வேறெந்த விஷ ஜந்துக்களையும் கொல்லக்கூடாது என்று சொல்லமுடியுமா? ஒரு உயிரைக் கொல்லுவதற்கு இப்படிப்பட்ட மோசமான அளவுகோலை நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக சொல்லவே மாட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் சரியான ஹதீஸ்

பல்லி தீங்கிழைக்கக் கூடியது என்பதைத் தவிர வேறெதையும் பல்லி சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறவில்லை. பல்லியை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதை கூட ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்காதபோது பல்லியை கொல்வதற்கான காரணத்தை நபியவர்களிடமிருந்து கேட்பதற்கு அறவே வாய்ப்பில்லை. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :பல்லி தீங்கிழைக்கக் கூடியது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) 

நூல் : புகாரி (1831)

ஆகையால் இப்ராஹிம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டது என்ற கருத்தை நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. ஆயிஷா (ரலி) அவர்களும் சொல்லவில்லை. உம்மு ஷரீக் (ரலி) அவர்களும் சொல்லவில்லை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிவிட்டது. 

தீமை தரக்கூடிய உயிரிகளைக் கொல்லலாம்.

மேற்கண்ட ஹதீஸை நாம் மறுப்பதால் பல்லியை கொல்லக்கூடாது என்று கூறுவதாக விளங்கிக்கொள்ளக் கூடாது. இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டதால் தான் பல்லியை கொல்ல வேண்டும் என்ற தவறான காரணத்தை தான் மறுக்கிறோம். பல்லி தீங்கு தரக்கூடிய உயிரினம் என்ற அடிப்படையில் அதைக் கொல்லலாம். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பல்லியை கொல்லும்படி கட்டளையிட்டார்கள். அதற்கு ஃபுவைசிக் (தீங்குதரக்கூடிய மோசமான உயிரி) என்று பெயர் வைத்தார்கள். 

அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ்

நூல் : முஸ்லிம் (4154)

நபி (ஸல்) அவர்கள் பல்லிக்கு மட்டும் இவ்வாறு கூறவில்லை. மாறாக இன்னும் சில உயிரினங்களையும் பல்லியைப் போன்று தீங்குதரக்கூடியவைகள் என்று கூறியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும். அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை. அவை காகம் பருந்து தேள் எலி வெறிநாய் ஆகியனவாகும். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (1826)

இரண்டு வசனங்கள் குர்ஆனில் நீக்கப்பட்டதா?

quranilneekpata

குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) 

நூல் : முஸ்லிம் (2876)

ஐந்து தடவை பால் குடித்தால் பால்குடி உறவு ஏற்பட்டு விடும் என்ற வசனம் நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை குர்ஆனில் இருந்தது. அதை மக்களும் ஓதிக் கொண்டிருந்தார்கள். பிராணி ஒன்று வீட்டினுள் நுழைந்து எழுதி வைக்கப்பட்டிருந்த அந்த வசனத்தை உண்டு விட்டது. அதனால் இன்று அந்த வசனம் குர்ஆனில் இல்லை என்று மேலுள்ள செய்திகள் கூறுகிறது. பல காரணங்களால் இச்செய்தி தவறாகிறது. 

1. குர்ஆனில் இருந்த ஒரு வசனம் தவறிவிட்டது என்று இந்தச் செய்தி கூறுகிது. ஆனால் குர்ஆனில் எதுவும் தவறாது. குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்று குர்ஆன் கூறுகிறது. 

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் (15 : 9)

குர்ஆனில் எந்த விதமான மாற்றத்தையும் யாரும் ஏற்படுத்த முடியாது என்று குர்ஆன் கூறும் போது நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு குர்ஆனில் இருந்த ஒரு வசனத்தை மக்கள் குர்ஆனுடன் சேர்க்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு நம்மிடம் இருக்கின்ற குர்ஆன் முழுமையானதல்ல. இன்னும் இரண்டு வசனம் அத்துடன் சேர்க்கப்பட வேண்டியுள்ளது என்று இந்த செய்தி கூறுகிறது. எனவே இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியுôது. 

2. குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டதைப் போல் பல நபித்தோழர்களின் உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டது. இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான். 

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் (29 : 49)

ஆனால் இச்செய்தி எழுதிவைக்கப்பட்டிருந்த தாளை பிராணி சாப்பிட்டதால் தான் அந்த வசனம் குர்ஆனில் இல்லை என்று கூறுகிது. இது சரியான காரணம் அல்ல. ஏனென்றால் எழுதி வைக்கப்பட்ட தாள் தொலைந்து விட்டாலும் பலருடைய உள்ளங்களில் அந்த வசனம் பாதுகாக்கப்பட்டிருக்கும். வசனம் தொலைந்து போனதற்குச் சொல்லப்படும் தவறான இந்தக் காரணத்தை வைத்தே இது உண்மை இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். 

3. குர்ஆனுடைய தனித்தன்மை என்னவென்றால் பல நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் ஏக மனதாக குர்ஆன் தொகுக்கப்பட்டது. இக்குர்ஆனை தொகுக்கும் பணியை ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் செய்தார்கள். பல நபித்தோழர்களிடம் சென்று அவர்கள் வைத்திருந்த வசனங்களை ஒன்று திரட்டி பல நபித்தோழர்கள் முன்னிலையில் உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்டது. 

ஐந்து தடவை பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர வேறு எந்த நபித்தோழர்களும் கூறவில்லை. குர்ஆனை மனனம் செய்து வைத்திருந்த பல நபித்தோழர்கள் இந்த வசனம் குர்ஆனில் உள்ளது என்று கூறவில்லை. குர்ஆனைத் தொகுக்கும் வேலை முடிக்கப்பட்ட போது ஏன் இந்த வசனத்தை விட்டு விட்டீர்கள் என்று யாரும் கேட்கவும் இல்லை. 

அந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் கூட எந்த விதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒட்டுமொத்த மக்களுக்கும் அல்லாஹ் இறக்கிய வசனத்தை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து அந்த சமுதாயம் முழுவதும் எப்படி மறந்திருக்கும்? 

4. இந்த வசனம் பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டுவது தொடர்பானது என்று இந்தச் செய்தி சொல்கிறது. சிறுவர்களுக்குத் தான் பால்குடி சட்டம் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்கிறது. சாலிமுடைய சம்பவத்தை விளக்கும் போது இது பற்றி தெளிவாகக் கூறினோம். பால்குடி உறவு இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குத் தான் என்று குர்ஆன் கூறும் போது பெரியவர்களுக்கு 10 முறை பால் புகட்டுமாறு முரண்பாடாக குர்ஆன் கூறாது. 10 தடவையாக இருந்ததை 5 தடவையாக மாற்றி பருவவயதை அடைந்தவர்களுக்கு பால்புகட்டும் அசிங்கத்தை குர்ஆன் கூறுமா? 

இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்பவர்கள் இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டலாம் என்று ஒரு தீர்ப்பு கூடத் தர மாட்டார்கள். இதைத் தங்களது வாழ்கையில் செயல்படுத்தவும் மாட்டார்கள். பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டலாம் என்ற சட்டம் குர்ஆன் கூறும் சட்டமாக இருந்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாமல் பல நபித்தோழர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அவ்வாரு யாரும் கூறவில்லை. 

5. பால்குடி உறவு ஏற்படுவதற்கு ஐந்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக வந்துள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக இரண்டுக்கு மேல் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த அடிப்படையில் இந்த ஹதீஸ் மற்ற விமர்சிக்கப்படாத ஹதீஸ்களுடன் மோதுகிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : உம்முல் ஃபள்ல் (ரலி)

நூல் : முஸ்லிம் (2872)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

நூல் : நஸயீ (3257)

6. ஒருவரிடமிருந்து முரண்பட்ட பலவிதங்களில் செய்தி அறிவிக்கப்பட்டால் அந்தச் செய்திக்கு ஹதீஸ் கலை அறிஞர்கள் முள்தரப் (குளறுபடியானது) என்று சொல்வார்கள். இவ்வாறு முரண்பட்டு வரும் செய்திகள் அனைத்தும் நம்பகமான உறுதிமிக்க ஆட்கள் வழியாக வந்தாலும் முரண்பாடு வந்து விட்டதால் இதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

ஐந்து முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நாம் விமர்சித்துக் கொண்டிருக்கின்ற ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் கூறுகிறது. பத்து முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் மூன்று முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் ஏழு முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கருதியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று ஐந்து ஏழு பத்து என்று நான்கு விதத்தில் முரண்பட்டு அறிவிப்பு வருவதால் இந்த செய்தி குளறுபடியானதாகி விடுகிறது. 

எனக்குப் பால்புகட்டுவதற்காக ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை அவர்களின் சகோதரியும் அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளுமான உம்மு குல்சூம் (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். இவர் என்னிடம் வந்து செல்வதற்காக 10 முறை இவருக்கு நீங்கள் பால் புகட்டுங்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் (உம்மு குல்சூமிடம்) கூறினார்கள். உம்மு குல்சூம் எனக்கு மூன்று தடவை பால் புகட்டினார்கள். பின்பு அவர்கள் நோயுற்றதால் எனக்கு மூன்று தடவை தவிர அவர்கள் பாலூட்டவில்லை. உம்மு குல்சூம் (ரலி) அவர்கள் எனக்கு முழுமையாக 10 முறை பாலூட்டாததால் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து செல்லவில்லை. 

அறிவிப்பவர் : சாலிம் பின் அப்தில்லாஹ் 

நூல் : பைஹகீ பாகம் : 7 பக்கம் : 457 

சஹ்லா (ரலி) அவர்களுடைய சம்வத்தில் சம்பந்தப்பட்ட சாலிம் வேறு. மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட சாலிம் வேறு. சாலிம் பின் அப்தில்லாஹ் என்பவர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் பிறக்கிறார். சாலிமிற்கு 10 முறை பால் புகட்டுமாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்மும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2869)

ஏழு தடவைக்கு குறைவாக பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

நூல் : முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் பாகம் : 7 பக்கம் : 466             

பல குழப்பங்கள் இந்தச் செய்தியில் இருப்பதால் எதிர்த் தரப்பினர் ஆதரிக்கும் அறிஞர்களில் பலர் நாம் எடுத்து வைத்திருக்கும் கேள்விகளை எழுப்பி இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் இமாம் மாலிக் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளவில்லை. 

சர்ஹஸீ குர்துபீ இப்னு அப்தில் பர் அலாவுதீன் என்ற இப்னுத் தர்குமானீ அபூ ஜஃஃபர் தஹாவீ நிலாமுத்தீன் நய்சாபூரி மற்றும் ஸர்கானீ உட்பட பலர் இந்த ஹதீஸ் தரும் தவறான கருத்துக்களை நிராகரித்துள்ளார்கள். குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள்.

இமாம் இப்னு ஹஜரின் கூற்று : 

فتح الباري – ابن حجر , جزء 9 – صفحة 147 

وأيضا فقول عائشة عشر رضعات معلومات ثم نسخن بخمس معلومات فمات النبي صلى الله عليه وسلم وهن مما يقرأ لا ينتهض للاحتجاج على الأصح من قولي الاصوليين لأن القرآن لا يثبت الا بالتواتر والراوي روى هذا على أنه قرآن لا خبر فلم يثبت كونه قرآنا ولا ذكر الراوي أنه خبر ليقبل قوله فيه والله أعلم

இப்னு ஹஜர் அவர்கள் எத்தனை முறை பால் புகட்ட வேண்டும் என்பது சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பல முரண்பட்ட தகவல்கள் வருவதாகக் கூறிவிட்டு பின்வருமாறு கூறுகிறார். குறிப்பிட்ட பத்து தடவை பாலருந்தினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற சட்டம் குறிப்பிட்ட ஐந்து தடவையாக மாற்றப்பட்டது. இந்த வசனங்கள் குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அறிஞர்களின் சரியான கூற்றுப்படி ஆதாரத்திற்கு தகுதியாகாது. 

ஏனென்றால் அதிகமானவர்களின் வழியாகத் தான் குர்ஆன் நிரூபணமாகும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது. அறிவிப்பாளரின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் அவர் இதை ஹதீஸ் என்றும் சொல்லவில்லை. 

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 9 பக்கம் : 147

அவர்களது விளக்கம்.

குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறும் வசனத்தில் திக்ர் என்ற வாசகம் வந்துள்ளது. திக்ர் என்பது குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளும். ஹதீஸைப் பாதுகாப்பதாகவும் அல்லாஹ் கூறுவதால் ஐந்து தடவை பால்குடித்தால் பால்குடிஉறவு ஏற்படும் என்ற வசனம் ஹதீஸின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று இதைச் சரிகாணுபவர்கள் கூறுகிறார்கள். 

நமது விளக்கம்.

குர்ஆனில் இல்லாத ஒரு வசனம் இருந்ததாகக் கூறுவதோடு தங்களின் அலட்சியத்தால் காணாமல் போய்விட்டது என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஓதப்பட்டு வந்த அந்த வசனம் இதன் பிறகு ஓதப்படவில்லை. இன்று வரை நாமும் அந்த வசனத்தை ஓதுவது கிடையாது.

குர்ஆனில் சேர்க்கப்பட்ட நிலையில் ஓதப்பட்டு வந்த ஒரு வசனம் தொலைக்கப்பட்டு ஓதப்படாமல் இருந்தால் அவ்வசனம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். மாறாக குர்ஆனில் மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதப்படும். இந்தக் கருத்தை அந்தச் செய்தி தரும் போது ஹதீஸின் மூலம் குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று முற்றிலும் முரணாக சொல்வது ஏற்புடையதல்ல. 

அந்த இரண்டு வசனமும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றால் அந்த இரண்டு வசனத்தையும் இன்று தொழுகையில் இவர்கள் ஓதுவார்களா? பருவ வயதை அடைந்தவர்களுக்கு பெண்கள் 5 தடவை பால் புகட்ட வேண்டும் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்களா? இறைவனுடைய இந்தச் சட்டத்தை செயல் படுத்துவார்களா?

ஹதீஸையும் இறைவன் பாதுகாத்துள்ளான் என்பது சரியான கருத்து தான். இதை நாம் மறுக்கவே இல்லை. குர்ஆனுடன் ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை மறுக்க வேண்டும் என்ற விதி ஹதீஸைப் பாதுகாப்பதற்கான விதிகளில் ஒன்று. மேலுள்ள செய்தி குர்ஆனிற்கு முரண்படுவதால் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறிய செய்திகளுக்குள் இச்செய்தி அடங்காது. ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மாறுபட்ட பல கருத்துக்கள் வந்துள்ளது. ஒருவரிடமிருந்து மாறுபட்ட பல கருத்துக்கள் வந்தால் அந்த செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற ஹதீஸ் கலையின் விதியின் பிரகாரமும் இது பாதுகாக்கப்பட்ட செய்திகளுக்குள் அடங்காது. 

அவர்கள் விளக்கம்.

பலருடைய அங்கீகாரம் இருந்தால் தான் குர்ஆன் என்று முடிவு செய்ய முடியும் என்று நாம் கூறினோம். ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் மட்டும் தான் தவ்பா என்ற அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்கள் இருந்ததாக ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தி புகாரியில் (4989) வது எண்ணில் இடம் பெற்றுள்ளது. பலரது கூற்று அவசியமென்றால் ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் மட்டும் இருந்த இந்த வசனங்களை குர்ஆன் என்று முடிவு செய்திருக்கக் கூடாது. 

ஹுசைமா மட்டும் அறிவித்த அந்த வசனத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் அறிவிக்கும் இந்த வசனத்தையும் குர்ஆனில் உள்ளது என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எதிர்த் தரப்பினர் கூறுகிறார்கள். 

நமது விளக்கம்.

ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் இருந்த இரண்டு வசனம் குர்ஆனில் சேர்க்கப்பட்ட போது எந்த நபித்தோழரும் அதை மறுக்கவில்லை. மாறாக எல்லோரும் அது குர்ஆனில் உள்ளது தான் என்று ஏற்றுக் கொண்டார்கள். குர்ஆனை முழுவதும் மனனம் செய்திருந்தவர்கள் கூட இதை மறுக்கவில்லை. இந்த அடிப்படையில் பல நபித்தோழர்களின் அங்கீகாரம் அந்த இரண்டு வசனத்திற்கும் கிடைத்துள்ளது. இது போன்ற அங்கீகாரம் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் செய்திக்குக் கிடைக்கவில்லை. 

இது மட்டும் தான் குர்ஆன் என்று சிலர் முடிவு செய்திருக்கும் போது அவர்களுக்கு மாற்றமாக ஹுசைமா (ரலி) அவர்கள் இந்த வசனங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்ததை ஸைத் (ரலி) அவர்களுக்கு சொன்னார்கள். தங்களிடம் இருப்பது மட்டும் தான் குர்ஆன் என்று அவர்கள் வாதிடவும் இல்லை. 

ஆனால் இன்று நம்மிடம் இருப்பது மட்டும் தான் குர்ஆன் என்று பல நபித்தோழர்கள் முடிவு செய்துவிட்ட போது இன்னும் இருக்கிறது என்று கூறுவது அந்த ஒட்டு மொத்த சமூகம் எடுத்த முடிவுக்கு எதிரானதாகும். 

ஹுசைமா (ரலி) அவர்களிடம் மட்டும் தான் இரண்டு வசனங்களை நான் பெற்றுக் கொண்டேன் என்று ஸைத் (ரலி) அவர்கள் கூறுவதால் வேறு யாரும் இந்த வசனங்களைத் தெரிந்திருக்கவில்லை என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. எழுதி வைக்கப்பட்டதாக யாரிடத்திலும் இல்லை என்றே விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பல நபித்தோழர்கள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்திருந்தார்கள். 

ஸைத் (ரலி) அவர்கள் குர்ஆனை நன்கு விளங்கியவராக இருந்தார்கள். அமானிதத்தைப் பேணக்கூடியவர். அறிவுள்ள இளைஞர். நபி (ஸல்) அவர்களுக்கு வந்த தூதுச் செய்தியை எழுதக் கூடியவர். இவ்வாறு அபூபக்கர் (ரலி) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களைப் புகழ்ந்து சொல்கிறார்கள். 

நூல் : புகாரி (4986)

வஹீயை எழுதி வந்த ஸைத் (ரலி) அவர்களுக்கு குர்ஆனைப் பற்றி நிறைய அறிவு இருந்தது. அதனால் தான் குர்ஆனைத் தொகுக்கும் பணிக்கு இவர்களை அபூபக்கர் (ரலி) அவர்கள் தேர்வு செய்தார்கள். குர்ஆனை மனனம் செய்திருந்தாலும் அதில் தவறு ஏதும் வந்து விடக் கூடாது என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான் மற்ற மற்ற நபித் தோழர்களிடமிருந்த வசனங்களைத் திரட்டினார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது : நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்த போது அல்அஹ்ஸாப் எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள். (அந்த வசனம் இது தான்) இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள். (33 : 23)

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல் : புகாரி (4784)

பல முறை அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓத தான் கேட்டிருப்பதாக ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த வசனம் குஸைமா (ரலி) அவர்களிடம் மட்டும் தான் இருந்தது என்றும் கூறுகிறார்கள். தனக்கு நினைவில் இருக்கும் வசனத்தை ஏன் குஸைமாவிடம் சென்று கேட்கிறார்கள் என்றால் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான். 

இன்னும் குஸைமா (ரலி) அவர்கள் தன்னிடம் இருந்த குர்ஆன் வசனங்களை எழுத்தில் பாதுகாத்து வைத்திருக்கலாம். குர்ஆனுடைய பாதுகாப்பிற்கு இம்முறை ஏற்றது என்பதால் தனக்கு குர்ஆன் மனனமாக இருந்தாலும் எழுத்தை வைத்து சரி பார்த்துக் கொள்ளலாம் என்று ஸைத் (ரலி) அவர்கள் கருதியுள்ளார்கள்.

இன்னும் குஸைமா (ரலி) அவர்கள் ஒரு நபருக்கு சமமானவர் அல்ல. நபி (ஸல்) அவர்கள் குஸைமாவின் சாட்சியை இரண்டு நபருக்கு நிகரானதாக ஆக்கினார்கள். எனவே தவ்பாவின் கடைசியில் இடம்பெற்றுள்ள இரண்டு வசனம் குஸைமாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது. பல நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் தான் இந்த இரண்டு வசனமும் குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. 

நபிகள் நாயகம் (ஸல்) அன்னியப் பெண்ணுடன் பழகினார்களா?

nabigalnayagam copy

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியராக இருந்தார். ஒரு நாள் பகலில் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் நபி (ஸல்) அவர்களுக்குப் பேண் பார்த்து விடலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள். 

தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களாக அல்லது மன்னர்களைப் போன்று இருந்தார்கள் என்று கூறினார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தலையை வைத்து விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான் ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தோரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர்புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள் என்று முன்பு போலவே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான் அல்லாஹ்வின் தூதரே என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள் என்று கூறினார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்ட போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார்கள். 

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (7001)

நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று) புனிதப் போர் புரியும் படையினர் (சொர்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற நான் அல்லாஹ்வின் தூதரே நான் அவர்களில் ஒருத்தியா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அவர்களில் ஒருவர் தாம் என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் எனது சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவார் என்று கூறினார்கள். அவர்களில் நானும் ஒருத்தியா? அல்லாஹ்வின் தூதரே என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : உம்மு ஹராம் (ரலி)

நூல் : புகாரி (2924)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்துவிட்டு அவர்களுடைய தலையில் பேண் பார்த்து விடுவதற்காக உட்கார்ந்தார்கள். 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (3535)

நபி (ஸல்) அவர்கள் தனது தலையை உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் வைத்தார்கள். 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (3536)            

குர்ஆனிற்கும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களுக்கும் முரண்படும் செய்திகளில் மேற்கண்ட செய்தியும் ஒன்று. 

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் என்ற அன்னியப் பெண்ணிடம் அடிக்கடி வந்து செல்லும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள். உம்மு ஹராம் நபியவர்களுக்கு பேண் பார்த்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராமின் மடியில் தூங்கி விட்டார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. 

ஒரு ஆண் ஒரு அன்னியப் பெண்ணிடத்தில் இது போன்று படுத்து உறங்குபவனாகவும் அடிக்கடி அங்கு சென்று வருபவனாகவும் இருந்தால் அவன் ஒழுக்கங்கெட்டவன் என்று மக்கள் கூறுவார்கள். சாதாரண எந்த ஒரு மனிதன் இதைச் செய்தாலும் அதை யாரும் அங்கீகரிக்காத போது நபி (ஸல்) அவர்கள் இதைச் செய்தார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

நபிகள் நாயகம் (ஸல்) மகத்தான குணம் கொண்டவர்கள்.

நபி (ஸல்) அவர்களிடத்தில் மகத்தான குணம் இருப்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் அவர்களைப் பற்றி புகழ்ந்து சொல்கிறான். நபி (ஸல்) அவர்கள் அன்னியப் பெண்ணுடன் தோலும் தோலும் உரசும் நிலையில் இருந்தார்கள் என்று நம்பினால் நபி (ஸல்) அவர்கள் மோசமான குணத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று கூற வேண்டிய நிலைவரும். நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது. 

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

அல்குர்ஆன் (68 : 4)

அன்னியப் பெண்களைக் கண்டால் பார்வையைத் தாழ்த்துமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. இதற்கு மாற்றமாக பார்ப்பதைத் தாண்டி அன்னியப் பெண்ணின் தோல் தன் மீது படும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று கூறும் இந்த ஹதீஸை நம்பினால் குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் நடந்தார்கள் என்று நம்ப வேண்டிவரும். 

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (24 : 30)

எந்த அந்நியப் பெண்ணும் தன்னை தொட்டுவிடக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள். ஆண்கள் நபி (ஸல்) அவர்களின் கையை பிடித்து பைஅத் (உறுதிப் பிரமாணம்) செய்தார்கள். பெண்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் பைஅத் செய்ய வந்த போது அவர்களைத் தொடாமல் பேச்சின் மூலமாக பைஅத் செய்தார்கள். 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபியே இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்காக எதையும் இணை வைக்க மாட்டார்கள் திருட மாட்டார்கள் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்ய மாட்டார்கள் தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்ப மாட்டார்கள் நற்செயலில் உங்களுக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்று உறுதி மொழி அளித்தால் அவர்களிடம் உறுதி மொழி வாங்குங்கள் எனும் (60 : 12 ஆவது) இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் ஓதி வாய் மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க மாட்டார்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை. 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (7214)

நபி (ஸல்) அவர்களிடத்தில் உறுதிப் பிரமாணம் செய்வதற்காக நான் பல பெண்களுடன் அவர்களிடத்தில் வந்தேன். அப்போது அவர்கள் உங்களுடைய சக்திக்கு உட்பட்டு உங்களால் முடிந்ததை (கடைப்பிடியுங்கள்). நான் பெண்களிடத்தில் கை கொடுத்து (பைஅத்) செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : உமைமா (ரலி) 

நூல் : இப்னு மாஜா (2865)

தன்னுடைய நடத்தையில் யாரும் குறை கண்டு விடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தனது நடவடிக்கைகளை மிகக் கவனமாக அமைத்துக் கொண்டார்கள். தான் தவறு செய்யாவிட்டாலும் பிறர் தவறாக நினைத்துவிட வாய்ப்பிருந்தால் அந்த இடத்தில் உண்மை நிலையை மக்களுக்கு அவர்கள் உணர்த்தாமல் இருந்ததில்லை.

நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்த போது அவர்களுடைய துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் திரும்பச் சென்ற போது நபி (ஸல்) அவர்களும் (ஸஃபிய்யாவுடன்) (சிறிது தூரம்) நடந்து சென்றார்கள். அப்போது அன்சாரிகளில் இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து இவர் (வேறு யாருமல்லர். என் துணைவி) ஸஃபிய்யாதாம் என்று சொன்னார்கள். உடனே அவ்விருவரும் அல்லாஹ் தூயவன் (உங்கள் மீதா சந்தேகப்படுவோம்) என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான் என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி)

நூல் : புகாரி (3281)

இவ்வளவு பேணுதலாக நடந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் முறையின்றி உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் சென்று வந்திருக்க முடியாது. இந்த ஹதீஸ் முற்றிலும் நபி (ஸல்) அவர்களின் அழகிய குணத்திற்கு மாற்றமாக உள்ளது. 

உம்மு ஹராம் மற்றும் நபி (ஸல்) ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்ததாக ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இருந்ததாகச் சொல்லப்படவில்லை. 

உம்மு ஹராம் (ரலி) அவர்களின் கணவர் உட்பட யாரும் இல்லாத போது நபி (ஸல்) அவர்கள் உம்முஹராமின் மடியில் படுத்து உறங்கினார்கள் என்று நம்புவது இஸ்லாத்தை விட்டும் நம்மை வெளியேற்றிவிடும். ஆணும் பெண்ணும் தனித்திருப்பதைத் தடை செய்த உத்தம நபி ஒரு போதும் உம்மு ஹாரமுடன் தனித்து இருந்திருக்க மாட்டார்கள். 

அன்னியப் பெண்களிடம் வந்து செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இந்த விசயத்தில் சமுதாயத்திற்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். 

எந்த ஒரு கட்டளையிட்டாலும் அதை முதலில் நபி (ஸல்) அவர்கள் கடைபிடிப்பவர்களாக இருந்தார்கள். இந்நிலையில் சமுதாயத்திற்குத் தான் செய்த உபதேசங்களை மீறக் கூடியவர்களாக ஒரு போதும் நபி (ஸல்) அவர்கள் இருக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (அந்நியப்) பெண்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் துôதரே கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : புகாரி (5232)

கணவனாகவோ அல்லது திருமணம் முடிக்கத் தகாத உறவினராகவோ இருந்தாலே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணிடத்திலும் தங்குவது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (4036)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரும் (அன்னியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனென்றால் (தனித்திருக்கும் போது) ஷைத்தான் மூன்றாவது ஆளாக அவர்களுடன் உள்ளான். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அஹ்மத் (109)

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபி (ஸல்) அவர்களின் நன்னடத்தை குறித்து எதிரிகள் யாராலும் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் செய்த ஏதாவது ஒரு தவறு கிடைக்காதா? உடனே மக்களி.டம் பரப்பிவிடலாமே என்று துடித்துக் கொண்டிருந்தார்கள். 

நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கையில் எந்த அழுக்கையும் இவர்களால் காண முடியவில்லை என்பதால் அவர்களின் மீது ஒழுக்கம் அல்லாத வேறு விசயங்களில் இட்டுக் கட்டத் தொடங்கினார்கள். 

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் என்ற பெண்ணிடம் அடிக்கடி வந்து சென்று கொண்டு உம்மு ஹராமின் மடியில் படுத்து உறங்கினார்கள். உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்கு பேண் பார்த்து விட்டார்கள் என்ற நிகழ்வு உண்மையாக இருந்தால் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விமர்சிப்பதற்கு இந்நிகழ்வு எதிரிகளுக்கு கிடைத்த வலுவான ஆதாரமாக இருந்திருக்கும். 

இதை வைத்து நபியவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்ததாக எந்த நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. இது போன்ற சம்பவம் நடக்கவில்லை என்பதால் இதைப் பற்றி எதிரிகளும் பேசவில்லை. 

முரண்பாடுகள். 

நபி (ஸல்) அவர்கள் தவறான நடத்தை உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதைக் காட்டுகின்ற இந்த ஹதீஸ் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு மாற்றமாக இருப்பதினால் இந்த ஒரு அளவுகோலே இது தவறான செய்தி என்பதற்குப் போதுமான சான்றாகும். 

இதில் காணப்படுகின்ற முரண்பாடுகள் இந்த ஹதீஸ் பொய்யானது என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது. 

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் தன் தலையை வைத்ததாக முஸ்லிமில் (3536) வது செய்தி கூறுகிறது. உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் உறங்கியதாக புகாரியில் (2800) வது செய்தி கூறுகிறது. 

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களுக்கு மனைவியாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராமிடம் வந்து உறங்கியதாக புகாரியில் இடம்பெற்றுள்ள 7002 வது செய்தி கூறுகிறது. இந்நிகழ்வு நடந்த பிறகு தான் உபாதா (ரலி) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களை மணந்து கொண்டதாக முஸ்லிமில் இடம்பெற்றுள்ள 3536 வது செய்தி கூறுகிறது. 

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் மடியில் படுத்துக் கொண்டிருந்த நிலையில் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டு பேண் பார்த்ததாக முஸ்லிமில் (3535) வது செய்தியும் (3535) வது செய்தியும் கூறுகிறது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் உறங்கும் போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தன் தலையை கழுவிக் கொண்டிருந்ததாக அபூதாவுதில் இடம் பெற்றுள்ள 2131 வது செய்தி கூறுகிறது. 

கருத்துப் பிழை. 

இந்த ஹதீஸ் குர்ஆனிற்கும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதோடு இதில் சொல்லப்பட்ட சிறப்புகளைக் கவனிக்கும் போது இட்டுக்கட்டப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. 

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் இரண்டு கூட்டத்தார்களைச் சிறப்பித்துச் சொல்கிறார்கள். அவர்களில் முதல் வகையினர் கடல்வழியாகப் பிரயாணம் செய்து போர் புரிபவர்கள். இவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் கூட்டத்தார்கள் என்று ஹதீஸிலே சொல்லப்பட்டுள்ளது. 

இரண்டாவது வகையினர் சீசருடை நகரத்தை நோக்கி போ ர்புரிவார்கள் என்று சொல்லப்படுகிறது. முதன் முதலில் சீசருடைய நகரத்தை நோக்கி போர்புரிந்தவர் முஆவியா (ரலி) அவர்களின் மகன் யசீத் ஆவார். தந்தை மகன் ஆகிய இருவரைப் பற்றி சிறப்பித்து இங்கு சொல்லப்படுகிறது. 

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதனால் இயக்க வெறிபிடித்தவர்கள் தங்களுடைய தலைவரைப் போற்றியும் எதிராளியை இகழ்ந்தும் ஹதீஸ்களை இட்டுக்கட்ட ஆரம்பித்தார்கள். இதனால் தான் ஹதீஸ்கள் தொகுக்கப்பட வேண்டிய நிலை வந்தது. 

இந்த ஹதீஸ் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதினால் முஆவியா (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் இயக்கவெறி பிடித்தவர்கள் முஆவியாவையும் யஸீதையும் சிறப்பித்துச் சொல்வதற்காக இதை நபி (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டிக் கூறியிருக்க அதிக வாய்ப்புள்ளது. 

முஆவியா மற்றும் யஸீத் ஆகிய இருவரின் படையுடன் இணைந்து கொண்டால் அவர்கள் வெற்றியடைவார்கள் என்றக் கருத்து தான் இந்த ஹதீஸில் சொல்லப்படுகிறதே தவிர மார்க்கம் வ-யுறுத்திய எந்த ஒரு நல்ல செயலையும் இந்த ஹதீஸ் சிறப்பித்துக் கூறவில்லை. 

அடிப்படையற்ற விளக்கம்.

இந்தச் செய்தியை சரிகாணுவதற்காக சிலர் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி தாயாக இருந்தார்கள் என்றும் தாய் அல்லது தந்தை வழியில் பால்குடி அன்னையாக இருந்தார்கள் என்றும் விளக்கம் தருகிறார்கள். 

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் விதிவிலக்காக இந்நிகழ்வை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கம் தருகிறார்கள். 

நமது விளக்கம்.

இவர்கள் கூறுவது போல் உண்மை நிலை இருந்தால் முதலில் இந்த விளக்கத்தை ஏற்று இதை சரிகாணுபவர்கள் நாமாகத் தான் இருப்போம். ஆனால் உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்கு சிற்றன்னையாக இருந்தார்கள் என்ற விளக்கத்தை யார் எப்படி கூறினார் என்று பார்த்தால் இந்த விளக்கம் அடிப்படையற்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம். 

இப்னு அப்தில் பர் என்பவர் இந்த விளக்கத்தைப் பின்வருமாறு கூறுகிறார். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால் புகட்டியிருப்பார்கள். இதனால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி அன்னையானார்கள் என்று நான் யூகிக்கிறேன். .

நூல் : தம்ஹீத் பாகம் : 1 பக்கம் : 226

இந்த ஹதீஸை சரிகாணுவதற்காக யூகமாக சொல்லப்பட்ட விளக்கம் தான் இது என்பதை மேலுள்ள வாசகம் தெளிவாக கூறுகிறது. எந்தச் சான்றும் இல்லாமல் யூகமாக இந்த விளக்கம் சொல்லப்பட்டதால் இதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

இமாம் இப்னு ஹஜர் அவர்களும் திம்யாதீ என்ற அறிஞரும் இப்னு அப்தில் பர் கூறுகின்ற இந்த விளக்கத்தை சுட்டிக்காட்டி மறுத்துள்ளார்கள். 

எனவே தான் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸை மையமாக வைத்து ஒரு அன்னியப் பெண் விருந்தினருக்கு பணிவிடைகளை செய்யலாம் என்று சட்டம் கூறியுள்ளார். திம்யாதீ என்ற அறிஞரும் இப்னு அப்தில் பர் கூறிய இந்த விளக்கத்தைக் கடுமையாக எதிர்கிறார். 

ஏனென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு பால்புகட்டிய தாய்மார்கள் யார் யார் என்று வரலாற்று நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அன்சாரி குலத்தைச் சார்ந்தவர்கள். அன்சாரி குலத்தைச் சார்ந்த பெண்களில் அப்துல் முத்தலிபின் தாயாரான சல்மா என்பவரைத் தவிர வேறு யாரும் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி அன்னையர் கிடையாது. 

சல்மாவிற்கும் உம்மு ஹராமிற்கும் மத்தியிலாவது நெருங்கிய உறவு உண்டா என்றால் இல்லை. இருவரும் மிக மிக தொலைவில் பல பாட்டனார்களைக் கடந்து தூரத்து உறவினராக உள்ளார்கள். சல்மா அவர்களுடன் உம்மு ஹராம் பெற்றிருந்த தூரத்து உறவினால் நபி (ஸல்) அவர்களுக்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள் திருமணம் முடிக்கத் தடையானவர்களாக ஆக மாட்டார்கள். 

உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இமாம் இப்னு ஹஜர் இமாம் தஹபீ இன்னும் பலர் பதிவு செய்திருக்கிறார்கள். இமாம் திர்மிதியும் (1569) வது ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு உம்மு ஹராமைப் பற்றி பேசுகிறார். 

இவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது இவர் உம்மு சுலைம் என்பாரின் சகோதரி உபாதா என்பாரின் மனைவி அனஸ் (ரலி) அவர்களின் சிற்றன்னை என்று தான் குறிப்பிடுகிறார்களே தவிர நபியவர்களின் பால்குடி தாய் என்று அவர்கள் சொல்லவே இல்லை. 

உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி தாயாக இருந்திருந்தால் அதைத் தான் முதலில் இவர்கள் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் எந்த வரலாற்றுப் புத்தகத்திலும் உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களின் தாய் என்ற விளக்கம் கூறப்படவே இல்லை. 

இந்த ஹதீஸை சரிகாணுவதற்கு எதிர்த் தரப்பினர்கள் கூறிய முரண்பட்ட விளக்கங்களைக் கவனித்தாலே அது ஆதாரமற்றது என்று எளிதில் உணர்ந்து கொள்ளலாம். உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி தாய் என்று கூறுவதோடு இச்சட்டம் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது என்ற விளக்கத்தையும் இணைத்துக் கூறுகிறார்கள். 

நபி (ஸல்) அவர்களின் பால்குடி அன்னையாக உம்மு ஹராம் இருக்கும் போது இச்சட்டம் அவர்களுக்கு மட்டும் உரியது என்று கூறுவது அர்த்தமற்றது. பால்குடி தாயாக இருந்தால் யார் வேண்டுமானாலும் தன் பால்குடி தாயிடம் சென்று வரலாம். இதில் நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் விதிவிலக்குத் தருவதற்கு எந்த அவசியமும் இல்லை. 

இந்த ஹதீஸைச் சரிகாணுவதற்கு எதையெல்லாம் சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் ஆதராமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்த விளக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த ஹதீஸை நிலைநாட்டப் பார்க்கிறார்களே தவிர ஆதாரத்தை வைத்து நிலைநாட்டுவதற்கு முயற்சிக்கவில்லை.

குர்ஆன் ஹதீஸில் தெளிவாகவோ அல்லது மறைமுகமாகவோ விதிவிலக்கு என்று சொல்லப்படாமல் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது எல்லோருக்கும் உரியது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். விதிவிலக்கு என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்குரிய ஆதாரத்தைக் காட்டாத வகையில் அவர்கள் விளக்கம் எடுபடாது. 

இந்த அடிப்படையை ஏற்காவிட்டால் அவரவர் தன் இஷ்டத்திற்கு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக வரும் செய்திகளை அவர்களுக்கு மட்டும் உரியது என்று வாதிடுவார்கள். மொத்தத்தில் நபியவர்களின் வழிமுறை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு விடும். 

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை என்று இவர்கள் கூறும் விளக்கத்தை மறுத்த அறிஞர்களும் இருக்கிறார்கள். காளீ இயாள் என்பவரும் திர்மிதிக்கு விரிவுரை எழுதிய அப்துர் ரஹ்மான் முபாரக்ஃபூரீ என்பரும் இந்த விளக்கத்தை மறுத்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்ற இவர்களின் வாதத்தை இந்த ஹதீஸில் பொருத்தினாலும் இதில் உள்ள சிக்கல்கள் நீங்காது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பெண்களின் கையைக் கூட தொட்டதில்லை. பெண்கள் விசயத்தில் மிகவும் பேணுதலாக நடந்து கொண்டார்கள். 

அன்னியப் பெண்களிடம் பழகுவதற்கு நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் பைஅத் செய்ய வந்த பெண்களின் கைகளை நான் தொட மாட்டேன் என்று அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக கையைத் தொட்டு பைஅத் செய்திருப்பார்கள். 

ஒரு புறம் நபி (ஸல்) அவர்களிடம் இப்படிப்பட்ட உயர்ந்த குணங்கள் இருக்க இன்னொரு புறம் இதற்கு மாற்றமாக அன்னியப் பெண்களுடன் பழகும் வழக்கம் இருந்தது என்று கூறுவது முரண்பாடானது. 

எதில் சலுகை தர வேண்டும் என்பதைக் கூட இந்த அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒரு அசிங்கமான காரியத்தைச் செய்வதில் நபி (ஸல்) அவர்களுக்கு சிறப்புச் சலுகை உண்டு என்று கூறினால் இவ்விளக்கம் மேலும் மேலும் நபியவர்களுக்கு இழிவை ஏற்படுத்துமே தவிர ஒரு போதும் இழிவைத் துடைக்காது. 

எனவே நபி (ஸல்) அவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் இந்த ஹதீஸை அவர்களைக் கடுமையாக நேசிக்கும் எந்த ஒரு முஃமினும் நம்ப மாட்டான். நம்பக் கூடாது. 

மூஸா (அலை) வானவரை தாக்கினார்களா?

moosaalai

உயிர் பறிக்கும் மலக்கு ஒருவர் மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்த போது மூஸா (அலை) அவர்கள் வானவர் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய் இறைவா மரணிக்க விரும்பாத ஒரு அடியானிடம் நீ என்னை அனுப்பி விட்டாய் என்றார். பிறகு அல்லாஹ் அவரது கண்ணைச் சரிபடுத்திவிட்டு அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி அவரது கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை வருடங்கள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும் என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறிய போது) மூஸா (அலை) இறைவா அதற்குப் பிறகு? எனக் கேட்டதும் அல்லாஹ் பிறகு மரணம் தான் என்றான். உடனே மூஸா (அலை) அவர்கள் அப்படியானால் இப்பொழுதே (தயார்) எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும் போது நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஷா (அலை) அவர்களது கப்ரைக் காட்டியிருப்பேன் எனக் குறிப்பிட்டார்கள். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (1339)

மூஸா (அலை) அவர்களிடம் மரணத்தின் வானவர் வந்து உங்களது இறைவனுக்கு பதில் தாருங்கள் என்று கூறினார். அப்போது மூஸா (அலை) அவர்கள் மரணத்து வானவரின் கண்ணில் அடித்து கண்னை பிதுங்கச் செய்து விட்டார். எனவே அந்த வானவர் அல்லாஹ்விடம் சென்று மரணத்தை விரும்பாத உனது அடியானிடம் என்னை நீ அனுப்பி விட்டாய். அவர் என் கண்னை பிதுங்கச் செய்து விட்டார் என்று கூறினார். அல்லாஹ் அவருக்குக் கண்ணைத் திரும்பக் கொடுத்து என்னுடைய அடியானிடம் சென்று நீ வாழ்வதையா விரும்புகிறாய்? நீ வாழ்வதை விரும்பினால் ஒரு மாட்டின் முதுகில் உனது கையை வை. உனது கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை வருடங்கள் நீர் உயிர் வாழலாம் என்று சொல்லுங்கள் எனக் கூறினான். (இதை வானவர் கூறிவிட்டவுடன்) மூஸா (அலை) இறைவா அதற்குப் பிறகு? எனக் கேட்டதும் பிறகு மரணம் தான் என்று அல்லாஹ் கூறினான். உடனே மூஸா (அலை) அவர்கள் அப்படியானால் இப்பொழுதே (தயார்) எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறும் போது நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஷா (அலை) அவர்களது கப்ரைக் காட்டியிருப்பேன் எனக் குறிப்பிட்டார்கள். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (4375)

மேலுள்ள ஹதீஸ்களைத் தெளிவாகப் படித்தால் தான் பின்னால் நாம் சொல்லப் போகின்ற கருத்துக்கள் புரியும். இந்த ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுவதால் நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறோம். 

1. மூஸா நபியின் உயிரைக் கைப்பற்றுவதற்குரிய நேரம் வந்த போதும் மூஸா (அலை) அவர்கள் ஒத்துக் கொள்ளாததால் அல்லாஹ் மூஸா நபிக்கு ஆயுளை நீட்டிக் கொடுத்தான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் அல்லாஹ் ஏற்படுத்திய காலக்கெடு வந்துவிட்டால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உடனே உயிர்கள் கைப்பற்றப்பட்டு விடும் என்று குர்ஆன் கூறுகிறது. 

“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் (10 : 49)

அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (63 : 11)

2. அல்லாஹ் ஒன்றை தீர்ப்பளித்து விட்டால் அதை ஏற்றுக் கொள்வது ஒரு முஃமினின் மீது கடமை. இறைவன் அளித்த தீர்பபை நிராகரித்ததோடு அத்தீர்ப்பைக் கொண்டு வந்த தூதரையும் தாக்குவது இறைத் தூதரின் பண்பாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல் இறை நிராகரிப்பில் தள்ளிவிடும். 

மூஸா (அலை) அவர்கள் இந்த தாக்குதலை நிகழத்திய பிறகு அல்லாஹ் தனது முடிவை மாற்றிக் கொண்டு அவகாசம் அளித்தான் என்று முற்றிலும் இறைத் தன்மைக்கு மாற்றமான கருத்தை இந்த ஹதீஸ் சொல்கிறது. இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் பொருந்தாத தன்மைகள் இருப்பதாக இந்த ஹதீஸ் சொல்வதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. 

3. மூஸா (அலை) அவர்கள் மரணத்தை விரும்பாதவராக இருந்தார் என வானவர் அல்லாஹ்விடம் கூறியுள்ளார். மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஆயுளை நீட்டித் தந்த போது அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்று மூஸா கேட்கிறார். இதற்குப் பிறகு மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் இப்பவே எனது உயிரை எடுத்துக் கொள் என்று மூஸா கூறுகிறார். 

மரணமே இல்லாத வாழ்க்கையை எனக்குக் கொடுப்பதாக இருந்தால் கொடு. எப்படியும் நான் மரணித்தாக வேண்டும் என்று நினைத்தால் இந்த அவகாசம் எனக்கு வேண்டியதில்லை. இப்பவே உயிரை எடுத்துக்கொள் என்ற கருத்தில் மூஸா கூறியுள்ளார். இந்த வாக்கியங்கள் மூஸா (அலை) அவர்கள் கடுமையாக மரணத்தை வெறுத்தார்கள் என்று கூறுகிறது.

மரணிக்கவே கூடாது என்று பேராசைப்படுவது நிச்சயமாக இறைத் தூதரான மூஸா (அலை) அவர்களின் குணமாக இருக்க முடியாது. மாறாக யூதர்கள் இவ்வாறு விரும்பியதாகக் குர்ஆன் கூறுகிறது. 

மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப்படுவது வேதனையிலிருந்து அவரைத் தடுக்கக் கூடியதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் (2 : 96)

அற்பமான இந்த உலக வாழ்க்கையை விட மறுமையின் வாழ்வே உண்ணதமானது என்று நன்கு உணர்ந்தவர்கள் நபிமார்கள். அல்லாஹ்விடத்தில் மாபெரும் சிறப்பைப் பெற்றிருந்த மூஸா நபிக்காக பல இன்பங்களை அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கும் போது இதை அனுபவிப்பதை விட்டுவிட்டு அற்பமான இந்த உலகத்தில் வாழ்வதை மூஸா (அலை) அவர்கள் தேர்வு செய்திருக்க மாட்டார்கள். 

4. அல்லாஹ்வின் தூதர்களை இழிவுபடுத்துகின்ற வேலைகளை ஃபிர்அவ்ன் அபூ ஜஹ்ல் ஷைபா உத்பா போன்ற கொடியவர்கள் தான் செய்தார்கள். அத்தூதர்களைப் பொருட்படுத்தாமல் அவர்கள் கொண்டு வந்த அல்லாஹ்வின் கட்டளைகளைத் தூக்கிவீசினார்கள். தூதர்களைக் கொடுமைப்படுத்தினார்கள்.

உறுதி மிக்க தூதர் என்று இறைவனால் சிலாகித்துச் சொல்லப்படும் மூஸா (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதுவரான வானவரை இழிபடுத்தி அவர் கொண்டு வந்த கட்டளையைத் தூக்கி வீசினார் என்று சொன்னால் ஃபிர்அவ்னிற்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகிவிடும். பொறுமையின் சிகரமாய்த் திகழ்ந்த மூஸா (அலை) அவர்கள் ஒரு போதும் ஃபிர்அவ்ன் செய்த காரியத்தைச் செய்திருக்க மாட்டார்கள். 

5. உனது இறைவனுக்கு பதிலளி என்று கூறிய வானவரை மூஸா (அலை) அவர்கள் தாக்கியுள்ளார்கள். வஹீயைக் கொண்டு வந்த அப்பாவி மலக்கை நாசப்படுத்தும் செயலை மூஸா நபி செய்தார்கள் என்று இச்செய்தி கூறுகிது. அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டுவரும் வானவரை அடிப்பது அல்லாஹ்வை அவமதிக்கும் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

வந்தவரிடத்தில் தான் வாழ விரும்புவதாக பக்குவமாக எடுத்துச் சொல்லியிருக்கலாம். எடுத்த எடுப்பிலே கண் பிதுங்குகின்ற அளவிற்கு மூஸா (அலை) அவர்கள் அடித்தார்கள் என்று மூஸா (அலை) அவர்களை வேட்டையாடும் மிருகத்தைப் போல் இச்சம்பவம் சித்தரிக்கிறது. அல்லாஹ்வின் தூதர்களான வானவர்களைப் பகைத்துக் கொள்பவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.

அல்குர்ஆன் (2 : 98).

6. இறைவனிடத்தல் கடுமையான ஒப்பந்தத்தை எடுத்தவராகவும் நல்ல பண்புள்ளவராகவும் தான் மூஸா (அலை) அவர்கள் இருந்தார்கள். இக்கோரத் தன்மைக்கு முற்றிலும் அப்பாற்பட்டவராக தூயவராகத் திகழ்ந்தார்கள்.

இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் தேர்வு செய்யப் பட்டவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார். தூர் மலையின் வலப் பகுதியிலிருந்து அவரை அழைத்தோம். (நம்மிடம்) பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம்.

அல்குர்ஆன் (19 : 51)

நபிமார்களிடம் குறிப்பாக உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதி மொழியை நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக! உண்மையாளர்களை அவர்களது உண்மை பற்றி விசாரிப்பதற்காக அவர்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்தோம். (தன்னை) மறுப்போருக்கு அவன் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் (33 : 7)

நம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொந்தரவு கொடுத்தோர் போல் ஆகி விடாதீர்கள்! அவர்கள் கூறியதிலிருந்து அவரை அல்லாஹ் நீக்கினான். அல்லாஹ்விடம் அவர் தகுதியுடையவராக இருந்தார்.

அல்குர்ஆன் (34 : 69)

இஸ்ரவேலர்கள் மூஸா நபியின் மீது அவதூறு கூறி அவர்களைத் துன்புறுத்தியதைப் போல் நமது சகோதரர்கள் அறியாமல் இந்தச் சம்பவத்தைக் கூறி மூஸா (அலை) அவர்களைக் கேவலப்படுத்துகிறார்கள். இந்த நிகழ்வை நம்புவது மூஸா (அலை) அவர்களுக்கு நோவினையை ஏற்படுத்தியதாக அமையும்.

7. மலக்குமார்கள் அல்லாஹ் இட்ட கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றக் கூடியவர்கள். இதற்குத் தகுந்தவாறு வலிமையான படைப்பாக அவர்களை அல்லாஹ் படைத்திருக்கிறான். குறிப்பாக உயிரை வாங்க வரும் மலக்கு மிக வலிமையுள்ளவராக இருக்க வேண்டும். மலக்குமார்கள் இறைவன் இட்டக்கட்டளைகளை முழுமையாக செயல்படுத்துபவர்கள் என்றும் வலிமையானவர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆனால் இந்த ஹதீஸ் உயிரை வாங்குமாறு அல்லாஹ் இட்ட கட்டளையை மலக்கால் செய்ய முடியவில்லை. மூஸா நபியின் தாக்குதலால் கண் பிதுங்கும் அளவிற்கு பலவீனமானவராக மலக்கு இருந்தார் என்று கூறுகிறது. 

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப் பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் (6 : 61)

அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

அல்குர்ஆன் (21 : 27)

தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

அல்குர்ஆன் (16 : 50)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் (66 : 6)

உயிரை வாங்கவரும் மலக்கு மனிதனின் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடியவராக இருந்தால் அவரால் எப்படி உயிர் வாங்கும் பனியைச் செய்யமுடியும்?. ஒரு அடியில் கண்ணை இழப்பதற்கு வானவர் பச்சைக் குழந்தையைப் போன்ற உடலமைப்புக் கொண்டவரா? 

பாதிப்படைந்த கண்ணை மலக்கால் சரி செய்ய முடியவில்லை. கண்ணை இழந்த அவருக்கு அல்லாஹ் தான் திரும்பவும் கண்னைக் கொடுத்தான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.. 

மலக்குகள் உயிர் வாங்குவதற்கு வரும் போது மலக்குகளை மனிதர்கள் தாக்கி அவர்களின் உறுப்புக்களைச் சேதப்படுத்தினால் அவர்கள் அல்லாஹ்விடம் சென்று மீண்டும் உறுப்புக்களைப் பெற்றுவிட்டு திரும்ப உயிர் வாங்க வருவார்களா? மலக்கை விட மூஸா (அலை) அவர்கள் வலிமையான படைப்பா? 

இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னால் வரை உயிர் வாங்கும் மலக்குமார்கள் மனிதனுடைய கண்களுக்குத் தெரியும் வகையில் வந்தார்களாம். மூஸா மலக்கை அடித்து கண்ணை எடுத்து விட்டதால் இதற்குப் பிறகு மறைமுகமாக வந்து உயிரை கைப்பற்றினார்களாம். இவ்வாறு அஹ்மதில் (10484) என்ற எண்ணில் இடம்பெற்ற செய்தி கூறுகிறது. 

மனிதன் தான் தாக்குதல்களுக்குப் பயந்து ஒளிந்து மறைந்து வருவான். வ-மையான படைப்பாக விளங்கும் மலக்குமார்கள் இந்த விபத்திற்கு பயந்து தங்களது போக்கையே மாற்றுகிறார்கள் என்று கூறுவது அவர்களைப் பலவீனத்திலும் பலவீனமானவர்கள் என்று சித்தரிக்கிறது. 

மலக்குமார்கள் உயிரைக் கைப்பற்றும் போது கண்ணிற்குத் தெரிகின்ற விதத்தில் வருவதில்லையே? அப்படியிருக்க மூஸா (அலை) அவர்களிடத்தில் கண்ணிற்குத் தெரியும் விதத்தில் வானவர் எப்படி வந்திருக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறது. 

இந்தக் கேள்வி வரக் கூடாது என்பதற்காக மூஸா (அலை) அவர்கள் வானவரை அடிப்பதற்கு முன்பு வானவர்கள் கண்ணிற்குத் தெரிகின்ற வகையில் வந்தார்கள். மூஸா தாக்கிய பின்பு அவ்வாறு வராமல் மறைமுகமாக வர ஆரம்பித்து விட்டார்கள் என்ற விளக்கம் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

மலக்குமார்களை முற்றிலும் மனிதர்களைப் போல் மனிதர்களை விட கீழ்நிலையில் சித்தரிக்கும் இச்சம்பவம் பொய்யிலும் பெரும் பொய் என்பதை அறிந்து கொள்ள பெரிய ஆய்வு ஒன்றும் வேண்டியதில்லை. 

அதிகாரம் இறைவனுக்கே.

நபிமார்கள் சிறிய சிறிய தவறுகளை செய்தால் கூட அதை அல்லாஹ் அவர்களுக்குச் சுட்டிக்காட்டாமல் இருந்ததில்லை. யூனுஸ் நபி இறைவனின் மீது கோபித்த போது அவர்களை அல்லாஹ் மீன் வயிற்றில் சிறை வைத்தான். நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) அவர்களிடம் முகத்தை சுழித்துக் கொண்டதற்கு அவர்களைக் கண்டித்து குர்ஆனில் வசனத்தை இறக்கினான். தன்னுடைய அதிகாரத்தைக் கையில் எடுக்கும் சாயல் கூட இறைத் தூதர்களிடத்தில் இருக்கக் கூடாது என்றே அல்லாஹ் விரும்புகிறான். 

இதையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவரின் கண்ணை மூஸா (அலை) அவர்கள் பிடுங்கியிருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிக்கவில்லை. கண்டிக்கவில்லை. மாறாக இன்னும் அதிக வருடம் வாழ்வதற்கான ஏற்பாடுகளை உருவாக்கிக் கொடுத்தான் என்று நம்பினால் இறைவன் தன்னுடைய அதிகாரத்தை மூஸா (அலை) அவர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாகவும் மூஸாவிற்குப் பயந்து தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் பொருள்படும். 

எந்தக் காலகட்டத்திலும் தன் அதிகாரத்தில் பிறர் தலையிடுவதை அல்லாஹ் அங்கீகரிக்கவே மாட்டான். இறைவனைத் தாழ்த்தி மூஸா (அலை) அவர்களை உயர்த்தும் இந்த ஹதீஸ் ஏகத்துவக் கொள்கைக்கு எதிரானது. 

அவர்களின் விளக்கம்.

இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண் அல்ல என்று வாதிடக் கூடியவர்கள் நாம் கூறிய முழுமையான விமர்சனங்களுக்கு பதில் சொல்லவில்லை. ஒன்றிரண்டு பொருந்தாத விளக்கத்தை மட்டும் இதற்குக் கூறுகிறார்கள்.

அவர்களின் விளக்கம்.

மலக்குமார்கள் மனித வடிவத்திலும் நபிமார்களிடத்தில் வருவதுண்டு. இப்ராஹிம் (அலை) அவர்கள் மற்றும் லூத் (அலை) அவர்களிடத்தில் மலக்குமார்கள் மனித வடிவில் வந்ததால் அவ்விருவரால் வந்தவர் மலக்கு என்று அறிந்துகொள்ள முடியவில்லை. இது போன்று வந்தவர் வானவர் தான் என்று மூஸா நபிக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். 

நமது விளக்கம்.

லூத் (அலை) மற்றும் இப்ராஹிம் (அலை) அவர்களிடம் மலக்குமார்கள் மனிதவடிவில் இறைத் தூதர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு வந்தது உண்மை தான். இந்தத் தோற்றத்தில் வானவர்கள் வரும் போது இப்ராஹிம் மற்றும் லூத் (அலை) அவர்கள் ஒருவிதமான பயத்தை உணருகிறார்கள். 

பிரச்சனை ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காக மனித வடிவில் வந்த வானவர்கள் தாங்கள் வானவர்கள் தான் என்று இறைத் தூதர்களுக்குத் தெளிவுபடுத்தி விடுகிறார்கள். அப்படி அவர்கள் தெளிவுபடுத்தினால் தான் வானவர்கள் வந்த வந்த நோக்கமும் நிறைவேறும். 

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். தாமதமின்றி பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். “பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்” என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் (11 : 69)

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களால் கவலைக்கும், மன நெருக்கடிக்கும் உள்ளானார். அதற்கவர்கள் “நீர் பயப்படாதீர்! கவலைப்படாதீர்! உம்மையும் உமது மனைவியைத் தவிர ஏனைய உமது குடும்பத்தினரையும், நாங்கள் காப்பாற்றுவோம். (அழிவோருடன்) அவள் தங்கி விடுவாள்” என்றனர்.

அல்குர்ஆன் (29 : 33)

“லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?” என்றனர்.

அல்குர்ஆன் (11 : 81)

அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் (மர்யம்) போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். “நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று (மர்யம்) கூறினார். “நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் (19 : 17)

வானவர்கள் மனித வடிவில் வரும்போதெல்லாம் தங்களை அறிமுகப்படுத்தாமல் இருந்ததில்லை என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகிறது. நபிமார்கள் அச்சத்தை உணரும் போது அவர்களுக்கு ஏற்பட்ட அந்தச் சந்தேகத்தை வானவர்கள் அகற்றுகிறார்கள். இவ்வாறு செய்தால் தான் வானவர்கள் எந்த நோக்கத்திற்காக வந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறும். 

வந்தவர் வானவர் என்று மூஸா (அலை) அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அதை அந்த வானவர் ஏன் தெளிவுபடுத்தவில்லை?. வானவரைத் தாக்குவதற்கு மூஸா (அலை) அவர்கள் முற்படும் போதாவது வானவர் தெளிவுபடுத்தியிருக்கலாம். அல்லது தாக்கியதற்குப் பிறகாவது மூஸாவிற்கு தன்னை அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் வானவர் அவ்வாறு செய்யவில்லை. 

இறைத்தூதைக் கொண்டு வரும் வானவருக்கு இந்த ஒரு சாதாரண விஷயம் கூட தெரியாமல் போயிற்றா? எனவே மூஸா நபிக்கு வானவரைத் தெரியாது என்ற வாதத்தை வைத்தால் வானவர் தூதுச் செய்தியை முறையாகக் கொண்டு வரவில்லை என்று அர்த்தமாகும். இதுவும் குர்ஆனிற்கு முரணான விளக்கம் தான். 

வானவர்கள் தெளிவுபடுத்தாமலும் சில நேரங்களில் இறைத்தூதர்கள் வானவர்களை அறிந்து கொள்வார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களிடம் மனித வடிவில் வந்து இஸ்லாம் ஈமான் போன்ற இஸ்லாத்தின் கொள்கையை சொல்லித் தருகிறார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் தன்னை வானவர் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை. ஏனென்றால் அவர்கள் வானவர் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். இந்த ஹதீஸ் முஸ்லிமில் (5) வது செய்தியாக இடம்பெற்றுள்ளது. 

இந்த அடிப்படையில் மூஸா (அலை) அவர்களிடம் வந்த வானவர் தன்னை மூஸா தாக்கியதற்குப் பிறகும் ஏன் அறிமுகம் செய்யவில்லை என்றால் மூஸா தன்னை வானவர் என்று நன்கு தெரிந்து வைத்திருந்தார் என்பதினால் தான்.

அவர்களின் விளக்கம். 

மூஸா (அலை) அவர்கள் இயற்கையில் அதிக கோபம் கொள்பவராக இருந்தார்கள். இதனால் தான் ஒருவரை கொலை கூட செய்து விட்டார்கள். இதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. “இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி” என்றார்.

 அல்குர்ஆன் (28 : 15)

எனவே தன்னிடம் வந்தவர் மலக்கு என்று தெரியாமல் கோபப்பட்டு மூஸா (அலை) அவர்கள் வானவரைத் தாக்கியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். 

நமது விளக்கம்.

மூஸா (அலை) அவர்கள் கோப சுபாவம் கொண்டவர்களாக இருந்ததால் வானவரைத் தாக்கிவிட்டார் என்று காரணம் சொல்கிறார்கள். 

மூஸா நபியவர்கள் இயற்கையாகவே அதிகமாக கோபப்படுபவர்களாக இருந்தார்கள் என்ற விளக்கம் அவர்கள் மரணத்தை வெறுத்தார்கள் என்ற கருத்தையோ வானவரை இழிவுபடுத்தினார் என்பதையோ நீக்காது. படுமோசமான செயலைச் செய்ததற்கான காரணமாகத் தான் அமையும். எனவே இந்தக் காரணம் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள இழிச்செயல்களை வைப்பதற்கு உதவுமே தவிர அகற்றுவதற்கு உதவாது. 

மூஸா (அலை) அவர்கள் எதனால் கோபப்பட்டார்கள் என்பதற்கு எதிர்த் தரப்பினர் எந்தக் காரணத்தையும் கூறவில்லை. எவ்வளவு பெரிய கோபக்காரராக இருந்தாலும் அவருக்குக் கோபத்தை ஒருவர் ஏற்படுத்தினால் தான் கோபம் வரும். கோபத்தை ஏற்படுத்துகின்ற எந்தக் காரியத்தை செய்து மூஸா நபியவர்களுக்கு வானவர் கோபத்தை வரவழைத்தார்? உனது இறைவனுக்கு பதலளிப்பீராக என்று கூறுவது கண்ணைப் பிளக்கின்ற அளவிற்கு கோபத்தை ஏற்படுத்துகின்ற வார்த்தையா? 

பார்த்தவரையெல்லாம் அடிப்பதற்கு மூஸா நபி ஒன்றும் ரவுடி அல்ல. ஒருவர் நம்மிடம் வந்தால் கோபப்பட்டு கண் பிதுங்குகின்ற அளவிற்கு நாம் யாரையும் அடிக்க மாட்டோம். உலகத்தில் அக்கிரமக்காரன் கூட செய்யாத ஒரு பாவத்தை மூஸா (அலை) அவர்கள் செய்தார்கள் என்று கூற எப்படித் தான் இவர்களுக்கு மனது வந்தது என்று தெரியவில்லை.

ஹதீஸ்களின் முன் பின் வாசகங்களைக் கவனிக்கும் போது இந்த உலகத்தில் வாழ்வதற்காகத் தான் உயிரைக் கைப்பற்ற வந்த வானவரை மூஸா (அலை) அவர்கள் அடித்துத் துரத்தினார்கள் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி அறிந்து கொள்ளலாம். 

மூஸா தன்னைத் தாக்கியதற்கு என்ன காரணம் என்பதை அந்த வானவரே அல்லாஹ்விடம் சென்று தெளிவுபடுத்துகிறார். மரணத்தை விரும்பாத அடியானிடம் என்னை அனுப்பி விட்டாய் என்று அந்த வானவர் அல்லாஹ்விடம் சொல்கிறார். மூஸா நபியவர்கள் உயிரைக் கைப்பற்றவிடாமல் தடுப்பதற்காகத் தான் தன்னைத் தாக்கினார் என்று வானவர் முறையிடுகிறார். 

மூஸா (அலை) அவர்களுக்கு வானவர் என்று தெரியாமல் இருந்திருந்தால் அந்த வானவரிடம் அல்லாஹ் இப்படிச் சொல்லியிருப்பான். உன்னை ஏன் நீ மூஸாவிடம் அறிமுகப்படுத்தவில்லை. உன்னை தெரிந்து கொள்ளாத காரணத்தினால் தான் உன்னை அடித்து விட்டார். எனவே முதலில் நீ வானவர் என்று அவருக்கு கூறிவிட்டு உயிரை வாங்கி வா என்று கூறியிருப்பான். 

மாறாக இறைவனும் வானவருடைய பேச்சை அங்கீகரித்துக் கொண்டு நீண்ட நாட்கள் வாழ்வதற்குரிய வழியைச் சொல்லித் தருமாறு மலக்கிற்குக் கட்டளையிடுகிறான். மூஸா நபி என்ன நினைக்கிறார் என்பது கூட இறைவனுக்கு தெரியாமல் மூஸா நபி எதிர் பார்க்காததை மலக்கிடம் கொடுத்து இறைவன் அனுப்பினான் என்று சிந்தனையுள்ளவர்கள் கூற மாட்டார்கள். 

கண்ணைச் சரிசெய்து கொண்டு வானவர் மறுபடியும் மூஸா (அலை) அவர்களிடம் வந்த போது முதலில் அடித்ததைப் போல் இப்போதும் மூஸா (அலை) அவர்கள் ஏன் அடிக்கவில்லை? முதலில் வானவர் உயிரைக் கைப்பற்றுவதற்காக வந்ததால் மூஸா அடித்தார். இன்னும் பல வருடங்கள் வாழ்வதற்கான வழியை இரண்டாவது முறை மலக்கு கொண்டு வந்ததால் இரண்டாவது முறை வரும் போது அடிக்கவில்லை. இதைத் தான் அந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ள முடியும். 

மூஸா (அலை) அவர்கள் வானவர் என்று தெரியாமல் தான் அடித்தார்கள் என்று வைத்துக் கொண்டால் இரண்டாவது முறை வரும் போது முதலில் தான் செய்த பெரிய தவற்றுக்காக ஏன் அந்த மலக்கிடம் கூறி வருத்தம் தெரிவிக்கவில்லை? இவ்வளவு பெரிய மாபாதகச் செயல் மூஸா (அலை) அவர்களுக்கு குற்றமாகத் தெரியவில்லை என்று யாராலும் நம்ப முடியாது.

வாழ்வதை மூஸா நபியவர்கள் விரும்பாவிட்டால் அந்த வானவர் ஆயுள் நீட்டப்பட்ட செய்தியை மூஸா (அலை) அவர்களிடம் கூறும் போது இவ்வாறே மூஸா கூறியிருப்பார். நான் வாழ்வதற்கு விரும்புகிறேன் என்று உங்களிடம் நான் சொல்லவே இல்லை. பிறகு ஏன் வாழ்வதை நேசிக்கிறாயா என்று கேள்வி கேட்கிறீர்கள். இன்னும் பல வருடங்கள் வாழ்வதற்கு ஏன் வாய்ப்பளிக்கிறீர்கள்? என்றே கேட்டிருப்பார்கள். 

மரணத்தை வெறுத்ததாலும் வாழ்வதை நேசித்ததாலும் தான் இது போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்பவில்லை. இறைவன் கொடுத்த வருடங்கள் வாழ்ந்து முடிந்து விட்டால் அதற்குப் பிறகு நான் உயிருடன் இருப்பேனா? என்று அவர்கள் கேட்ட கேள்வி அவர்கள் கடுமையாக இந்த உலகத்தில் வாழ நேசித்தார்கள் என்பதையே காட்டுகிறது. 

எனவே மரணத்தை வெறுத்து வாழ்வதை நேசித்த காரணத்தினால் தான் மூஸா (அலை) அவர்கள் வானவரைத் தாக்கினார்கள் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. 

(20 : 40) (26 : 14) (28 : 15) (28 : 16) (28 : 19) ஆகிய வசனங்களில் மூஸா நபி ஒருவரைத் தவறுதலாகக் கொலை செய்த நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நடக்கும் போது அவர்கள் இறைத் தூதராக இருக்கவில்லை மேலும் கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் தாக்கவும் இல்லை என்பது இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 

 மூஸா (அலை) அவர்கள் இறைத்தூதராக ஆன பிறகு அவர்களின் நிலை வியத்தகு அளவில் அமைந்திருந்தது. நமது தூதர் நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களை சிலாகித்துச் சொல்லும் அளவிற்கு மூஸா நபியின் சமுதாயம் அவர்களுக்குக் கொடுத்த துன்பங்களை மூஸா (அலை) அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். பொறுமைக் கடலாய்த் திகழ்ந்த மூஸா (அலை) அவர்கள் முரடராக இருந்தார் என்று கூறுபவர்கள் அநியாயமாக ஒரு நபியின் மீது இட்டுக்கட்டிய குற்றத்திற்கு ஆளாகுவார்கள். 

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் நிச்சயம் இது அல்லாஹ்வின் திருமுகம் (திருப்தி) நாடப்படாத பங்கீடாகும் என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். (அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களுடைய முகத்தில் கண்டேன். பிறகு மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக. இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார். இருப்பினும் அவர் (பொறுமையுடன்) சகித்துக் கொண்டார் என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி (3405)

எனவே தூதுத்துவத்திற்கு முன்னால் தவறுதலாக நடந்த ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டு மூஸா (அலை) அவர்களை முரடராகச் சித்தரிப்பது அழகல்ல. நபியாக இருக்கும் போது மூஸா (அலை) அவர்கள் பொறுமைக் கடலாகத் திகழ்ந்துள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் மூஸா நபியைப் புகழ்ந்து சொல்கிறது. ஆனால் வானவரை அடித்ததாகக் கூறும் செய்தி நபியாக இருக்கும் போது மூஸா முரடராக இருந்தார் என்று இகழ்ந்துரைக்கிறது. 

ஹதீஸைப் பாதுகாப்பது தான் இவர்களது உண்மை நோக்கமாக இருந்தால் மூஸா நபி தெரிந்துகொண்டே தான் மலக்கை தாக்கினார். மரணத்தை அவர்கள் நேசிக்கவில்லை என்றே கூறுவார்கள். இவர்கள் ஹதீஸை நிலைநாட்டுவதாக எண்ணிக் கொண்டு மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெளிப்படையில் ஹதீஸைப் பாதுகாப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். 

விமர்சித்த அறிஞர்கள்.

இமாம் கஸ்ஸாலி அவர்கள் அஸ்ஸுன்னா என்ற தன்னுடைய நூலில் நாம் வைக்கின்ற கேள்விகளை முன்வைத்து இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் சொன்னது கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்த ஹதீஸில் உள்ள விகாரத்தைக் குறைப்பதற்காக பல அறிஞர்கள் முயற்சி செய்துள்ளார்கள். 

ஆனால் இவர்கள் கொடுத்துள்ள எந்த விளக்கமும் பொருத்தமானதாக இல்லை. எந்த விளக்கம் கொடுத்தாலும் இதில் உள்ள சிக்கலுக்கு முழுமையான முடிவைக் காணமுடியாது என்று நஸயீ நூலிற்கு விரிவுரை எழுதிய நூருத்தீன் அஸ்ஸனதீ என்பவர் குறிப்பிட்டுள்ளார். 

அபூமன்சூர் சஆலபீ அவர்களும் இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள். இப்னு ஹஜர் தஹபீ சூயூத்தி போன்றோர் தங்களது நூற்களில் இந்த அறிஞரின் கருத்துக்களைப் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த அறிஞர் ஸமாருல் குலூப் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு இந்த ஹதீஸை மறுக்கிறார். 

ثمار القلوب , جزء 1 – صفحة 53 

( لطمة موسى ) تضرب مثلا لما يسوء أثره وفى أساطير الأولين أن موسى سأل ربه أن يعلمه بوقت موته ليستعد لذلك فلما كتب الله له سعادة المحتضر أرسل إليه ملك الموت وأمره بقبض روحه بعد أن يخبره بذلك فأتاه فى صورة آدمى وأخبره بالأمر فما زال يحاجه ويلاجه وحين رآه نافذ العزيمة فى ذلك لطمه فذهبت منها إحدى عينيه فهو إلى الآن أعور وفيه قيل ( يا ملك الموت لقيت منكرا … لطمة موسى تركتك أعورا ) وأنا برىء من عهدة هذه الحكاية

மூஸா (அலை) அவர்கள் (மலக்கை) அடித்த சம்பவம் மோசமான தகவலுக்கு உதாரணமாகச் சொல்லப்படும். முன்னோர்களின் கட்டுக் கதைகளில் (பின்வருமாறு) இருக்கிறது. மரணத்திற்கு தயாராகிக் கொள்வதற்காக மூஸா தன்னுடைய இறைவனிடம் தான் மரணிக்கும் காலத்தை அறிவிக்குமாறு கேட்டார். மூஸா மரணித்தவுடன் வெற்றியடைவார் என்று அல்லாஹ் விதியாக்கிவிட்ட போது மூஸாவிடம் மரணத்தின் மலக்கை அனுப்பி அவரிடம் இந்தச் செய்தியை தெரிவித்த பின்பு அவரது உயிரைக் கைப்பற்றி வருமாறு மலக்கிற்கு அல்லாஹ் கட்டளையிட்டான். வானவர் மூஸாவிடம் மனிதவடிவில் வந்து விஷயத்தைக் கூறினார். தொடர்ந்து இருவரும் கடுமையாக விவாதித்துக் கொண்டும் தர்க்கித்துக் கொண்டும் இருந்தனர். இவ்விஷயத்தில் வானவர் தன்னை மிகைத்து விட்டதை மூஸா கண்ட போது வானவரை அடித்து விட்டார். இதனால் வானவரின் இரு கண்களில் ஒன்று போய் விட்டது. அவர் இன்று வரை ஒற்றைக்கண் கொண்டவராகவே இருக்கிறார். இது தொடர்பாக (பின்வரும் பாடல்) சொல்லப்பட்டுள்ளது. 

மரணத்தின் மலக்கே (உனது கூற்றை) மறுத்தவரை நீ சந்தித்தாய்

மூஸா அடித்த அடி உன்னை ஒற்றைக்கண் உள்ளவராக்கிவிட்டது.

இச்சம்வத்தை சஆலபீ அவர்கள் பதிவு செய்து விட்டு இச்சம்பவத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்.

எனவே அல்லாஹ்விற்கும் ரசூல்மார்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் இது போன்ற தகவல்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று ஒளிவு மறைவில்லாமல் கூறுவதே ஏற்புடையது. 

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சூனியத்தின் விளக்கம்.

sooniyathinvilakkam

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் உள்ளது. முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுள்ளவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். இது பில்லி சூனியம் ஏவல் செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது. 

ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும் என்பதை நாம் நம்பலாம். கண்கூடாக இதை நாம் காணுவதால் மார்க்க அடிப்படையில் இதற்கு ஆதாரத்தைத் தேட வேண்டியதில்லை. 

ஆனால் புறச்சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். 

திருக்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் இது பற்றி கூறுப்படுவது என்ன என்பதை நாம் மேலோட்டமாக பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது போல் அமைந்துள்ளன, இதன் காரணத்தினால் தான் அறிஞர்கள் இதிலே முரண்பட்டு நிற்கின்றனர். 

மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரு கருத்துக்களுக்கு இடம் இருப்பது போல் தோன்றினாலும் கவனமாக ஆராயும் போது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும். மக்களை ஏமாற்றுவதற்காகவும் கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம். உண்மையில் சூனியம் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை என்பது தான் சரியான முடிவாகும். 

சூனியம் என்பதற்கு அரபுமொழியில் சிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரண்டிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்ட பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பதற்கு பித்தலாட்டம் மோசடி ஏமாற்றும் தந்திர வித்தை என்பது தான் பொருள் என்பதைச் சந்தேகமின்றி அறிந்து கொள்ளலாம். 

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான். உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும் எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதமாகும். 

கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து அதைத் தொட்டுப் பார்த்தாலோ அல்லது சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாகவே இருந்தால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அது தந்திர வித்தை மேஜிக் என்று கூறுவோம். இறைத் தூதர்கள் செய்து காட்டியது முதல் வகையானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும் ஏமாற்றுதலும் கிடையாது. 

ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் வகையில் அற்புதங்களைச் செய்துகாட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக இவர் நமக்குத் தெரியாதவாறு தந்திரம் செய்கிறார். நம்மை ஏமாற்றுகிறார் என்று அவர்கள் நினைத்தனர். இதைக் குறிப்பிட ஸிஹ்ர் (சூனியம்) என்ற சொல்லையே பயன்படுத்தினர். 

ஸிஹ்ர் என்பதற்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள். இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார் என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறி நிராகரித்தனர். 

மூஸா நபியும் அவர்கள் செய்து காட்டிய அற்புதமும்.

மூஸா நபியவர்களுக்கு மகத்தான சில அற்புதங்களை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவற்றை ஏற்க மறுத்தவர்கள் அதை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறியே மறுத்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. 

அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.. “இவர் தேர்ந்த சூனியக் காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

அல்குர்ஆன் (7 : 107)

அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர். நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது “இது தெளிவான சூனியம்” (ஸிஹ்ர்) என்றனர். “உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.

அல்குர்ஆன் (10 : 75)

“நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்” என்று அவன் கூறினான். அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது. “இவர் திறமை மிக்க சூனியக்காரர்” (ஸிஹ்ர் செய்பவர்) என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். “தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?” (என்றும் கேட்டான்).

அல்குர்ஆன் (26 : 31)

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் (ஸிஹ்ரைத்) தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

அல்குர்ஆன் (28 : 36)

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். “பெரும் பொய்யரான சூனியக்காரர்” (ஸிஹ்ர் செய்பவர்) என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் (40 : 23)

மூஸா நபி கொண்டு வந்த அற்புதங்களை நிராகரிக்க ஸிஹ்ர் என்னும் சொல்லை அவர்கள் பயன்படுத்தியதிலிருந்து ஸிஹ்ர் என்றால் தந்திரம் தான். உண்மையில் ஏதும் நடப்பதில்லை என்று அறிந்து கொள்கிறோம். 

மூஸா நபியவர்கள் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்கான சான்றுகளை ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னனிடம் முன்வைத்தார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் உண்மை என்று நம்ப ஃபிர்அவ்ன் மறுத்தான். இது சூனியம் (தந்திர வித்தை) என்றான். இவரை விடச் சிறந்த தந்திரக்காரர்கள் தன் நாட்டில் இருப்பதாகக் கூறி மூஸா நபியைப் போட்டிக்கு அழைத்தான். மூஸா நபியவர்கள் அந்தப் போட்டிக்கு உடன்பட்டார்கள். இது பற்றி குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகிறது. 

“நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் (7 : 116)

அவர்கள் செய்தது சாதாரண சூனியமல்ல. மகத்தான சூனியம் என்று மேற்கண்ட வசனம் கூறுவதுடன் அந்த மகத்தான சூனியம் எதுவென்றும் தெளிவாகக் கூறுகிறது. மக்களின் கண்களை மயக்கினார்கள் என்ற சொற்றொடரின் மூலம் அவர்கள் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. மாறாக மக்களின் கண்களை ஏமாற்றினார்கள். மகத்தான சூனியத்தின் மூலம் செய்ய முடிந்தது இவ்வளவு தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். 

மற்றொரு வசனம் இதை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது. 

“இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

அல்குர்ஆன் (20 : 66)

அவர்கள் செய்தது மகத்தான சூனியமாக இருந்தாலும் கயிறுகளையும் கைத்தடிகளையும் சீறும் பாம்புகளாக அவர்களால் மாற்ற இயலவில்லை. மாறாக சீறும் பாம்பைப் போன்ற பொய்த் தோற்றத்தைத் தான் அவர்களால் ஏற்படுத்த முடிந்தது என்று இவ்வசனம் கூறுகிறது. மற்றொரு வசனத்தில் சூனியம் என்பது மோசடியும் சூழ்ச்சியும் தவிர வேறில்லை என்று கூறப்படுகிறது. 

“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)

அல்குர்ஆன் (20 : 69)

இவர்கள் செய்து காட்டியது சூனியக்காரனின் சூழ்ச்சி தான் என்று கூறுவதன் மூலம் சூனியம் என்பது தந்திர வித்தை தவிர வேறில்லை என்பதை அறிந்துகொள்ளலாம். 

ஈஸா நபியும் அவர்கள் செய்து காட்டிய அற்புதமும்.

மூஸா நபியைப் போலவே ஈஸா நபியும் அதிகமான அற்புதங்களை செய்து காட்டினார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைப் பார்த்த பின்னரும் அதை உண்மை என்று அவரது சமுதாயத்தினர் நம்பவில்லை. இவர் ஏதோ தந்திரம் செய்கிறார் என்று தான் நினைத்தனர். இவர் ஸிஹ்ர் (தந்திரம்) செய்கிறார் என்று கூறி நிராகரித்து விட்டனர்.

“மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி (ஸிஹ்ரேயன்றி) வேறில்லை” என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக! 

அல்குர்ஆன் (5 : 110)

“இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது “இது தெளிவான சூனியம்” (ஸிஹர்) எனக் கூறினர்.

அல்குர்ஆன் (61 : 6)

நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும்.

நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று நிரூபிப்பதற்காக இறைவன் வழங்கிய சில அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். மாபெரும் அற்புதமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனையும் மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்கள். அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களை ஏற்க மறுத்த எதிரிகள் அவற்றை ஸிஹ்ர் (சூனியம்) என்று கூறினார்கள். 

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும்.”இது வெளிப்படையான சூனியத்தைத் (ஸிஹ்ரைத்) தவிர வேறு இல்லை” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.

அல்குர்ஆன் (6 : 7)

“மக்களை எச்சரிப்பீராக” என்றும், “நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக” என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? “இவர் தேர்ந்த சூனியக்காரர்” (ஸிஹ்ர் செய்பவர்) என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (10 : 2)

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் (ஸிஹ்ரிடம்) செல்கிறீர்களா?” என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.

அல்குர்ஆன் (21 : 3)

இன்னும் இந்தக் கருத்து (28 : 48) (34 : 43) (37 : 14) (38 : 4) (43 : 30) (46 : 7) (54 : 2) ஆகிய வசனங்களிலும் கூறப்படுகிறது. 

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா?

சூனியம் என்பது கற்பனையல்ல. மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம் என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள். 

புகாரி முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. தங்களின் கருத்தை மெய்யாக்குவதற்கு இவற்றை ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள். அந்த ஹதீஸ்கள் வருமாறு :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைக்கும் அளவிற்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒரு நாள் என்னை அழைத்தார்கள். எனக்கு நிவாரணம் கிடைக்கும் வழியை இறைவன் காட்டி விட்டான் என்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைப்பகுதியில் அமர்ந்து கொண்டார். மற்றொருவர் என் கால்பகுதியில் அமர்ந்து கொண்டார். இந்த மனிதருக்கு ஏற்பட்ட நோய் என்ன? என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் விடையளித்தார். இவருக்குச் சூனியம் செய்தவர் யார்? என்று முதலாமவர் கேட்டார். லபீத் பின் அல்அஃஸம் என்பவன் சூனியம் வைத்துள்ளான் என்று இரண்டாமவர் கூறினார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர் சீப்பிலும் உதிர்ந்த முடியிலும் பேரீச்சை மரத்தின் பாளையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று விடையளித்தார். எந்த இடத்தில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று முதலாமவர் கேட்டார். தர்வான் என்ற கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று இரண்டாமவர் கூறினார் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். பின்னர் அந்தக் கிணற்றுக்குச் சென்று விட்டு திரும்பி வந்தார்கள். அங்குள்ள பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தது என்று என்னிடம் கூறினார்கள். அதை அப்புறப்படுத்திவிட்டீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இல்லை அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்துவிட்டான். மக்கள் மத்தியில் தீமையை பரப்பக்கூடாது என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது. 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (3268)

தம் மனைவியிடத்தில் தாம்பத்தியம் நடத்தாமல் தாம்பத்தியம் நடத்தியதாக நினைக்கும் அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

நூல் : புகாரி (5765)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக அஹ்மத் என்ற கிரந்தத்தில் இடம்பெற்ற செய்தி கூறுகிறது. 

நூல் : அஹ்மத் (23211)

நபி (ஸல்) அவர்கள் தன்னிலை மறக்கும் அளவிற்கு ஆறு மாதக் காலம் சூனியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மற்றவர்களுக்கு ஏன் சூனியம் செய்ய முடியாது என்று இவர்கள் வாதிடுகிறார்கள். மேற்கண்ட ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியான கருத்து போல தோன்றலாம். ஆனல் ஆழமாகப் பரிசீலனை செய்யும் போது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவோ அதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கவோ முடியாது என்ற கருத்திற்குத் தான் வந்தாக வேண்டும். 

பாதுகாக்கப்பட்ட இறை வேதம். 

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பு ஆறுமாதம் நீடித்தது. தான் செய்யாததைச் செய்ததாக கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன. 

திருக்குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது பாதிப்பாகும். சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தான் செய்யாததைச் செய்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அந்த ஆறுமாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ (இறைச் செய்தி) சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும். 

தம் மனைவியிடத்தில் இல்லறத்தில் ஈடுபட்டதை அல்லது ஈடுபடாமல் இருந்ததைக் கூட நபி (ஸல்) அவர்களால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையென்றால் இறைவனிடம் வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம். தனக்கு வஹீ வந்திருந்தும் வரவில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகி விடும். 

எந்த ஆறு மாதம் என்று தெளிவாக விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் இந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். 

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் இருக்கும் ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும். திருக்குர்ஆனில் பொய்யோ கலப்படமோ கிடையாது. முழுக்க முழுக்க அது இறைவனின் வார்த்தை தான் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் நற்சான்று கூறுகிறது. 

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் (15 : 9)

அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)

அல்குர்ஆன் (39 : 28)

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞான மிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

அல்குர்ஆன் (41 : 42)

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (4 : 82)

பாதுகாப்பு ஏற்பாடுகள்.

குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் அனைத்து வாசல்களையும் இறைவன் அடைத்து விட்டான். இது இறை வேதமாக இருக்க முடியாது என்ற சந்தேகம் எள்முனையளவும் ஏற்படக் கூடாது என்பதற்காக பலவிதமான ஏற்பாடுகளையும் செய்தான். 

நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவராக இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மக்கள் திருக்குர்ஆனை இறைவனுடைய வேதம் என்று நம்பியிருக்க மாட்டார்கள். முஹம்மது தனது புலமையை பயன்படுத்தி உயர்ந்த நடையில் இதைத் தயாரித்து இறை வேதம் என்று ஏமாற்றுகிறார் என்று அந்த மக்கள் நினைத்திருப்பார்கள். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே முஹம்மது நபிக்கு இறைவன் எழுத்தறிவை வழங்கவில்லை என்று கூறுகிறான். 

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (29 : 48)

எழுத்தறிவு வழங்குவது பெரும்பாக்கியமாக இருந்தும் அந்தப் பாக்கியத்தை வேண்டுமென்றே நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கவில்லை. திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்துள்ளான் என்று மேலுள்ள வசனம் கூறுகிறது. 

ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் திருக்குர்ஆனை மொத்தமாக இறக்கினால் அனைத்துச் சட்டங்களும் மக்களுக்கு ஒரே நேரத்தில் கிடைத்து விடும். ஆனாலும் இதை வேண்டுமென்றே தவிர்த்ததாக இறைவன் கூறுகிறான். 

மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.

அல்குர்ஆன் (17 : 106)

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

அல்குர்ஆன் (25 : 32)

சிறிது சிறிதாக இறக்கினால் மனனம் செய்ய இயலும். உள்ளத்தில் பதிய வைக்க இயலும் என்பதற்காகவே இவ்வாறு அருளியதாக இறைவன் குறிப்பிடுகிறான். 

திருக்குர்ஆன் இறைவனுடைய வார்த்தையா? அல்லது மனிதனின் கற்பனையா? என்ற சந்தேகம் வரக் கூடாது என்றால் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும். 

அவர்கள் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாலோ அல்லது செய்ததைச் செய்யவில்லை என்று சொன்னாலோ அவர்கள் கூறியது அனைத்தும் சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும். நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று நம்புவதால் குர்ஆனைப் பாதுகாப்பதாக கூறும் குர்ஆன் வசனங்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே நபி (ஸல்) அவர்களின் மன நிலை பாதிக்கப்பட்டது என்றக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 

நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை முடக்குவதற்கு பலர் முயற்சித்த போதும் அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை. அழைப்புப் பணிக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மக்கள் செய்யும் தீமைகளிலிருந்து நபி (ஸல்) அவர்களைத் தான் காத்துக் கொள்வதாக அல்லாஹ் அங்கீகாரம் தருகிறான். எனவே நபியவர்களின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்குரியதாக ஆக்கும் சூனியத்தை எந்த முஸ்லிமும் நம்பிவிடக்கூடாது. 

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

 அல்குர்ஆன் (5 : 67)

நகைப்பிற்குரிய விளக்கம்.

வஹீ விசயத்தில் மட்டும் உள்ளதை உள்ளபடி கூறினார்கள். மற்ற விசயத்தில் தான் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்று சிலர் விளக்கம் தருகிறார்கள். இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும். குர்ஆன் இறை வேதம் தான் என்று முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள். 

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபியவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறைவாக்கா அல்லவா என்ற நிலையில் மக்கள் இருந்தார்கள். ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்து மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா? என்று சிந்திக்கத் தவறி விட்டார்கள். 

செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை மூளை தொடர்பானது என்பதால் அவர்கள் கூறிய அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும். 

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்யாமலேயே செய்ததாக நினைத்தார்கள் என்று சூனியம் தொடர்பாக வரும் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. மார்க்க விசயத்தில் குழப்பம் ஏற்படவில்லை. மாறாக உலக விசயத்தில் தான் குழப்பம் ஏற்பட்டது என்று பிரித்துக் காட்டாமல் பொதுவாக எல்லாக் காரியங்களிலும் அவர்களுக்கு இந்தக் குழப்பம் ஏற்பட்டது என்றே ஹதீஸில் இடம் பெற்றுள்ள வாசகம் உணர்த்துகிறது.

எனவே நபி (ஸல்) அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அன்றைய மக்கள் திருக்குர்ஆனை சந்தேகத்திற்குரியதாக கருதியிருப்பார்கள் என்பதில் ஜயமில்லை. 

எந்த விதமான ஆயுதங்களும் இல்லாமல் ஒருவருக்கு தீமை அளிப்பது என்பது இறைவனுக்கு மட்டுமே சாத்தியம். இந்த ஆற்றல் சூனியம் செய்வதன் மூலம் மனிதர்களுக்கும் உண்டு என்று நம்புவது இணை வைப்பில் கொண்டு சேர்த்து விடும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக இது அமைந்திருப்பதால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலைநாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். 

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். செய்ததைச் செய்யவில்லை என்கிறார். செய்யாததைச் செய்தேன் என்கிறார். இவர் கூறுவதை எப்படி நம்புவது என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள்.

இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்திருந்தால் இந்த விசயம் எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாதம் வரை நீடித்த பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. 

மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தினமும் பள்ளிவாசலில் ஐந்து வேளை தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். 

எனவே நபி (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். ஆனால் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை. 

எனவே அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. 

இறைத்தூதர் நிராகரிக்கப்பட்டிருப்பர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவரை அன்றைய மக்கள் இறைத்தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத்தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள். 

ஒருவரை இறைத்தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம். 

இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்

இறைத் தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாவே இருந்தனர். எல்லா வகையிலும் தன்னைப் போன்று இருக்கும் ஒருவர் தன்னை தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

“மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?” என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

அல்குர்ஆன் (17 : 94)

“நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்” என்று கூறினர்

அல்குர்ஆன் (36 : 15)

“நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.”

அல்குர்ஆன் (26 : 186)

இஸ்லாத்தை ஏற்க மறுத்தவர்கள் இந்த வாதத்தை வைத்தார்கள் என்று (26 : 154) (25 : 7) (23 : 33) (23 : 47) (21 : 3) ஆகிய வசனங்களிலும் சொல்லப்படுகின்றது. 

மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கருதினார்கள். மக்கள் இவ்வாறு எண்ணியதில் நியாயங்கள் இருந்தன. இறத்தூதர் என்று ஒருவர் கூறிய உடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத் தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். 

மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான். தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களையும் அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினான். 

மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர் தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடைய எவருக்கும் தயக்கம் ஏற்படாது. இதன் காரணமாக எந்தத் தூதரை அனுப்பினாலும் அவர்களுக்கு அற்புதங்களை வழங்கியதாக திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் சொல்லிக் காட்டுகிறது. 

(முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

அல்குர்ஆன் (7 : 101)

அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும் ஏடுகளையும் ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் (35 : 25)

அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம்.

அல்குர்ஆன் (10 : 74)

உங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக் கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம்.

அல்குர்ஆன் (10 : 13)

இந்தக் கருத்து (40 : 22) (9 : 70) (64 : 6) (40 : 50) (57 : 25) ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது. 

இறைத் தூதர்கள் அனைவருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. இந்த அற்புதம் வழங்கப்படாமல் ஒரு இறைத் தூதரும் அனுப்பப்படவில்லை என்று மேலுள்ள வசனங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. 

தான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம் தான் ஒரு இறைத் தூதர் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர்களையே முடக்கிப் போட்டிருப்பார்கள் என்றால் அன்றைக்கு பெரும் விளைவுகள் ஏற்பட்டிருக்கும். 

நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம். இன்று அவரது மன நிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே. இவர்களை விட சூனியம் வைத்த யூதர்கள் தான் ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று கணிசமான மக்கள் எண்ணியிருப்பார்கள். 

இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதத்தைச் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள் என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு மதம் மாறிச் செல்லவில்லை. 

எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும் முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 

இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்திகளை எதிரிகளுக்கு வழங்கி நம்பிக்கைக் கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

வழிகெட்டவர்களின் வாதம்.

நபி (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது இவர் சூனியம் செய்கிறார் என்று சிலவேளை விமர்சனம் செய்தனர். 

வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்கு சூனியம் வைக்கப்பட்டு அதனால் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும். பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. 

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை.

அல்குர்ஆன் (51 : 52)

 “நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்” என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் (26 : 153)

“நீர் சூனியம் செய்யப்பட்டவர்” என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் (26 : 185)

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! “மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்” என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.

அல்குர்ஆன் (17 : 101)

மற்ற நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்ததைப் போலவே நபி (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. 

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

அல்குர்ஆன் (17 : 47)

“அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

அல்குர்ஆன் (25 : 8)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று சொல்பவர்கள் அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம். செய்கின்றன. இறைத்தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விஷயம். அதனால் அவரது தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இவர்கள் செய்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான். 

இறைத் தூதர் சாப்பிடுகிறார் குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான். 

“இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.

அல்குர்ஆன் (25 : 7)

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போ ராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். இன்னும் பொறுமை யைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, மற்றும் சிலருக் குச் சோதனையாக ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் (25 : 20)

ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத்தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் வரம்பு மீறியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். 

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி வைத்துக் கொண்டார்களா? மாறாக அவர்கள் வரம்பு மீறிய கூட்டமாவர். எனவே (முஹம்மதே!) அவர்களை அலட்சியம் செய்வீராக! நீர் குறை கூறப்பட மாட்டீர்.

அல்குர்ஆன் (52 : 52)

சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான்.

யூதர்கள் நபி (ஸல்) அவர்களைத் தாக்க வேண்டும் அழிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தனர். நபியவர்களுக்கு சூனியம் செய்து அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தங்களது முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டார்கள் என்று நம்புவது குர்ஆனிற்கு மாற்றமானது. ஏனென்றால் சூனியக்காரன் வெற்றிபெற முடியாது என்று குர்ஆன் கூறுகிறது. 

“உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)

அல்குர்ஆன் (20 : 69)

நல்லவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் செய்ய முடியாது.

சூனியம் என்பது ஒரு வித்தை தான். இதனால் யாரையும் முடக்க முடியாது என்று பல குர்ஆன் வசனங்கள் கூறுகிறது. ஒரு பேச்சிற்கு சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்று வைத்துக் கொண்டாலும் சூனியத்தினால் நல்லவர்களுக்கு எந்தத் தீமையும் செய்ய முடியாது. 

நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (ஷைத்தானிற்கு) எந்த ஆதிக்கமும் இல்லை. அவனைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு ஆதிக்கம் உள்ளது.

அல்குர்ஆன் (16 : 99)

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

அல்குர்ஆன் (26 : 221)

ஷைத்தான் நல்லவர்களை ஒன்றும் செய்ய முடியாதென்றும் தீயோர்களின் மீது தான் அவனது ஆதிக்கம் உள்ளது என்றும் இந்த வசனம் கூறுகிறது. சூனியத்தால் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானின் ஆதிக்கத்திற்கு உள்ளானார்கள் என்று கூறினால் நபி (ஸல்) அவர்கள் நல்லவர்கள் இல்லை. இறைவனின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவும் இல்லை. ஷைத்தானைக் கூட்டாளியாக ஆக்கிக் கொண்டார்கள். இணை வைத்தார்கள். இட்டுகட்டும் பாவியாக இருந்தார்கள் என்றெல்லாம் மிகவும் மோசமான கருத்துக்களை கூற வேண்டிவரும். 

சூனிய நம்பிக்கை இஸ்லாத்திற்கு எதிரானது என்பதால் நபி (ஸல்) அவர்கள் சூனியத்தை நம்பக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். சூனியத்தை உண்மை என்று நம்புபவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று கூறினார்கள். 

நிரந்தரமாக மது அருந்துபவன் உறவுகளைப் பேணாதவன் சூனியத்தை உண்மை என்று நம்பியவன் ஆகிய மூவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். 

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)

நூல் : அஹ்மத் (18748)

எனவே நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று நம்புவது அவர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் இழுக்கை ஏற்படுத்தும். நம்முடைய கொள்கைக்கு ஊறு விளைவிக்கும். 

அடிப்படையற்ற விளக்கம்.

இந்த வசனம் அருளப்படும் போது நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்படாமல் இருந்து பின்னர் சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? என்று சிலர் விளக்கம் கொடுக்கலாம். இது ஏற்க முடியாத விளக்கம். 

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு வைக்கப்படும் சூனியத்தை அறிந்த இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை. மேலுள்ள வசனங்களையும் பின்வரும் வசனங்களையும் கவனித்தால் இந்த விளக்கம் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

“அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். 

(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.

அல்குர்ஆன் (25 : 8)

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் (நேர்) வழியை அடைய இயலாது.

அல்குர்ஆன் (17 : 47)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று கூறுபவர்கள் வழிகெட்டவர்கள் என்று அல்லாஹ் இந்த வசனங்களில் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான். 

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின் படி நபிகள் நாயகத்திற்கோ வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ முடக்கவோ முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

முரண்பாடுகள்.

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டபோது அப்புறப்படுத்தவில்லை. அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியின் 3268 5763 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள் என்று புகாரியின் 5765 6063 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. 

அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்புகளிலும் முரண்பாடு காணப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அங்கு செல்லாமல் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும் அப்புறப்படுத்திய பொருட்களை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எநதப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்கள் வெளியேற்றப்படாமல் இருந்தது. அப்போது நீங்கள் வெளியேற்றிவிடவில்லையா என்று நபி (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமை பரவக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறியதாக புகாரி 3268 வது செய்தியில் இடம் பெற்றுள்ளது. 

ஆனால் புகாரியில் 5765 வது செய்தியில் இதற்கு மாற்றமாக உள்ளது. சூனியம் வைக்கப்பட்டப் பொருள் வெளியேற்றப்பட்டு வெளியேற்றப்பட்டப் பொருளை மக்களுக்கு திறந்து காட்டக் கூடாதா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்களுக்கு இதைத் திறந்து காட்டி அவர்களிடத்தில் தீமையைப் பரப்புவதை நான் விரும்பவில்லை என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. 

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இரு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக்கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு சூனியம் செய்யப்பட்டதை நபியவர்கள் அறிந்து கொண்டதாகவும் புகாரி 6391 வது ஹதீஸ் கூறுகிறது. நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான் என்று நேரடியாகக் கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் அதிகமாக துஆ செய்துவிட்டு பிறகு ஆயிஷாவே எனக்கு எதில் நிவாரணம் இருக்கிறது என்று அல்லாஹ் எனக்கு அறிவித்துவிட்டான் என்று கூறியதாக புகாரியில் (5763) வது செய்தியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்த உடன் தான் கண்ட கணவை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறியதாக அஹ்மதில் 23211 வது செய்தி கூறுகிறது. 

ஆயிஷாவே நான் எதிர்பார்த்த விஷயத்தில் அல்லாஹ் எனக்கு பதிலளித்து விட்டான் என்று நான் உணர்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அஹ்மதில் 23165 வது செய்தியில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அல்லாஹ் எனக்கு பதிலளித்ததை நீ உணர்ந்தாயா? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டதாக புகாரியில் இடம் பெற்ற ஹதீஸ்கள் சொல்கிறது. 

இந்த முரண்பாடுகளே இந்த ஹதீஸ் இறைவனிடமிருந்து வரவில்லை என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டி விட்டது. ஏனென்றால் இறைவனுடைய கூற்றில் எந்த விதமான முரண்பாடும் வராது.

கருத்துப் பிழைகள்.

நபி (ஸல்) அவர்கள் கணவில் கண்டதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஆயிஷாவே எனக்கு அல்லாஹ் பதிலளித்ததை நீ பார்த்தாயா? என்று கேட்டதாக அஹ்மதில் 23211 வது செய்தியில் இடம்பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்களுடைய கனவில் அவர்களுக்குக் காட்டப்பட்ட விஷயத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் பார்த்திருக்க முடியாது என்பது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல. நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படியிருக்க நீ பார்த்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் எப்படி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்பார்கள்?.

. மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனிற்கு எதிராக அமைந்துள்ளதாலும் அந்த அறிவிப்புக்களில் முரண்பாடு இருப்பதினாலும் இதை நாம் ஏற்கக் கூடாது. 

இது போன்ற ஹதீஸ்களைத் தான் நாம் ஏற்கக் கூடாது என்று சொல்கிறோம். இவ்வாறு இல்லாத பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களை ஏற்றுக் கொள்கிறோம். ஏற்றுக்கொள்ளும் படி வலியுறுத்தி வருகிறோம். குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ் வேண்டாம் என்று கூறுவோருடன் விவாதம் புரிந்து ஹதீஸின் முக்கியத்துவத்தையும் அவர்களுக்குக் கூறி வருகிறோம். 

மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?

madammariya

நபி (ஸல்) அவர்கள் எவன் தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறானோ அவனைக் கொன்று விடுங்கள் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (3017)

இஸ்லாத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தைத் தழுவியன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்பட வேண்டும் என்ற நச்சுக் கருத்தை பல அறிஞர்கள் தவறுதலாகக் கூறி வருகிறார்கள். இதற்கு அவர்கள் மேலுள்ள ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான செய்தி என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த ஹதீஸை நாம் மறுக்கவுமில்லை. எதிர் தரப்பினர் ஆதாரமாகக் காட்டும் இந்த ஹதீஸ் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனைக் கொல்ல வேண்டும் என்ற ஒரு கருத்தை மட்டும் தராமல் பல கருத்துக்களைத் தரக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. 

இவற்றில் எது குர்ஆனிற்கு முரணாக உள்ளதோ அந்த அர்த்தத்தைக் கொடுக்காமல் குர்ஆனுடன் ஒத்துப் போகின்ற பொருளைக் கொடுக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

எதிர் தரப்பினர் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிய தவறான கருத்தை நாம் மறுப்பதால் குர்ஆனிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்ற வாதத்தை எழுப்பி இந்த ஹதீஸை நாம் மறுப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் இதை நாம் மறுக்கவில்லை. முரண்படாத விதத்தில் விளக்கம் தான் தருகிறோம். பின்வரும் பொருள்களை இந்த ஹதீஸ் தருகின்றது. 

1.             இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டே இஸ்லாமிய கோட்பாடுகளை மாற்ற நினைப்பவனைக் கொல்ல வேண்டும். 

2.             முஸ்லிமாக இருந்தவன் வேறோரு மதத்தைத் தழுவியதோடு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் அவனைக் கொல்ல வேண்டும். 

3.             முஸ்லிமாக இருந்தவன் வேறொரு மதத்தைத் தழுவினால் அவன் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படாவிட்டாலும் அவனைக் கொல்ல வேண்டும். 

4.             ஒரு மதத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவன் அவன் ஏற்றுக் கொண்ட மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதத்தில் இருந்து கொண்டே அதன் கொள்கையை மாற்றம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தினால் அவன் கொல்லப்பட வேண்டும்.

5.             ஒருவனுடைய மார்க்கம் எதுவாக இருந்தாலும் அவன் எதை மார்க்கம் என்று கடைப் பிடிக்கிறானோ அதை விட்டும் விலகி இன்னொரு மார்க்கத்திற்குச் சென்று விட்டால் அவனைக் கொல்ல வேண்டும். இந்த அடிப்படையில் இந்து மதத்தைக் கடைபிடிப்பவன் இஸ்லாத்திற்கு வந்தாலோ அல்லது இந்து மதம் அல்லாத வேறு மதங்களுக்குச் சென்றாலோ அவனைக் கொல்ல வேண்டும். 

இந்த ஐந்து கருத்துக்களில் நான்காவது ஐந்தாவது கருத்தை ஹதீஸ் தரவில்லை என்பதில் நாமும் எதிர் தரப்பினரும் ஒன்றுபட்டுள்ளோம். முதல் இரண்டு கருத்தையும் இந்த ஹதீஸ் கொடுக்கும் என்பதில் நாமும் எதிர்தரப்பினரும் ஒத்துப் போகிறோம். ஏனென்றால் முதலாவது இரண்டாவது வகையினர் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுவதால் தான் கொல்லப்படுகிறார்கள். மதம் மாறியதற்காக அல்ல.

 மூன்றாவது கருத்தான மதம் மாறியவன் இஸ்லாத்திற்கு எதிராகச் செல்லாவிட்டாலும் அவன் மீண்டும் முஸ்லிமாகாத வரை அவனைக் கொல்ல வேண்டும் என்பதில் தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 

எதிர் தரப்பினர்கள் கூறும் மூன்றாவது கருத்தை ஏற்றுக் கொண்டால் இஸ்லாத்தில் நிர்பந்தம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் திருக்குர்ஆன் இஸ்லாத்தை ஏற்கும் விஷயத்தில் மக்களுக்குச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. 

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (2 : 256)

மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று அல்லாஹ் கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் இணைத்தே சொல்கிறான். வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்பதே அந்தக் காரணம். சத்தியம் எது? அசத்தியம் எது? என்று தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. ஆகையால் இஸ்லாம் என்ற சத்தியத்தை யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் இலகுவாகப் புரிந்த கொள்ளலாம். இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. 

“இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் (18 : 29)

 (முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?

அல்குர்ஆன் (10 : 99)

இஸ்லாத்தை ஏற்கும் படி யாரும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. ஏனென்றால் நேர்வழி காட்டுதல் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. அப்படியிருக்க நாம் ஒருவரை நிர்பந்தித்தால் அவர் நேர்வழி பெற்றுவிட முடியாது. எனவே இஸ்லாத்தைக் கட்டாயமாக ஒருவனின் மீது திணிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் இஸ்லாம் அனுமதி தரவில்லை. 

எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர். புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவன் தவிர. அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.

அல்குôஆன் (88 : 21)

நபி (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பை இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இஸ்லாம் உண்மைக் கொள்கை என்பதை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்வது தான் நபி (ஸல்) அவர்களின் மீது கடமை. அவர்களை அடக்கி இஸ்லாத்தைப் பின்பற்றச் செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. 

நபியவர்களின் உபதேசத்தை ஏற்காமல் ஒருவன் புறக்கணித்தால் அவனை இந்த உலகத்தில் எதுவும் செய்ய இயலாது. மாறாக அவனை விசாரித்து அவனுக்கு தண்டனை தருகின்ற அதிகாரம் தனக்கு மட்டும் இருப்பதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். 

(ஏக இறைவனை) மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” என (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் (108 : 1)

நபி (ஸல்) அவர்கள் கூறும் கொள்கையும் இணைவைப்பாளர்களின் கொள்கையும் ஒன்றல்ல. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது. எனவே நான் உங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் படி என்னை நீங்கள் நிர்பந்திக்காதீர்கள். என் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி நான் உங்களை நிர்பந்திக்க மாட்டேன் என்று கூறுமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். 

இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் (9 : 6)

இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் அடைக்கலத்தை எதிர்பார்த்து வரும் நேரத்தில் அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்தால் தான் அடைக்கலம் கிடைக்கும் என்று நிர்பந்திக்குமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடவில்லை. இணை வைப்பாளர்களை நிர்பந்திப்பதற்குரிய சூழ்நிலைகள் அமைந்தாலும் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வார்த்தையைக் கேட்கச் செய்ய வேண்டுமே தவிர இஸ்லாத்தில் இணையும் படி வற்புறுத்தக் கூடாது என்பதே அல்லாஹ்வின் கட்டளை. 

குர்ஆனுடன் ஒத்துப் போகாத விளக்கம்.

மதம் மாறிகளைப் பற்றி குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது. இந்த இடங்களில் மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைப் பொறுத்திப் பார்த்தால் அசாத்தியமான விஷயங்களைக் குர்ஆன் சொல்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டி வரும். எந்த வகையிலும் இவர்கள் கூறும் சட்டத்தை வசனங்களுடன் பொறுத்த முடியாது. 

நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.

அல்குர்ஆன் (4 : 137)

இஸ்லாத்தை ஏற்றுவிட்டு மறுத்தவனைக் கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டமாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்று விட்டு மறுத்தவுடன் மதம் மாறியவன் கொல்லப்பட்டு விடுவான். மீண்டும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான அவகாசம் அவனுக்குக் கிடைக்காது. ஆனால் இந்த வசனத்தில் இஸ்லாத்தை ஏற்று மறுத்த பிறகும் இஸ்லாத்தை ஏற்பதைப் பற்றிச் சொல்லப்படுகிறது. 

மதம் மாறியவன் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தியிருந்தால் இரண்டாவது தடவையும் ஒருவனால் எப்படி இஸ்லாத்தில் நுழைந்திருக்க முடியும்? இதன் பின்பு அவன் எப்படி மீண்டும் மறுத்திருக்க முடியும்? மதம் மாறியவர்கள் கொல்லப்படாமல் இருந்தால் தான் இது சாத்தியம்.

மதம் மாறியவன் கொல்லப்பட வேண்டியவன் என்றால் அவன் கொல்லப்பட்டப் பிறகு நான் அவனுக்கு நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவது பொருத்தமில்லாமல் ஆகிவிடும். பல முறை மதம் மாறினாலும் இஸ்லாமிய அரசாங்கத்தால் அவன் கொல்லப்படாமல் உயிருடன் இருக்கும் போது தான் நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவது பொருத்தமாக அமையும். ஏனென்றால் நேர்வழி காட்டுதல் என்பது உயிருள்ளவர்களுக்கே சாத்தியம். 

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் (2 : 217)

மதம் மாறியவர்களைக் கொல்வது சட்டமாக இருந்திருந்தால் உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக கொல்லப்பட்டவர்களின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும் என்று அல்லாஹ் கூறியிருப்பான். பொதுவாக எல்லோரும் எப்படி மரணிக்கிறார்களோ அது போன்ற மரணத்தையே மதம் மாறியவர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான். 

மதம் மாறியவர்கள் திருந்துவதற்கு அவர்கள் மரணிக்கும் வரை அல்லாஹ் கால அவகாசம் கொடுக்கிறான். அதற்குள் அவர்கள் திருந்தி விட்டால் அவர்கள் செய்த செயல்கள் பாதுகாக்கப்படும். அவர்கள் நரகிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். மரணிக்கும் வரை திருந்துவதற்கு அவகாசம் அல்லாஹ்வால் தரப்பட்டிருக்கும் போது மதம் மாறியவுடன் அவர்களைக் கொல்லுவது என்பது இறை வாக்கிற்கு எதிரான செயல். 

தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (3 : 86)

இந்த வசனத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லவேயில்லை என்று முடிவு செய்து விடலாம். மதம் மாறியவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்று இவ்வசனம் கூறுகிறது. மதம் மாறியதற்காக கொல்லப்பட்டு விட்டவர்களுக்கு நான் நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் சொன்னால் அது பொறுத்தமாக அமையாது. மாறாக அவர்கள் உயிருடன் இருந்தால் தான் இந்த வாசகத்தைக் கூற முடியும். 

மதம் மாறியவர்களுக்குரிய தண்டûûயைப் பற்றி கூறும் போது அல்லாஹ்வின் சாபம் வானவர்கள் மற்றும் மக்களின் சாபம் அவர்களுக்கு உண்டு என்பதே அவர்களுக்குரிய தண்டனை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த உலகத்தில் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று இங்கு கூறப்படவில்லை. 

மதம் மாறிய பிறகு திருந்தியவர்களை மன்னிப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இறைவனுடைய இந்த மன்னிப்பு மனிதன் மரணிக்கும் வரை இருக்கிறது. மதம் மாறியவர்கள் கொல்லப்பட்டு விட்டால் அவர்களால் எப்படி திருந்த முடியும்? அல்லாஹ் அவர்களை எப்படி மன்னிப்பான்?

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் (16 : 125)

இந்த வசனத்தில் எவ்வாறு அழைப்புப் பணியை செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான். விவேகம் அழகிய அறிவுரை அழகான வாதம் இவற்றின் மூலம் அழைப்புப் பணியைச் செய்யுமாறு கட்டளையிடுகிறான். ஒருவரை நிர்பந்தித்து இஸ்லாத்திற்கு இழுத்து வருவது விவேகமாகுமா? அழகிய அறிவுரையாகுமா? அல்லது அழகிய விவாதமாகுமா? 

நிர்பந்தம் இருக்கும் மார்க்கத்தில் விவாதம் எதற்கு?

இணை வைப்பாளர்கள் வைத்த வாதங்களை திருக்குர்ஆன் குறிப்பிட்டுக் கூறி அதற்கான பதிலையும் தருகிறது. சிந்தித்துப் பார்த்து இம்மார்க்கத்தைக் கடைபிடிக்கும் படி கூறுகிறது. இஸ்லாமியர்கள் கூட அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கும் போது செவிடர்கள் குருடர்களைப் போன்று அதை ஏற்கக் கூடாது என்று உபதேசம் செய்கிறது. 

இஸ்லாம் நிர்பந்தத்தைப் போதிக்கின்ற மார்க்கமாக இருந்தால் கண்மூடித்தனமாக அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக சிந்திக்கும் படி ஏன் சொல்கிறது? நிர்பந்தம் உள்ள இடத்தில் சிந்தனைக்கு வேலை இல்லை.

மாற்றார்களிடத்தில் அழகிய முறையில் விவாதம் செய்யும் வழிமுறையை இஸ்லாம் கற்றுக் கொடுப்பதாலும் மனிதர்களைச் சிந்திக்கத் தூண்டுவதாலும் இஸ்லாம் என்பது சிந்தித்து மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய மார்க்கம் தான். யாரையும் நிர்பந்தமாக இஸ்லாத்தில் இணையச் சொல்கின்ற மார்க்கம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! “எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்க ளுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று கூறுங்கள்!

அல்குர்ஆன் (29 : 46)

குôஆனை வைத்து இணைவைப்பாளர்களிடத்தில் ஜிஹாத் செய்யுமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. கொலை மிரட்டல் விடுத்து நிர்பந்திக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருந்தால் குர்ஆனை வைத்து இணை வைப்பாளர்களிடத்தில் தர்க்கம் செய்யுங்கள் என்று கட்டளையிடாது. ஏனென்றால் விவாதம் செய்து அவர்களை இஸ்லாத்திற்குக் கொண்டு வருவதை விட நிர்பந்தம் செய்தால் பயந்து கொண்டு எளிதில் இஸ்லாத்தில் நுழைந்து விடுவார்கள். ஆனால் இதை அல்லாஹ்வோ அவனது தூதரோ விரும்பாததால் விவாதம் செய்வதையே கற்றுத் தந்துள்ளார்கள்.

எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!

அல்குர்ஆன் (25 : 52)

குர்ஆன் கூறாத தண்டனை.

குர்ஆன் பல இடங்களில் மதம் மாறியவர்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட அவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறவே இல்லை. விபச்சாரம் அவதூறு திருட்டு போன்ற தவறான செயல்களுக்குத் தான் இஸ்லாம் இந்த உலகத்தில் தண்டனைகளைத் தருகிறது. ஆனால் தவறான நம்பிக்கைகளுக்கு மறுமையில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையைக் கூறியே எச்சரிக்கிறது. 

இந்த உலகத்தில் இவர்களுக்கு இப்படி ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்தத் தண்டனையைக் கூறி மனிதர்களை எச்சரித்திருக்கும். ஆனால் திருட்டு அவதூறு விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு இந்த உலகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனையைக் கூறிய குர்ஆன் எந்த ஒரு இடத்திலம் மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவே இல்லை. 

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். 

அல்குர்ஆன் (5 : 54)

மதம் மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் இஸ்லாமிய சட்டமாக இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் கூட இது தான். ஆனால் இந்த இடத்தில் மதம் மாறினால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று அல்லாஹ் கூறாமல் இஸ்லாத்தைக் கடைபிடிக்கும் இன்னொரு கூட்டத்தை நான் கொண்டு வருவேன் என்று தான் சொல்கிறான். 

ஒரு உயிரைக் கொல்வது சம்பந்தமான இந்தப் பெரிய பிரச்சனைக்கு சரியான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் குர்ஆனுடன் மோதுகின்ற விளக்கத்தைத் தான் இவர்களால் கூற முடிகிறது. 

பெயரளவில் முஸ்லிமாக வேண்டுமா?

மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றால் தான் அவன் இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியும். மதம் மாறியவனுடைய உள்ளம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளம் சம்பந்தப்பட்ட இந்த நோய்க்கு மருத்துவம் காண அவனுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது அவனது கேள்விகளுக்கு முறையான விளக்கங்ளைக் கொடுப்பது விவாதம் புரிவது போன்ற வழிகளைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். 

கொலை செய்வதாக அவனை அச்சுறுத்துவது ஒரு போதும் இந்நோய்க்குரிய மருந்தாகாது. எனவே தான் குர்ஆன் மதம் மாறியவர்களுக்கு மறுமையில் தண்டனை இருப்பதாகக் கூறுகிறது. இந்த உலகத்தில் அவர்களுக்கு எந்தத் தண்டனையையும் விதிக்கவில்லை.

உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவன் இஸ்லாத்திற்கு வந்தால் அவனுடைய இஸ்லாம் அல்லாஹ்விற்குத் தேவையானதல்ல. அவனது வணக்க வழிபாடுகள் நற்செயல்கள் இவை அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.

அல்குர்ஆன் (9 : 54)

 எந்தக் காரியத்தில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லையோ அந்த வேலையைச் செய்யுமாறு இஸ்லாம் சொல்லாது. நிர்பந்தமாக இஸ்லாத்தில் தள்ளப் பட்டவனுக்கு இந்த நன்மையான காரியங்களால் எந்த விதமான நன்மையும் மறுமையில் கிடைக்காது. மதம் மாறியவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற சட்டம் தூய இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்காது. மாறாக இஸ்லாத்தை மனதளவில் வெறுத்துக் கொண்டு அதற்கெதிராகச் செயல்படும் நயவஞ்சகர்களைத் தான் உருவாக்கும். 

நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தாத சட்டம்.

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் எத்தனையோ நபர்கள் இஸ்லாத்திற்கு வந்து விட்டு வேறொரு மதத்தைத் தழுவினார்கள். இவர்களில் ஒருவருக்காவது நபி (ஸல்) அவர்கள் மரண தன்டனையை விதித்ததாக ஆதாரப்பூர்வமான எந்தச் சான்றும் இல்லை. மாறாக மதம் மாறியவர்களைக் கொல்லாமல் விட்டதற்குத் தான் பல சான்றுகள் உள்ளது. 

ஹுதைபியா உடன்படிக்கையின் போது மக்கத்து குரைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் யாராவது உங்களுடன் இணைந்து கொண்டால் அவரை மீண்டும் எங்களிடம் அனுப்பிவிட வேண்டும் உங்களில் யாராவது உங்களை விட்டும் விலகி எங்களிடம் வந்தால் நாங்கள் அவரை உங்களிடம் அனுப்ப மாட்டோம் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : அல்மிஸ்வர் பின் மஹ்ரமா (ரலி)

நூல் : அஹ்மத் (18152)

மதம் மாறியவர்களைக் கொல்வது இஸ்லாமியச் சட்டமாக இருந்திருந்தால் இந்த இஸ்லாமியச் சட்டத்திற்கு மாறு செய்யும் விதத்தில் அமைந்த இந்த ஒப்பந்தத்திற்கு நபி (ஸல்) அவர்கள் ஒத்திருக்க மாட்டார்கள். மாறாக எங்களிடமிருந்து பிரிந்து வருபவர்களுக்குக் கொலை தண்டனையை நாங்கள் நிறைவேற்றுவதற்காக அவர்களை எங்களிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றே கூறியிருப்பார்கள். மக்கத்துக் காஃபிர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியச் சட்டத்தைத் தளர்த்தினார்கள் என்று சொல்ல முடியுமா?

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறு நாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்

நூல் : புகாரி (1883)

இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் தனக்குக் காய்ச்சல் வந்துவிட்டதாக அந்த கிராமவாசி எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் செய்த பைஅத்தை முறித்துவிட்டு மக்காவிற்குச் செல்ல நாடுகிறார். மதம் மாறிவிட்ட இவரை ஏன் நபி (ஸல்) அவர்கள் கொல்லவில்லை? மாறாக இவரது எண்ணப்படி இவர் மக்காவிற்கு திரும்ப அனுப்பப்படுவார் என்பதை மதீனா தீயவர்களை வெளியேற்றி நல்லவர்கள் மட்டும் வைத்திருக்கும் என்று கூறுவதன் மூலம் உணர்த்துகிறார்கள். 

அன்சாரிகளில் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு மதம் மாறி இணைவைப்புக் கொள்கையில் இணைந்து கொண்டார். பின்பு (இதற்காக) வருத்தப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் எனக்கு மன்னிப்பு கிடைக்குமா? என்று கேட்கும் படி தன்னுடைய கூட்டத்தாருக்குத் தகவல் தெரிவித்தார். அவரது கூட்டத்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இன்னார் (மதம் மாறியதற்காக) வருத்தப்பட்டு விட்டார். அவருக்கு மன்னிப்பு உண்டா? என்று உங்களிடம் கேட்கும் படி எங்களுக்குக் கூறியிருக்கிறார் என்று சொன்னார்கள். 

அப்போது தான் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (3 : 86) என்ற வசனம் இறங்கியது. நபி (ஸல்) அவர்கள் இதை அவருக்குத் தெரிவித்த உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல் : நஸயீ (4000)

மதம் மாறிவிட்டவரைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தியிருந்தால் இந்த நபித்தோழர் திருந்தி மீண்டும் இஸ்லாத்திற்கு வந்திருப்பாரா? இந்தப் படுமோசமான சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சிறந்த சான்றாக உள்ளது. 

ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிரிஸ்தவராகவே மாறி விட்டார். அவர் (மக்களிடம்) முஹம்மதிற்கு நான் எழுதிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக் கு மரணத்தை அளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டது. உடனே (கிறிஸ்தவர்கள்) இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு குழியைத் தோண்டினர். மீண்டும் அவரைப் பூமி வெளியே துப்பி விட்டிருந்தது. அப்போதும் இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவிற்கு குழியை ஆழமாகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால் அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போது தான் அது மனிதர்களின் வேலையல்ல என்று புரிந்து கொண்டார்கள். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர். 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (3617)

நபி (ஸல்) அவர்களுடன் இருந்து விட்டு பின்பு மதம் மாறிய இவரைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தால் உடனே நபித்தோழர்கள் அதைச் செயல்படுத்தியிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவருக்கு மரணத்தைக் கொடுத்தான். 

நயவஞ்சகர்களில் இருவகையினர் இருந்தனர். இவர்களின் ஒரு வகையினரை நபி (ஸல்) அவர்கள் நயவஞ்கர்கள் என்று அறிந்து வைத்திருந்தார்கள். இன்னொரு வகையினரைப் பற்றி நபியவர்களுக்குத் தெரியாது. அல்லாஹ் மட்டும் தான் இவர்களைப் பற்றி அறிந்தவன். 

முதல் வகையினர் பலமுறை தன்னுடைய சொல்லாலும் செயலாலும் தங்களின் இறை மறுப்பை வெளிப்படுத்தினார்கள். இறை மறுப்பாளர்கள் என்று தெரிந்த பின்பும் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கவில்லை. 

நபி (ஸல்) அவர்களுடைய பிரார்த்தனை இவர்களுக்கு இவ்வுலகில் கிடைக்காது. நபியவர்களுடன் சேர்ந்து ஜிஹாத் செய்யும் பாக்கியத்தை இழந்தார்கள். இவை மட்டும் தான் இவர்களுக்கு இந்த உலகத்தில் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட தண்டனை. இது அல்லாத தண்டனைகளை இவர்களுக்குத் தருகின்ற பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.

உம்மை அவர்களில் ஒரு சாராரிடம் அல்லாஹ் திரும்ப வரச்செய்து அப்போது, போருக்குப் புறப்பட அவர்கள் அனுமதி கேட்டால் “என்னுடன் ஒரு போதும் புறப்படாதீர்கள்! என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள்! நீங்கள் போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச் செல்லாது தங்கியோருடன் நீங்களும் தங்கி விடுங்கள்!” என்று கூறுவீராக! அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.

அல்குர்ஆன் (9 : 83)

இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள். அவர்களை அல்லாஹ்வும், தூதரும் அவனது அருள் மூலம் செல்வந்தர்களாக ஆக்கியதற்காகத் தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் குறை சொல்லித் திரியவில்லை. அவர்கள் திருந்திக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும். அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்துவான். பூமியில் அவர்களுக்குப் பாதுகாவலனோ உதவுபவனோ இல்லை.

அல்குர்ஆன் (9 : 74)

நபித்தோழர்கள் இந்த நயவஞ்சகர்களை நாங்கள் கொல்லட்டுமா? என்று கேட்ட போது கூட மக்கள் தவறாகப் பேசுவார்கள் வேண்டாம் என்றே கூறினார்கள். 

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளை விட) அதிகரித்து விட்டனர். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால் (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர் என்று கூறினான். அப்போது (செய்தி அறிந்த) உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் என்னை விடுங்கள் இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள் முஹம்மத் தன் தோழர்களைக் கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி (4907)

தமது மார்க்கத்தை மாற்றிக் கொண்டவன் என்றால் யார்?

தனது மார்க்கத்தை மாற்றியவனைக் கொல்லுங்கள் என்று கூறும் ஹதீஸிற்கு மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்று அர்த்தம் செய்வது குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் தவறு என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். எதிர்தரப்பினர் கூறும் பொருள் சரியானதல்ல என்றாகிவிட்ட போது அதன் உண்மையான பொருள் என்ன என்பதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 

இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து கொண்டே இஸ்லாம் கூறாததை இஸ்லாம் என்று சொல்பவன் அல்லது இஸ்லாம் கூறியிருப்பதை இஸ்லாம் இல்லை என்று கூறுபவன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்படுவான் என்பதே அந்த ஹதீஸின் விளக்கம். மதம் மாறியவனை விட இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தை சீர்குலைப்பவன் தான் மிகவும் தீமைக்குரியவன். 

பின்னால் வரவிருக்கும் கவாரிஜ் கூட்டத்தார்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். நபியவர்கள் கூறிய தன்மையுள்ள அந்தக் கூட்டத்தாரிடம் அலீ (ரலி) அவர்கள் போர் செய்தார்கள். இவர்கள் தங்களை முஸ்லிம் என்றே கூறிக் கொண்டிருந்தார்கள். குர்ஆனைப் படிக்கும் வழக்கம் உள்ளவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களை நடைமுறைப்படுத்துவதால் இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அலீ (ரலி) அவர்கள் ஒரு தங்கக் கட்டியை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பினார்கள். இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அதை நபி (ஸல்) அவர்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் எழுந்து வந்து நீங்கள் அநியாயமாகப் பங்கிட்டுள்ளீர்கள். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று கூறினார். இவரைப் பற்றியும் இவரது வழித்தோன்றல்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். 

இந்த மனிதனின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது. வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள். சிலை வணங்கிகளை விட்டு விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ஆது கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழிப்பேன் என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் :அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி (7432)

அலீ (ரலி) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் இந்த ஹதீஸ் கூறுகின்ற கருத்தின் அடிப்படையில் மார்க்கத்தில் இருந்து கொண்டே மார்க்கத்தை மாற்ற நினைத்தவர்களிடத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களிடத்திலும் தான் போர் புரிந்தார்கள். 

அலீ (ரலி) அவர்களிடம் (ஸனாதிகா என்று சொல்லப்படும்) இஸ்லாத்திற்கு விரோதமாகச் செயல்பட்ட சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து விட்டார்கள். இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்க மாட்டேன். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள் என்று கூறினார்கள். மாறாக நபி (ஸல்) அவர்கள் எவர் தமது மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறாரோ அவருக்கு மரண தண்டனை அளியுங்கள் என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரண தண்டனை அளித்திருப்பேன் என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : இக்ரிமா (ரலி)

நூல் : புகாரி (6922)

அலீ (ரலி) அவர்களால் கொல்லப்பட்டவர்கள் யாரென்றால் அலீ (ரலி) அவர்களைக் கடவுள் என்று சொன்னவர்கள். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்துடன் இணைந்திருந்தார்கள். அதனால் தான் அலீ (ரலி) அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்றார்கள். இவர்களுக்கு ராஃபிளா என்று சொல்லப்படும். இந்தக் கூட்டத்தினருக்கு தலைவனாக அப்துல்லாஹ் பின் சபஃ என்பவன் இருந்தான். இவன் தன்னை இஸ்லாமியனாகக் காட்டிக் கொண்டு இந்த மோசமான கொள்கையைத் தோற்றுவித்தான். 

இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையைச் சொன்ன இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸையே ஆதாரமாகக் காட்டினார்கள். இதிலிருந்து அந்த ஹதீஸ் யாரைக் கொல்ல வேண்டும் என்று சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

இந்த வரலாற்றுச் செய்தி ஹசன் என்ற தரத்தில் அமைந்தது என்று இப்னு ஹஜர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இமாம் ஷவ்கானீ அவர்கள் ஆதாரப்பூர்வமான செய்தி என்று தனது நூலில் குறிப்பிடுகிறார்கள். 

நபி (ஸல்) அவர்கள் மரணித்து அபூபக்ர் (ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்ததின் மூலம்) காஃபிராகி விட்டார்கள். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்கர் (ரலி) அவர்கள் தயாரானார்கள்) உமர் (ரலி) லா இலாஹ இல்லல்லாஹ் கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்? என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) உமரை நோக்கி அல்லாஹ்வின் மீதாணையாக தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போர்களுடன் நான் போர் புரிவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக நபி (ஸல்) அவர்களிடம் இவர்கள் வழங்கி வந்த ஒரு ஒட்டகக் குட்டியை வழங்க இவர்கள் மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன் என்றார். இது பற்றி உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன் என்றார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (1400)

அபூபக்கர் (ரலி) அவர்கள் யாரிடத்தில் போர் செய்தார்களோ அவர்கள் கலிமாச் சொன்னவர்கள். தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள். ஆனால் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகிய ஸகாத்தைக் கொடுக்க மறுத்தார்கள். ஸகாத் இல்லை என்றே இஸ்லாம் சொல்கிறது என்று வாதிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் இவர்களால் மாற்றப்பட்டு விடும் என்பதால் அபூபக்கர் (ரலி) அவர்கள் அவர்களிடத்தில் போர் தொடுத்தார்கள். 

தனது மார்க்கத்தை மாற்றுபவனைக் கொல்லுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன காரணத்தினால் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸகாத்தை மறுத்தவர்களிடத்தில் போர் புரிந்ததாக இமாம் புகாரி அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

மதம் மாறிவிட்டவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டுமா?

இஸ்லாத்தில் இருந்து கொண்டே புரட்சி செய்பவர்களுக்குத் தான் மரண தன்டனை என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் நிரூபணம் செய்கிறது. தனது தீனை மாற்றிக் கொண்டவனைக் கொல்லுங்கள் என்று கூறும் ஹதீஸ் மதம் மாறியவர்களைக் குறிக்கும் என்று வைத்துக் கொண்டாலும் மதம் மாறிய அனைவரையும் குறிக்காது. 

இஸ்லாத்தை விட்டு வேறொரு மதத்திற்குச் செல்பவர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒன்று மதம் மாறியதோடு யாருக்கும் எந்த இடையூறும் தராமல் தனது கொள்கையில் இருந்து கொள்பவர்கள்.

 இரண்டாவது வகையினர் மதம் மாறியதோடு இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுபவர்கள். இரண்டாவது வகையைச் சார்ந்த மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்பதற்குத் தான் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணம் முடித்த பிறகும் விபச்சாரம் செய்தவன் கல்லெரிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான் அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான் அல்லது நாடு கடத்தப்படுவான். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : நஸயீ (3980)

இஸ்லாத்தை விட்டும் வெளியேறியதோடு இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவனைத் தான் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மதம் மாறி இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படாமல் தான் விரும்பிய கொள்கையில் யாருக்கும் எந்த இடையூரையும் ஏற்படுத்தாமல் வாழுபவன் இந்த ஹதீஸீல் சொல்லப்பட்ட மூன்று நபர்களுள் அடங்க மாட்டான். 

இந்த மூன்று நபர்களைத் தவிர வேறு யாரையும் கொல்லக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது இப்பட்டியலில் அடங்காத ஒருவனைக் கொலை செய்வது எப்படி நியாயம்? இதற்குப் பிறகும் மதம் மாறியவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறினால் அநியாயமாகக் கொலை செய்த குற்றத்திற்காக மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இச்சட்டத்தைக் கூறிய இவர்கள் கொல்லப்பட வேண்டும். 

நபி (ஸல்) அவர்கள் கூறிய மூன்றாவது நபரைப் பற்றி அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். நபியவர்கள் அவனுக்குக் கூறிய அதே தண்டனையைத் தான் அல்லாஹ்வும் கூறுகிறான். 

கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

அல்குர்ஆன் (5 : 33)

மதம் மாறியவர்களைப் பற்றி பல இடங்களில் பேசிய இறைவன் அங்கெல்லாம் இந்தத் தண்டனையைப் பற்றிப் பேசவில்லை. மாறாக மதம் மாற்றியவர்களைப் பற்றி இங்கு பேசாமல் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் செய்பவர்களைப் பற்றி பேசுகின்ற இந்த இடத்தில் தான் மரணதண்டனையைக் கூறுகிறான். மதம் மாறாமல் தன்னை இஸ்லாமியன் என்று சொல்லிக் கொண்டே ஒருவன் எதிர்த்தாலும் அவனையும் கொல்லும்படித் தான் இஸ்லாம் கூறுகிறது. 

மதம் மாறியவன் மதம் மாறாதவன் என்று பாகுபடுத்தாமல் எதிரியாக மாறுபவன் யாராக இருந்தாலும் அவனைக் கொல்ல வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. இதிலிருந்து எதிராகச் செயல்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுமே தவிர மதம் மாறிவிட்டான் என்பதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

கை கால்களை வெட்ட வேண்டும் என்று இந்த வசனம் கூறும் சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் உக்ல் என்ற கூட்டத்தாருக்குச் செயல்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்தினர் மதம் மாறியோதோடில்லாமல் பல மோசடித்தனங்களைச் செய்தார்கள். 

உக்ல் மற்றும் உரைனா குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம் தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் பால்தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள். நாங்கள் விளைநிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லர். (நாங்கள் பால்தரும் கால்நடைகளைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்களாய் இருந்தோம்) என்று கூறினர். அவர்களுக்கு மதீனா(வின் தட்ப வெட்பம்) ஒத்துக் கொள்ளவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கும் படி உத்தரவிட்டார்கள். மேலும் ஒட்டகங்கள் (மேயும்) இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் மூத்திரத்தையும் பருகிக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றுக் கொண்டனர்) அவர்கள் ஹர்ரா பகுதியில் இருந்த போது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக மாறி விட்டனர். மேலும் நபி (ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டனர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (அவர்களைப் பிடித்து வர) அவர்களைத் தொடர்ந்து ஆளனுப்பினார்கள். (அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்கு கொண்டு வரப்பட்ட போது) அவர்களுக்குத் தண்டனை கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (மக்கள்) அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களுடைய கை கால்கள் வெட்டப்பட்டு ஹர்ரா பகுதியில் அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டு போயினர். 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) 

நூல் : புகாரி (4192)

நபி (ஸல்) அவர்களை ஏமாற்றி விட்டு மேய்ப்பவரையும் கொன்று விட்டு கால்நடைகளை திருடிச் சென்ற காரணத்தினால் தான் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கொல்லும்படி சொன்னார்கள். இன்னும் இவர்கள் மனப்பூர்வமாக இஸ்லாத்திற்கு வரவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களை ஏமாற்றுவதற்காகத் தான் வந்தார்கள். 

இவர்களுடைய இந்த கொடிய செயலை அபூகிலாபா என்ற அறிவிப்பாளர் பின்வருமாறு கூறுகிறார்.

ஓர் உயிரை (அநியாயமாக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்து அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த)வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்டமுடியுமா என்ன?

அறிவிப்பவர் : அபூ கிலாபா

நூல் : புகாரி (4610)

இந்த உக்ல் குலத்தார் செய்ததை விட கொடிய செயல் வேறெது? அவர்கள் இஸ்லாத்தை விட்டுவிட்டு கொலையும் செய்துவிட்டு கொள்ளையடித்தார்கள். 

அறிவிப்பவர் : அபூ கிலாபா 

நூல் : புகாரி (6899)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்ற செய்தியை அபூகிலாபா அவர்களும் அறிவிக்கிறார்கள். இதைக் கூறிவிட்டு உக்ல் கோத்திரத்தாரின் நிகழ்வை அவர் கூறுகிறார். 

அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று காரணங்களில் ஒன்றுக்காகவே தவிர எவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டதில்லை என்று நான் கூறினேன். (அந்த மூன்று காரணங்கள் வருமாறு)

1.             மன இச்சையின் பேரில் (அநியாயமாகப் படு)கொலை செய்தவர். (அதற்குத் தண்டனையாக) அவர் கொல்லப்படுவார். 

2.             திருமணமான பின்னர் விபச்சாரம் புரிந்த மனிதர்.

3.             அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரியத் துணிந்து இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டவர்.

அறிவிப்பவர் : அபூகிலாபா

நூல் : புகாரி (6899)

குழப்பம் செய்பவர்களுக்கே தண்டனை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாத்தில் குழப்பம் விளைவிப்பதற்காக வேண்டுமென்றே இஸ்லாத்தைத் தழுவிட்டு பிறகு இறை நிராகரிப்பில் இணைந்து கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களை இதன் மூலம் துன்புறுத்துவதை அவர்கள் நாடினார்கள். 

இவர்கள் இஸ்லாத்திற்கு வரும் போது மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வரவில்லை. மாறாக இஸ்லாத்தை ஏற்றுவிடக் கூடாது என்று எண்ணிக்கொண்டே இஸ்லாத்தில் குழப்பம் விளைவிப்பதற்காக வந்தார்கள். இத்தகையோரைப் பற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான். 

“நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்பட்டதை காலையில் நம்பி, மாலையில் மறுத்து விடுங்கள்! அப்போது தான் (மற்றவர்களும் அந்த மார்க்கத்திலிருந்து) விலகுவார்கள்” என்று வேதமுடையோரில் ஒரு குழுவினர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (3 : 72)

நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே! கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். 

அல்குர்ஆன் (5 : 41)

(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்தப் பாக்கியமும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் (3 : 176) 

இவர்களுடைய இந்தக் குழப்பம் விளைவிக்கும் செயலைத் தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தன் மார்க்கத்தை மாற்றியவனை கொல்லுங்கள் என்று கூறினார்கள் என்று விளங்கிக் கொண்டால் குர்ஆன் வசனத்தை வைத்து இந்த ஹதீஸை விளங்கிக் கொண்டதாக அமையும். மரண தண்டனை இவர்கள் செய்த குழப்பத்திற்கான தண்டனையே தவிர மதம் மாறியதற்கான தண்டனை அல்ல. 

நபி (ஸல்) அவர்கள் யாரைக் கொல்லுமாறு கூறினார்களோ அவர்கள் உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் வேறொன்றைக் காட்டிக் கொண்டிருந்த நயவஞ்சகர்கள். இந்த அடிப்படையில் குழப்பத்தை விளைவிக்கும் எண்ணத்தில் இஸ்லாத்தில் நுழைந்த மதம் மாறிகளைக் கொல்ல வேண்டுமே தவிர இந்தத் தவறான எண்ணத்தில் புகாமல் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு பிறகு மதம் மாறுபவர்களைக் கொல்வது கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நபி (ஸல்) அவர்களுடன் வாழவில்லை. மாறாக நபியவர்களை விட்டும் பிரிந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்ட இணை வைப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு போரிடுபவர்களாகத் தான் இருந்தார்கள். 

எனவே இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதத்தைத் தூக்குவார்கள். இஸ்லாமியர்களின் இரகசியங்களை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுப்பார்கள் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் மதம் மாறியவர்களைக் கொலை செய்யச் சொன்னார்கள். 

அதே நேரத்தில் இஸ்லாத்தைப் புறக்கணித்த நயவஞ்சகர்களைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. யார் யார் காஃபிர் என்று அவர்களுக்குத் தெரிந்தும் கூட அவர்கள் கொல்லவில்லை. ஏனென்றால் இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கவில்லை. ஏன் பலமுறை முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு இணை வைப்பாளர்களுக்கு எதிராகப் போர் புரிந்தார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்களுக்குத் தான் இந்தச் சட்டம் என்பதை இதிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். 

நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்னால் பல போர்கள் நடந்துள்ளன. இதுவெல்லாம் மதம் மாற்றத்தை அடிப்படையாக வைத்து நடக்கவில்லை. மாறாக முஸைலமா போன்றவர்கள் தங்களை நபி என்று சொல்லிக் கொண்டு இஸ்லாத்தைச் சீர்குலைக்கத் திட்டம் தீட்டியதற்காகத் தான் நடைபெற்றது. 

ஏகோபித்தக் கருத்தில்? ஏன் தடுமாற்றம்? 

மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்பதை அனைத்து அறிஞர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் கூட சில நேரங்களில் கொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்கள். 

ஒரு பெண் மதம் மாறிவிட்டால் அவளைக் கொல்லக் கூடாது என்று ஹனஃபீ மத்ஹபைச் சார்ந்த பல அறிஞர்கள் கூறுகிறார்கள். பெண் ஆயுதங்களைத் தூக்கி போர் செய்ய மாட்டாள் என்பதே இதற்குக் காரணம். இஸ்லாத்திற்கு ஒருவன் புதிதாக வந்து விட்ட சிறிது நாளில் மதம் மாறிவிட்டால் இவனுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்றும் சிலர் கூறுகிறார்கள். 

மொத்தத்தில் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைக் கூறுபவர்கள் கூட இச்சட்டத்தைச் சிலருக்குப் பொருத்துகிறார்கள். சிலருக்குத் தளர்த்துகிறார்கள் என்பதே உண்மை. மதம் மாறியவரைக் கொல்ல வேண்டும் என்ற இந்தச் சட்டத்தில் மாற்றுக் கருத்துள்ளவர்களும் இருக்கிறார்கள். 

நாம் மட்டும் இதை மறுக்கவில்லை. இமாம் சுஃப்யான் சவ்ரீ மற்றும் அந்நஹயீ ஆகிய இருவரும் மதம் மாறியவன் கொல்லப்படக் கூடாது. அவன் மரணிக்கும் வரை திருந்திக் கொள்ளும் படி அவனுக்குக் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இக்காலத்து அறிஞர்கள் பலர் நம்மை விட இச்சட்டத்தைப் பலமாக மறுத்துள்ளார்கள்.

எதிர் வாதங்களும் முறையான பதில்களும்.

மதம் மாறியவனைக் கொல்லுமாறு மார்க்கம் சொல்லவில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டினோம். எதிர்க் கருத்தைக் கொண்டவர்கள் இவற்றில் பெரும்பாலான ஆதாரங்களுக்குப் பதில் சொல்லாமல் ஒன்றிரண்டு ஆதாரங்களுக்கு மட்டும் அடிப்படையில்லாத பதிலைச் சொல்கிறார்கள்.

விளக்கம் : 1

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம் யாருக்காக இறங்கியதோ அவர்களுக்கு மட்டும் தான் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் பொருந்தும் இந்த அடிப்படையில் இஸ்லாத்திற்குள் வராமல் இருப்பவரை இஸ்லாத்திற்கு வருமாறு நிர்பந்திக்கக் கூடாது என்பதை மட்டும் தான் இந்த வசனம் சொல்கிறது. இஸ்லாத்திற்கு வந்து விட்டு மதம் மாறுபவனை நிர்பந்திக்கக் கூடாது என்று சொல்லவில்லை என்று வாதிடுகிறார்கள். இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை விளக்கும் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 

குழந்தைகள் பிறந்து அக்குழந்தைகள் அனைத்தும் மரணித்து விடும் போது தனக்கு பிறக்கின்ற குழந்தை உயிரோடு இருக்குமானால் அக்குழந்தையை யூதனாக மாற்றி விடுவேன் என்று (அறியாமைக் காலத்தில்) பெண் தன் மீது கடமையாக்கிக் கொள்பவளாக இருந்தாள். பனூ னளீர் என்ற (யூதக் கூட்டம் ஊரை விட்டும்) வெளியேற்றப்பட்ட போது அன்சாரிகளுடைய குழந்தைகளில் சிலரும் அதில் இருந்தார்கள். எனவே அன்சாரிகள் எங்கள் பிள்ளைகளை நாங்கள் (யூத மதத்தில்) விட்டு விட மாட்டோம் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்ற வசனத்தை இறக்கினான். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல் : அபூதாவுத் (2307)

பிறப்பிலே யூதர்களாக இருந்தவர்களை இஸ்லாத்திற்கு வரும்படி நிற்பந்திக்கக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. இஸ்லாத்திற்கு வந்துவிட்டு மதம் மாறியவனை திரும்ப இஸ்லாத்திற்கு வருமாறு வற்புறுத்துவதற்குத் தடையாக வசனம் இறங்கவில்லை. எனவே மதம் மாறியவனை நிர்பந்திப்பதற்கு தடையாக இந்த வசனத்தைக் காட்ட முடியாது என்று கூறுகிறார்கள். 

நமது விளக்கம்.

இவர்கள் விளங்கியிருப்பது முற்றிலும் தவறானது. ஒருவன் திருடும் போது தவறான காரியங்களில் ஈடுபடாதே என்று சொல்கிறோம். மறு நாள் அந்தத் திருடன் திருட்டை விட்டு விட்டு கொலையில் ஈடுபட்டு விட்டான். நாம் அவனிடம் நேற்றுத் தான் தவறான காரியங்களை செய்யாதே என்று உனக்குச் சொன்னேன் என்று கூறும் போது அவன் நான் திருடும் போது தான் இதைக் கூறினீர்கள். அதனால் நீங்கள் கூறிய வாசகம் திருடக் கூடாது என்பதை மட்டும் தான் காட்டும். கொலை செய்யக் கூடாது என்பதைக் குறிக்காது என்று கூறினால் அவன் கூறுவது சரியாகி விடுமா? இது போன்ற வாதம் தான் இது.

மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று குர்ஆன் கூறினால் எந்த நிர்பந்தமும் இல்லை என்று விளங்கிக் கொள்ள வேண்டுமே தவிர இந்த நிர்பந்தம் கூடும் அந்த நிர்பந்தம் கூடாது என்று பிரிப்பது அறிவீனம். 

பெண்களை நிர்பந்தமாக சொந்தமாக்காதீர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. இந்த வசனம் இறங்குவதற்கு முன்பு அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவியை அக்கணவனின் சொந்தக்காரர்கள் மணம் முடித்துக் கொள்வார்கள். அல்லது தாங்கள் விரும்பிய ஆட்களுக்கு மணமுடித்து வைப்பார்கள். இதைக் கண்டித்து இந்த வசனம் இறங்கியதாக புகாரியில் 4579 வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி கூறுகிறது. 

கணவனை இழந்த பெண்னை நிர்பந்தப்படுத்தக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. எனவே திருமணமே செய்யாத பெண்னை நிர்பந்திப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று இவர்கள் விளங்குவார்களா? நிச்சயமாக அவ்வாறு எவரும் விளங்க மாட்டோம். மாறாக பெண்னை நிர்பந்திக்கக் கூடாது என்ற பொதுவான தடையை வைத்துக் கொண்டு எந்தப் பெண்னையும் எந்த வகையிலும் நிர்பந்திக்கக் கூடாது என்றே விளங்குவோம். இது போன்று அமைந்த வசனம் தான் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம். 

மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது என்று குர்ஆன் சொல்வதால் எதுவெல்லாம் நிர்பந்தமாகுமோ அவை அனைத்தும் கூடாது என்று சொல்வது தான் குர்ஆனைப் புரிந்து கொள்ளும் முறையாகும்.

விளக்கம் : 2

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனம் மாற்றப்பட்டு விட்டது என்று கூறி அநியாயமாக அல்லாஹ்வுடைய பயமில்லாமல் சிறப்புமிக்க சூராவில் இடம்பெற்ற வசனத்தை ஓரங்கட்டப் பார்க்கிறார்கள். இணை வைப்பவர்களிடத்தில் போர் புரியுமாறு கட்டளையிடும் வசனங்களைச் சொல்லி மார்க்கத்தில் நிர்பந்தம் இருக்கிறது போர் புரியச் சொல்லும் இந்த வசனங்கள் நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனத்தை மாற்றி விட்டது என்கின்றனர். 

நமது விளக்கம்.

மனோஇச்சையைப் பின்பற்றுவதற்குச் சிறந்த உதாரணமாக இந்த விளக்கம் அமைந்துள்ளது. குர்ஆனுடைய சட்டம் மாற்றப்படுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்ல வேண்டும். முரண்பாடில்லாத வசனங்களுக்கு மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்தி ஒன்றை ஓரங்கட்டுவது முஸ்லிமிற்கு அழகானதல்ல. 

நிர்பந்தம் கிடையாது என்று கூறும் வசனம் மாற்றப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு அல்லாஹ் அடுத்த வரியிலே ஒரு காரணத்தையும் இணைத்துச் சொல்கிறான். அந்தக் காரணம் இருக்கும் போதெல்லாம் அந்தச் சட்டமும் நிலைத்திருக்கும். 

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (2 : 256)

இஸ்லாம் தெளிவான மார்க்கம் என்பதால் உண்மை எது பொய் எது என்பதைச் சிந்திப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். எனவே இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இச்சட்டத்தை மாற்றிவிட்டு நிர்பந்தத்தை மார்க்கம் ஏற்படுத்தியதென்றால் தெளிவாக இருந்த இஸ்லாம் தெளிவை இழந்து விட்டது. அதனால் நிர்பந்திக்கச் சொல்கிறது என்று பொருள் வரும். 

நபி (ஸல்) அவர்களால் இஸ்லாம் மென்மேலும் தெளிவுபடுத்தப்பட்டதால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் மென்மேலும் வலுப்பெற்றது என்று தான் சொல்ல முடியும். 

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?

அல்குர்ஆன் (10 : 99)

எல்லோருக்கும் நேர்வழி காட்டுவதை அல்லாஹ் நாடவில்லை. அல்லாஹ்வே நாடாத போது நபியே நீ எப்படி நிர்பந்திப்பாய்? என்று அல்லாஹ் கேட்கிறான். மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு இது போன்ற காரணம் சொல்லப்பட்டுள்ளது. 

பிற்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு நிர்பந்தம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது என்று சொன்னால் அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழி காட்ட மாட்டான் என்ற விதியை மாற்றி எல்லோருக்கும் நான் நேர்வழி காட்டுவேன் என்று தன்னுடைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டான் என்று கூற வேண்டிய கட்டாயம். வரும். 

அதிகமான மக்கள் நேர்வழி இல்லாமல் மரணிப்பதை கண்ணால் பார்க்கக் கூடிய நாம் இதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? எனவே காரணங்களோடு சொல்லப்பட்ட இந்த வசனம் மாற்றப்பட்டது என்று கூறுவது குர்ஆனை மறுத்த குற்றத்தில் நம்மைச் சேர்த்து விடும். அல்லாஹ் நம் அனைவரையும் இதை விட்டும் பாதுகாக்க வேண்டும். 

விளக்கம் : 3

நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.

“நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று (முஹம்மதே!) எச்சரிப்பீராக! 

அல்குர்ஆன் (4 : 137)

மதம் மாறியவர்களைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை நாம் முன் வைத்தோம். எதிர்த் தரப்பினர்கள் இந்த வசனத்தின் பின்பகுதி நயவஞ்சகர்களைப் பற்றிப் பேசுவதால் இங்கு சொல்லப்பட்டவர்கள் நயவஞ்சகர்கள் தான். மதம் மாறிகளைப் பற்றி இங்கு பேசப்படவில்லை. எனவே மதம் மாறிகளைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை ஆதாரமாக காட்டக் கூடாது என்கிறார்கள். 

நமது விளக்கம்.

இந்த வசனம் நயவஞ்சகர்களைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஏனென்றால் இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று நயவஞ்சகர்களைப் பற்றியும் அல்லாஹ் பின்வருமாறு நயவஞ்சகர்கள் (முனாஃபிகூன்) என்ற சூராவில் குறிப்பிடுகிறான். 

அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏக இறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

அல்குர்ஆன் (63 : 3)

எனவே இந்த வசனம் நயவஞ்சகர்களைக் குறிக்கிறது என்பது சரி தான். இதனால் நாம் வைத்த வாதத்திற்கு இந்த வசனம் எப்படிப் பொருந்தாமல் போகும்.? நயவஞ்சகனாக இருப்பவன் மதம் மாறியாகவும் இருக்க முடியும். நயவஞ்சகர்களில் மதம் மாறியவர்களைப் பற்றி இந்த வசனம் பேசுகிறது. 

இந்த நயவஞ்சகர்கள் ஈமான் கொண்டு பிறகு மறுத்து விட்டதாக அல்லாஹ் சொல்கிறான். ஈமான் கொண்டு விட்டு பிறகு இறை நிராகரிப்பாளனாக மாறியவன் மதம் மாறியவன் என்பதில் இவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதா? 

மதம் மாறிகளைக் கொலை செய்யக் கூடாது என்பதற்கு நயவஞ்சகர்களை நபி (ஸல்) அவர்கள் கொலை செய்யாமல் விட்டதை முன்பே ஆதாரமாகக் காட்டினோம். நயவஞ்சகர்களைப் பற்றி இந்த வசனம் பேசுவதால் இது மதம் மாறிகளைக் குறிக்காது என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமானது. 

இமாம் புகாரி அவர்கள் சஹீஹுல் புகாரியில் மதம் மாறிய ஆண் மதம் மாறிய பெண் தொடர்பான சட்டம் என்று தலைப்பிட்டு அதற்குக் கீழே பல வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். மதம் மாறிகளைப் பற்றி பேசவில்லை என்று எதிர்த் தரப்பினர் கூறிய மேலுள்ள வசனத்தையும் அங்கு பதிவு செய்துள்ளார்கள். மதம் மாறிகளைக் குறிக்காத வசனத்தை சம்பந்தமில்லாமல் இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்து விட்டார்கள் என்று இவர்கள் சொல்ல வருகிறார்கள். 

நமது கருத்திற்கு இந்த ஒன்றை மட்டும் ஆதாரமாக வைக்கவில்லை. நாம் பல வசனங்களைக் கூறியிருக்கும் போது இந்த ஒன்றுக்கு மட்டும் தப்பான விளக்கத்தைக் கொடுத்து விட்டு மீத வசனங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். 

புதிய ஆதாரங்கள்!

ஆதாரம் : 1

இஸ்லாத்தில் நிர்பந்தம் இருக்கிறது என்ற மோசமான கருத்தை நிலை நாட்ட பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை முஹம்மது” அல்லாஹ்வின் தூதர் என்று மனிதர்கள் உறுதியாக நம்பி தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள் இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது. 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (25)

இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை அவர்களிடம் போர் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனவே வாளால் இஸ்லாம் பரவியது என்று இஸ்லாமிய விரோதிகள் கூறும் கூற்று உண்மை தான் என்று இவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். 

நமது விளக்கம்.

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்கள் கூறுவது சரி போலத் தெரியும். ஆனால் போர் புரிவதற்கு இஸ்லாம் வகுத்துள்ள விதிமுறைகளைக் கவனித்தால் இந்த ஹதீஸை இவ்வாறு விளங்கக் கூடாது என்ற முடிவிற்கே நியாயமானவர்கள் வருவார்கள். திருக்குர்ஆன் அழகான இந்த விதிமுறைகளைக் கூறுகிறது. 

வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் :

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் (2 : 190)

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.

அல்குர்ஆன் (9 : 13)

சொந்த ஊரை விட்டு விரட்டியவர்களுடன் தான் போர் :

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

அல்குர்ஆன் (2 : 191)

“எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

அல்குர்ஆன் (22 : 40)

போரிலிருந்து விலகிக்கொள்வோருடன் போரில்லை :

(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (2 : 192)

அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்காகவே போர். போரை முதலில் துவக்கக் கூடாது : 

“எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்து வாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!” என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

அல்குர்ஆன் (4 : 75)

“போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்” என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன். “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்; 

அல்குர்ஆன் (22 : 39)

சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை :

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (8 : 61)

மதத்தைப் பரப்பப் போரில்லை : 

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (2 : 256)

இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் (9 : 6)

(ஏக இறைவனை) மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” என (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் (109)

குர்ஆன் மேற்கண்ட விதிமுறைகளைக் கூறுவதால் எதிர்த் தரப்பினர் சுட்டிக் காட்டிய ஹதீஸை குர்ஆனுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டே விளங்கிக் கொள்ள வேண்டும்.

1.             ஹதீஸில் இடம்பெற்றுள்ள மக்கள் என்ற வார்த்தை எல்லோரையும் எடுத்துக் கொள்ளாது மாறாக அநியாயமாகப் போர் செய்ய வருபவர்களை மாத்திரம் எடுத்துக் கொள்ளும்.

2.             மதத்தைப் பரப்புவதற்காகப் போரில்லை என்று குர்ஆன் கூறுவதால் இஸ்லாத்திற்கு பிறரைக் கொண்டு வருவதற்காகப் போர் செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிடப்பட்டார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக அநியாயத்தைத் தட்டிக் கேட்பதற்காக அக்கரமக்காரர்களிடம் போர் செய்யும் போது அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாக ஒத்துக் கொண்டால் இதற்கு மேல் அவர்களிடம் போரிடக் கூடாது. அக்கிரமத்தை ஒழிப்பது தான் போரின் நோக்கமே தவிர இஸ்லாத்திற்கு நிர்பந்தமாக இழுத்து வருவது நோக்கமல்ல. இஸ்லாமியர்களோடு இணைந்து கொள்கிறேன் என்று அவன் கூறுவதன் மூலம் போரை நிறுத்திக் கொள்ள விரும்புகிறான். 

அக்கிரமக்காரர்களுடன் செய்யும் போர் பின்வரும் காரணங்களால் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

1.             அவர்கள் சாமாதானத்தை விரும்பினால் இதற்கு மேல் போர் செய்யக் கூடாது. 

2.             ஜிஸ்யா வரி கொடுப்பதாகக் கூறினாலும் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

3.             இஸ்லாத்தில் இணைந்து கொள்வதாக கூறினாலும் போர் செய்வது கூடாது 

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த மூன்று காரணங்களில் ஒன்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஹீதீஸின் இறுதியில் இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள் என்று இடம் பெற்றுள்ள இந்த வாசகம் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. பின்வரும் சம்பவங்கள் இது தான் இந்த ஹதீஸின் நோக்கம் என்பதைத் தௌவாக உணர்த்துகிறது.

மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் (நபி (ஸல்) அவர்களிடம்) இறை மறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் என்னிடம் சண்டையிட்டான். அப்போது அவன் என் கைகளில் ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்து விட்டான். பிறகு அவன் என்னை விட்டு ஓடிப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து கொண்டு) அல்லாஹ்விற்கு அடிபணிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன் என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனைக் கொல்லாதே என்றார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே அவன் என் கையைத் துண்டித்து விட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான் என்று கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை நீ கொல்லாதே. அவ்வாறு நீ அவனைக் கொன்று விட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன் அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்று விடுவாய் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : மிக்தாத் (ரலி)

நூல் : முஸ்லிம் (155)

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது : எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஹுரக்கா கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய்ச் சேர்ந்தோம். அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்ட போது அவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்ல அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன் நாங்கள் (திரும்பி) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தி எட்டவே அவர்கள் என்னிடம் உஸாமா அவர் லாயிலாஹ இல்லல்லாஹு என்று மொழிந்தப் பிறகுமா அவரைக் கொன்றாய்.? என்று கேட்டார்கள். அவர் உயிரைப் பாதுகாக்கவே (அவ்வாறு கூறினார்) என்று நான் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் அவர் லா யிலாஹ இல்லல்லாஹு என்று சொன்ன பிறகுமா அவரைக் கொன்றாய்? என்று (மீண்டும்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் நான் (அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நான்றாயிருக்குமே (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே) என்று கூட ஆசைப்பட்டேன்.

அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல் : முஸ்லிம் (159)

ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு கூறினார் அல்லாஹ்வின் தூதரே என்று நான் சொன்னேன். அதை அவர் (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா? என்று (கடிந்து) கேட்டார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா (ரலி) 

நூல் : முஸ்லிம் (158)

அக்கிரமத்திற்கு எதிராக மட்டும் தான் போர் இருக்க வேண்டும். அக்கிரமத்திற்கு எதிராக நடத்தப்படும் போரில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக கூறி விட்டால் அவருடைய கூற்றைப் புறந்தள்ளிவிட்டு அவரைக் கொன்று விடக் கூடாது. மாறாக அவருடைய கூற்றை ஏற்று அவரைத் தாக்காமல் விட்டுவிட வேண்டும். இதைத் தான் எதிர்த் தரப்பினர்கள் எடுத்துக்காட்டிய ஹதீஸ் கூறுகிறது.

இஸ்லாம் அல்லாதவர்களின் மீது இஸ்லாத்தைத் திணிக்கக் கூடாது என்பதற்காகத் தான் ஜிஸ்யா என்ற வரியை இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் செல்வங்களுக்கு ஜகாத் வாங்கப்படுவதைப் போல் இவர்களிடம் இந்த வரி வாங்கப்படும். இந்த வரியை செலுத்திக் கொண்டு இஸ்லாத்தை ஏற்காதவர்கள் தங்கள் கொள்கையில் இருந்து கொள்ளலாம். 

இஸ்லாம் நிர்பந்தத்தை ஏற்படுத்தும் மார்க்கமாக இருந்திருந்தால் இஸ்லாத்திற்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை. வராதவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற ஒரு சட்டத்தை மாத்திரம் கூறியிருக்கும். நிர்பந்தம் இல்லை என்பதாலே இதற்கான மாற்று வழியாக ஜிஸ்யாவை ஆக்கியுள்ளது. 

ஆதாரம் : 2

மதம் மாறியவன் யாராக இருந்தாலும் அவனைக் கொல்ல வேண்டும் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. அவை

1.             திருமணமானவன் விபச்சாரம் செய்வது.

2.             ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாக கொலை செய்வது. 

3.             ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை விட்டுவிட்டவன். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : முஸ்லிம் (3465)

மார்க்கத்தை விட்டுவிட்டவனைக் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். 

நமது விளக்கம்.

மார்க்கத்தை விட்டு விட்டவன் என்ற சொல் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறியவனை மட்டும் குறிக்காது. இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாமியக் கடமைகளைப் புறக்கணிப்பவனும் மார்க்கத்தை விட்டவன் தான். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் மார்க்கத்தை விட்டவனாக இருக்க முடியும். 

உதாரணமாக இஸ்லாத்தை விட்டும் வெளியேறாமல் ஸகாத்தை மட்டும் மறுத்தவர்களிடத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் போர் செய்தார்கள். இவர்கள் வேறொரு மதத்திற்குச் சென்று விடவில்லை. மாறாக ஸகாத் என்ற தீனை விட்டுவிட்டார்கள். 

மேலும் இந்த ஹதீஸ் ஒரு முஸ்லிமை மூன்று காலக்கட்டத்தில் மட்டும் கொல்லலாம் என்று கூறுகிறது. முஸ்லிமைக் கொல்வதைப் பற்றி பேசுகிறதே தவிர மதம் மாறிய காஃபிர்களைப் பற்றி பேசவில்லை. எனவே ஹதீஸில் மூன்றாவதாக சொல்லப்பட்டவன் யாரென்றால் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டே ஆட்சியாளருக்குக் கட்டுப்படாமல் எதிராகக் கிளம்பியவன் தான்

இஸ்லாத்தை முழுமையாக விட்டு விட்டவனை இந்தச் செய்தி குறிக்கும் என்று வைத்துக் கொண்டாலும் இந்த ஒரு தன்மையுடன் இன்னொரு தன்மையான ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியவன் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துச் சொல்கிறார்கள். 

இந்த அடிப்படையில் ஒருவன் மதம் மாறினாலும் அவன் இஸ்லாமிய அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டுக் கொண்டு தான் விரும்பிய மார்க்கத்திற்குச் சென்றால் அவன் கொல்லப்பட மாட்டான். மாறாக அரசாங்கத்திற்குக் கட்டுப்படாமல் அதற்கு எதிராகக் கிளம்புபவன் தான் கொல்லப்படுவான். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதே மாதிரியான ஹதீஸ் இதைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணம் முடித்த பிறகும் விபச்சாரம் செய்தவன் கல்லெரிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான் அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான் அல்லது நாடு கடத்தப்படுவான். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : நஸயீ (3980)

ஆதாரம் : 3

மதம் மாறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 

அபூ மூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது : (யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டுப் பின்பு யூதராக மாறி விட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்த போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் வந்தார்கள். இவருக்கு என்ன? என்று முஆத் கேட்டார்கள். நான் இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டு யூதராகி விட்டார் என்று சொன்னேன். முஆத் (ரலி) அவர்கள் நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமர மாட்டேன். இது தான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும் என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)

நூல் : புகாரி (7157)

மதம் மாறிய யூதரைக் கொல்ல வேண்டும். இது தான் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் தீர்ப்பு என்று முஆத் (ரலி) அவர்கள் கூறுவதால் மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று எதிர்த் தரப்பினர் கூறுகிறார்கள்.

நமது விளக்கம்.

முஆத் (ரலி) அவர்கள் குர்ஆனுடைய ஒரு வசனத்தை அல்லது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸைச் சுட்டிக்காட்டி இது அல்லாஹ்வுடைய தீர்ப்பு இன்னும் அவனது தூதருடைய தீர்ப்பு என்று கூறவில்லை. மாறாக எந்த ஆதாரத்தையும் காட்டாமல் பொதுவாகவே இப்படிச் சொல்கிறார்கள். 

அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்றால் எந்த வசனத்தில் அல்லாஹ் மதம் மாறியவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளான்?. குர்ஆனில் அப்படி ஒரு கட்டளை இல்லவே இல்லை. மதம் மாறியவர்களைக் கொல்வது ரசூலுடைய தீர்ப்பு என்றால் ரசூல் எந்த ஹதீஸில் இவ்வாறு தீர்ப்பு வளங்கியுள்ளார்கள்? நபி (ஸல்) அவர்கள் மதம் மாறியவர்களைக் கொல்லுமாறு சொல்லவில்லை என்பதை மேலே நிரூபித்திருக்கிறோம். 

சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் கூறாததை அவர்கள் பெயரால் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்பதில் எள்ளளவும் நமக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு வசனத்தையோ அல்லது ஹதீஸையோ புரிந்து கொள்வதில் மனிதன் என்ற அடிப்படையில் தவறு அவர்களிடம் வர வாய்ப்புண்டு. அவர்கள் எந்த ஆதாரத்திலிருந்து இதை விளங்கினார்களோ அந்த ஆதாரத்திலிருந்து முறையாக இவர்கள் தீர்ப்பளித்திருக்கவும் வாய்ப்புள்ளது. புரிந்து கொள்வதில் தவறு ஏற்பட்டு தவறாக தீர்ப்பளிக்கவும் வாய்ப்புள்ளது.

 ஏனென்றால் இச்சட்டத்தை நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக முஆத் (ரலி) அவர்கள் சொல்லவில்லை. அல்லது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு யாருக்காவது தீர்ப்பளித்ததைக் கண்டதாகவும் அவர்கள் கூறவில்லை. ஒரு ஹதீஸிலிருந்து தானாக விளங்கியும் இவ்வாறு கூற முடியும். 

சரியாகவும் தவறாகவும் கூறியிருக்க வாய்ப்பு இருக்கும் போது இதைக் கொண்டு வந்து நிறுத்தி ஒருவரைக் கொல்வது சம்பந்தமான விஷயத்தை நிறுவக் கூடாது. 

இதற்குச் சிறந்த உதாரணமாக பின்வரும் செய்தியை எடுத்துக் கொள்ளலாம்.

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் பால்குடியைப் பற்றி ஏதோ கேட்கப்பட்டது. பால்குடி சகோதரியை அல்லாஹ் (திருமணம் புரிய) தடைசெய்துள்ளான் என்பதைத் தவிர வேறெதுவும் நமக்குத் தெரியாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உடனே நான் முஃமின்களின் தலைவர் இப்னு ஜுபைர் அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ உறிஞ்சுப் பால் குடிப்பதால் பால்குடி உறவு ஏற்படாது என்று கூறுகிறார்கள் என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் அவர்கள் உனது மற்றும் உன்னுடன் இருக்கும் முஃமின்களின் தலைவரின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : அம்ர் பின் தீனார் 

நூல் : சுனனு சயீத் பின் மன்சூர் பாகம் : 3 பக்கம் : 30 

ஒரு தடவை அல்லது இரு தடவை பால்குடிப்பதால் மட்டும் பால்குடி உறவு ஏற்படாது என்று இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுவது தான் சரி. ஏனென்றால் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இப்னு உமர் (ரலி) அவர்கள் இதை மறுத்து கொஞ்சம் பால் குடித்துவிட்டாலே பால்குடி உறவு ஏற்பட்டு விடும் என்று கூறுகிறார்கள். 

ஏனென்றால் ஹதீஸில் சொல்லப்பட்ட இச்சட்டம் குர்ஆனில் இல்லை. இந்த ஹதீஸ் இப்னு உமருக்குக் கிடைக்காத காரணத்தினால் தவறாக விளங்கிக் கொண்டு அதை அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்று கூறுகிறார். இப்னு உமர் அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்று கூறி விட்டதால் அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு ஜுபைர் கூறுவதை விட்டுவிட முடியுமா? 

எனவே முஆத் (ரலி) அவர்கள் இது அல்லாஹ் மற்றும் அவனது தீர்ப்பு என்று எந்த ஆதாரத்தை வைத்துச் சொன்னார்களோ அந்த ஆதாரம் நமக்கு காண்பிக்கப்பட்ட பிறகு தான் இது உண்மையில் அல்லாஹ்வுடைய தீர்ப்பா இல்லையா? என்று முடிவு செய்ய முடியும். 

ஒரு பிரச்சனைக்கு சரியான முடிவைக் காணுவதாக இருந்தால் அது தொடர்பாக வரும் அனைத்து ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துத் தான் முடிவைக் காண வேண்டும். மதம் மாறியவர்களாக இருந்தாலும் அவர்கள் இஸ்லாமிய விரோதிகளாக மாறும் போது தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதை பல ஹதீஸ்களின் மூலம் முன்பே நிரூபித்தோம். 

எதிர்த் தரப்பினர் எடுத்துக் காட்டிய ஹதீஸில் யூதன் மதம் மாறி இஸ்லாத்திற்கு எதிராகச் சென்றவன் என்றோ அல்லது எதிரி அல்ல என்றோ இடம் பெறவில்லை. பொதுவாக மதம் மாறியவன் என்று தான் வருகிறது. இஸ்லாமிய விரோதியாக மாறியவனைத் தான் கொல்ல வேண்டும் என்று பல ஹதீஸ்கள் கூறுவதால் இந்த யூதன் இஸ்லாத்திற்கு விரோதமாகச் சென்றதால் முஆத் (ரலி) அவர்கள் கொல்லும் படி கூறினார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். இது தான் ஹதீஸையும் நபித்தோழர்களின் செயலையும் இணைத்து விளங்கியதாக அமையும்.

மதம் மாறியதோடு எதிராகச் செல்பவனைக் கொல்ல வேண்டும் என்பதைத் தான் ஹதீஸ் சொல்கிறது என்பதை குர்ஆன் ஹதீஸ் வாயிலாகத் தெரிந்து கொண்டோம். கொல்லுங்கள் என்ற இந்தக் கட்டளை கூட கட்டாயம் கொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதல்ல. மாறாக இப்படிப்பட்டவர்களைக் கொலை செய்வது குற்றமல்ல. ஆகுமானது என்பதற்காகத் தான் சொல்லப்பட்டுள்ளது. 

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் இச்சட்டத்தை சிலருக்கு செயல்படுத்தியிருக்கிறார்கள். சிலருக்கு செயல்படுத்தாமலும் இருந்திருக்கிறார்கள். இத்தலைப்பு சம்பந்தமாக நாம் சுட்டிக் காட்டிய ஆதாரங்களிலிருந்தே இதைப் புரிந்து கொள்ள முடியும். 

நடைமுறை சிக்கல்கள்.

இச்சட்டம் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதுடன் பல நடைமுறைச் சிக்கல்களையும் தோற்றுவிக்கிறது. 

1.             மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று நாம் கூறினால் இஸ்லாத்திற்கு வந்தவன் இஸ்லாத்தைப் பற்றி சிந்திக்கப் பயப்படுவான். அவனுக்கு ஏற்படும் சந்தேகங்களை வெளிக்கொணர அஞ்சுவான். ஆனால் இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கூறி விளங்கிக் கொள்ள முயற்சிப்பான். அவன் மேலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கு இம்முறை உதவும். இல்லையென்றால் இந்தச் சந்தேகங்கள் அவனுக்கு மிகைத்து இறுதியில் மதம் மாறுகின்ற நிலைக்குத் தள்ளப்படுவான். 

2.             அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் உண்மையானதென்றும் தெளிவானதென்றும் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலைத் தரக்கூடியதென்றும் நாம் நம்பும் போது ஏன் இப்படி ஒரு சட்டத்தை இயற்றி நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்?

3.             மாற்று மதத்திற்கு மாறியவனைக் கொலை செய்வது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் மதவெறியைத் தான் உருவாக்கும். இஸ்லாமியருடன் பழக்கம் வைப்பதை மக்கள் விட்டுவிட்டு இஸ்லாத்தின் எதிரிகளோடு இணைந்து கொள்வார்கள்.

4.             இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தான் இஸ்லாத்தை விளங்காத மக்கள் கூட விளங்கிக் கொள்வதற்காக இஸ்லாத்தில் இணைந்து கொள்வார்கள். இதன் மூலம் அவர்கள் உண்மையான முஸ்லிமாவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். மதம் மாறியவரைக் கொலை செய்வோம் என்றால் விளங்க நினைப்பவர்கள் கூட பயந்து கொண்டு இதில் இணைய மறுத்து விடுவார்கள். 

5.             இதை இஸ்லாமியச் சட்டம் என்றால் உலக மக்களிடையே இஸ்லாம் கொடூரமான மார்க்கம் என்ற தவறான கொள்கை எளிதாக பரவிவிடும். இன்னும் இஸ்லாம் தவறான கொள்கையுள்ள மார்க்கம் என்பதால் தான் சவாலை எதிர் கொள்ளாமல் நிர்பந்தப்படுத்துகிறது என்ற எண்ணமும் அவர்களுடைய மனதில் எழும்.

6.             இஸ்லாம் ஒளிவு மறைவு இல்லாத மார்க்கம் என்பதால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறுபவர்கள் மேடை அமைத்து இச்சட்டத்தைப் பகிரங்கப்படுத்துவார்களா? பகிரங்கப்படுத்த முடியாத ஒரு சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குச் சொல்வார்களா?

7.             இஸ்லாத்தை விரும்பாதவர்களை இஸ்லாமிய சமுதாயத்தில் நிர்பந்தப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தால் அவன் இச்சமுதாயத்திற்கு தீங்கு செய்ய நினைப்பானே தவிர நன்மை செய்ய நாட மாட்டான். 

8.             இஸ்லாத்தை விட்டு யாரும் வெளியேறக் கூடாது. அப்படி வெளியேறினால் கொல்லப்படுவார்கள் என்று ஒரு புறம் நாம் கூறிக் கொண்டு இன்னொரு புறம் மாற்று மதத்தார்களை நோக்கி உங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு எங்கள் மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று கூறுவது நம்மை வெறி பிடித்தவர்களாக மக்கள் மன்றத்தில் காட்டும். முஸ்லிம்கள் நம் மார்க்கத்திற்கு வர தடைபோடும் போது நாம் அவர்களுடைய மார்க்கத்தைக் கேட்பதற்கு ஏன் செல்ல வேண்டும் என்று மக்கள் கருதினால் இது நம்முடைய அழைப்புப் பணிக்கு பெரும் முட்டுக்கட்டையாக வந்தமையும்.

9.             இஸ்லாம் அழகிய மார்க்கம் என்று நாம் அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளோம். மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது என்றால் இச்சட்டம் அறிவுப்பூர்வமானது. அழகானது என்பதை நிரூபிக்கும் கடமை இச்சட்டத்தைக் கூறுபவர்களுக்கு உண்டு. இவர்கள் இந்தக் கோரமான சட்டத்தை அழகானது அறிவிப்பூர்வமானது என்று எப்படி நிரூபிப்பார்கள்?

பருவ வயதை அடைந்தவருக்கு பால்புகட்டுதல்.

paruwawayathu

நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள் சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார். மேலும் அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல் (சாலிமை அபூஹுதைஃபா வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்) மேலும் அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை (யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது. 

ஆகவே நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அது தான் அல்லாஹ்விடத்தில் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரராகவும் உங்கள் மார்க்கச் சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள் எனும் (33 : 5ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது).

பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார். பிறகு அபூஹுதைஃபா பின் உத்பா அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் சாலிமை பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33 : 5 ஆவது) வசனத்தை அருளி விட்டான் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (5088)

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே. அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள், நூல் : முஸ்லிம் (2878)

சஹ்லா (ரலி) அவர்களும் அவரது கணவர் அபூஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது. 

குர்ஆனுடன் முரண்படுகிறது.

பால்குடி உறவு ஏற்படுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. பருவ வயதை அடைந்த ஆணிற்கு ஒரு பெண் பால் புகட்டினாலும் அந்தப் பெண் அந்த ஆணிற்கு தாயாக மாறி விடுவாள் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம். 

அல்லாஹ் பால்குடி சட்டத்திற்கு குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்தை எல்லையாக நிர்ணயிக்கிறான். இந்த எல்லையைத் தாண்டிய ஒருவர் பால் குடிப்பதினால் பால்குடி உறவு ஏற்படாது என்று பின்வரும் வசனங்கள் கூறுகிறது.

1. பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். 

அல்குர்ஆன் (2 : 233)

2. மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

 அல்குர்ஆன் (31 : 14)

3. அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

அல்குர்ஆன் (46 : 15)

மனிதனை மனித வடிவில் தாய் 6 மாதங்கள் சுமக்கிறாள். அவனுக்கு பால்புகட்டியது 24 மாதங்கள். அதாவது இரு வருடம். இந்த 6 மாதத்தையும் 24 மாதத்தையும் சேர்த்து 30 மாதங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். 

பால்குடி காலம் இரண்டு வருடங்கள் தான் என்று மேலுள்ள வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கும் போது பருவ வயதை அடைந்த சாலிமிற்கு பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் எப்படிச் சொல்லியிருப்பார்கள்? 

4. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் (24 : 30)

ஒரு ஆண் அன்னியப் பெண்னைப் பார்ப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தில் சாலிம் சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் பால் குடித்ததாக வந்துள்ளது. பார்ப்பதைக் காட்டிலும் பெண்ணுடைய மறைவிடத்தில் ஆணுடைய வாய் உரசுவது என்பது பன்மடங்கு ஆபாசமானது. அபத்தமானது.

மொத்தத்தில் மேலுள்ள வசனம் கூறும் இஸ்லாமிய ஒழுக்க விதிகளைத் தகர்த்தெரியும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதற்குப் பிறகும் சாலிமுடைய சம்பவத்தை உண்மை என்று நம்பினால் மேற்கண்ட வசனம் கூறும் ஒழுங்கு முறையைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிவகை செய்தார்கள் என்று நம்ப வேண்டிய நிலை வரும். 

இன்று உலகத்தில் எந்த மதத்தினர்களும் கடைப்பிடிக்காத ஒரு அற்புதமான வழிமுறையான பர்தாவை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். பெண்கள் மார்பகத்தை மறைக்க வேண்டும் என்பது இறைக் கட்டளை. 

வீட்டுக்கு அதிகமாக வருபவர்களுக்கு பால்புகட்டி விட்டால் பர்தாவைப் பேண வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தச் சம்பவம் கூறுகிறது. பர்தா என்ற அழகிய நெறியை ஒழிப்பதற்கு இஸ்லாமிய எதிரிகளால் உருவாக்கப்பட்டதாகத் தான் இச்செய்தி இருக்க முடியும். 

தாயின் பிரிவைத் தாங்காமல் இருப்பதற்கு சாலிம் (ரலி) அவர்கள் ஒன்றும் பச்சிளங்குழந்தை இல்லை. ஆண்கள் விளங்கிக் கொள்ளும் விஷயங்களை விளங்கி திருமணம் முடித்து பருவ வயதை அடைந்தவர். இவரால் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியாதா? 

குர்ஆன் கூறும் அனைத்து விதிகளையும் தளர்த்துவதற்கு அப்படியென்ன நிர்பந்தம் சாலிம் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது? சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனி வீட்டை உருவாக்கி முறையான அடிப்படையிலே வாழ்ந்திருக்கலாம் இல்லையா? 

ஒரு பெண் நம்மிடத்தில் இது போன்ற பிரச்சனையைக் கொண்டு வந்தால் அப்பெண்ணிற்கு பார்தாவைக் கடைத்பிடிக்கும் படி கூறுவோமே தவிர ஒரு போதும் ஆணிற்கு பால்புகட்டும் படி கூற மாட்டோம். நாம் கூட செய்யாத ஒரு மோசச் செயலை நபியவர்கள் செய்தார்கள் என்று கூறுவது நபி (ஸல்) அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவதாக உள்ளது.

5. அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 5)

தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் சொந்தக் குழந்தையாக ஆக முடியாது. மாறாக அவர்களைக் கொள்கைச் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அந்நிய ஆணிடத்தில் பேண வேண்டிய வழிமுறைகளை வளர்ப்புப் பிள்ளைகளிடத்திலும் பேண வேண்டும். இக்கருத்தையே இந்த வசனம் கூறுகிறது.

ஆனால் சாலிமுடைய சம்பவம் குர்ஆனுடைய இந்த வசனத்திற்கு எதிராக வளர்ப்புப் பிள்ளையை சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கான தந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அல்லாஹ்வுடைய சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு மாற்று வழியைச் சொல்லித் தருகிறது. இதனால் தான் சாலிமுடைய சம்பவத்தைச் சிலர் சுட்டிக்காட்டி ஹராமான ஒன்றை ஹலால் ஆக்குவதற்கான தந்திரங்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறுகிறார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்ததே தவிர குர்ஆனில் உள்ள சட்டங்களைத் தளர்த்துவதற்காக அவர்கள் ஒரு போதும் முயற்சித்ததே இல்லை. மேலுள்ள வசனத்தில் இறைவன் கற்றுத் தருகின்ற ஒழுங்கு முறையைச் சீர்குலைத்து அதற்கு மாற்றமான வேறொரு வழியை இச்சம்பவம் கற்றுத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

மகன் தாயிடத்தில் சாதாரணமாக வந்து செல்வதைப் போல் ஒரு அன்னிய ஆண் அன்னியத் பெண்ணிடம் வந்து போவதற்கான வழியை இந்த ஹதீஸ் கற்றுத் தருகிறது. குர்ஆனிற்கு எதிரான இந்த வழியை நாம் திறந்து விட்டால் இதுவே விபச்சாரம் பெருகுவதற்குக் காரணமாக அமைந்து விடும். 

பருவ வயதை அடைந்த ஆண் பெண்ணிடத்தில் பால்குடித்து விடுவதால் அப்பெண்ணின் மீது அவனுக்கோ அல்லது அவனின் மீது அப்பெண்ணிற்கோ ஆசை ஏற்படாது என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். இந்த வழி ஒழுக்கமுள்ள இளைஞர்களை விபச்சாரத்தின் பால் தள்ளுகின்ற மோசமான வழி. 

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் மோதுகிறது.

பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் பால்குடி உறவு 2 வருடத்திற்குள் தான் ஏற்படும். அதற்குப் பிறகு குடித்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தைக் கூறுகிறது. 

1. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான் இவர் என் (பால்குடி) சகோதரர் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்) தான் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (5102)

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பசியைப் போக்குவதற்கு தாயின் பாலே உதவும். இக்கால கட்டத்தில் இப்பாலையன்றி வேறு உணவைக் குழந்தையின் உடல் அங்கீகரிக்காது. இவ்வயதைக் கடந்துவிட்ட குழந்தைகள் பால் அல்லாத வேறு உணவுகளை உட்கொள்ளும் நிலையை அடைந்து விடுகின்றன. எனவே பசிக்காகப் பாலருந்தும் பருவம் இந்த இரண்டு வருடங்கள் தான். 

ஒரு ஆண் தன்னுடைய மனைவியிடம் அமர்ந்திருப்பதைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் கோபமடைகிறார்கள். அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடி சகோதரர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன போதும் உங்கள் பால்குடி சகோதரர் யார் என்பதை உற்றுப் பாருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையைக் கவனிக்க வேண்டும். 

நாம் பால் குடித்த தாயிடம் ஒருவர் பால் குடித்து விடுவதால் அவர் நமது சகோதரனாக ஆகி விடமுடியாது. அவர் எப்போது பால் குடித்தார்? 2 வருடத்திற்குள் அவர் குடித்தாரா? அல்லது அதற்குப் பிறகு குடித்தாரா? என்று உற்று நோக்க வேண்டும். 2 வருடத்திற்குள் அவர் குடித்திருந்தால் அவர் நம் சகோதரர். இதற்குப் பிறகு அருந்தியிருந்தால் அவர் நமது பால்குடிச் சகோதரராக ஆக மாட்டார். 

இந்த வித்தியாசத்தைப் பார்க்காமல் பால் குடித்து விட்டார் என்பதற்காக அவரை நம் சகோதரர் என்று எண்ணி சகோதரனிடத்தில் நடந்து கொள்வதைப் போல் அவரிடத்தில் நடந்து கொள்ளக் கூடாது. இதையே நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குக் கூறி எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படி கூறுகிறார்கள். 

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பால் புகட்டுவது இரண்டு வருடத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : தாரகுத்னீ பாகம் : 10 பக்கம் : 152

3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால் குடிகாலம் (2 வருடம் முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) 

நூல் : திர்மிதி (1072)

இந்த ஹதீஸை இமாம் திர்மிதி அவர்கள் பதிவு செய்து விட்டு இது ஹசன் சஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) என்ற தரத்தில் அமைந்தது என்று கூறியுள்ளார்கள். இரண்டு வருடத்திற்குள் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்பதை இந்த ஹதீஸ் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. 

மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் சாலிமுடைய சம்பவம் முரண்படுவதால் இந்தச் சம்பவம் உண்மையல்ல என்றே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.

சரிகாணுபவர்களின் விளக்கம்.

இந்த ஹதீஸைக் சரிகாணுபவர்கள் இதற்கு இரண்டு விதமான விளக்கத்தைத் தருகிறார்கள்.

1.             பருவ வயதை அடைந்தவருக்கு பால்புகட்டுதல் என்ற சட்டம் சாலிமிற்கு மட்டும் உரியது. 2 வருடத்திற்குள் தான் பால்குடிச் சட்டம் ஏற்படும் என்று கூறும் குர்ஆனுடைய சட்டத்திலிருந்து இது விதிவிலக்கானது. எனவே குர்ஆன் வசனத்திற்கும் விதிவிலக்கான இந்த ஹதீஸிற்கும் மத்தியில் எந்த முரண்பாடும் இல்லை. 

2.             நபி (ஸல்) அவர்கள் சஹ்லா அவர்களுக்கு சாலிமுடைய வாய் படுமாறு நேரடியாகப் பால் கொடுக்கச் சொன்னதாக எந்த வாசகமும் ஹதீஸில் இடம் பெறவில்லை. பால் கொடு என்றே உள்ளது. எனவே கறந்து கொடுத்திருப்பார்கள். இமாம் நவவீ அவர்கள் முஸ்லிமிற்கு அவர்கள் எழுதிய விரிவுரையில் இந்த விளக்கத்தைப் பதிவு செய்துள்ளார்கள். 

ஹதீஸிற்கு நல்ல ஒரு விளக்கத்தைக் கொடுத்து அதில் உள்ள முரண்பாட்டை நீக்க வேண்டும் என்பதில் இவர்களை விடப் பன்மடங்கு நமக்கு அக்கரையுள்ளது. இவர்கள் கூறும் இந்த விளக்கம் ஒன்றும் புதிதல்ல. இந்த ஹதீஸைக் குறை காணுவதற்கு முன்பே இந்த விளக்கங்களைக் கொடுத்து முரண்பாட்டை நீக்க முடியுமா? என்று யோசித்து இந்த விளக்கம் இந்த ஹதீஸிற்குப் பொருந்தாது என்று உறுதியான பின்பே இந்த ஹதீஸை விமர்சித்தோம். 

விளக்கம் கொடுப்பது முக்கியமல்ல. அந்த விளக்கம் இந்த ஹதீஸுடன் பொருந்திப் போகின்ற வகையிலும் சரியான நிலைபாட்டிற்கு எதிராக இல்லாத வகையிலும் அமைந்திருக்க வேண்டும். 

நமது விளக்கம் : 1

நபி (ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரி என்பதால் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களையும் பாகுபாடு இல்லாமல் அனைவரும் எடுத்துச் செயல்பட வேண்டும். இந்த அடிப்படையில் தான் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். பின்வரும் வசனம் இதையே உணர்த்துகிறது. 

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! 

அல்குர்ஆன் (59 : 7)

சில நேரங்களில் சிலருக்கு பொதுவான சட்டத்திலிருந்து விதிவிலக்கைத் தரும் அதிகாரம் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் யாருக்கு எது விதிவிலக்கு என்பதை தெளிவாக உணர்த்தினால் அதை விதிவிலக்கு என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பின்வரும் ஹதீஸ் உதாரணமாக உள்ளது. 

“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார்கள். அவர் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விடச் சிறந்த ஆறு மாத குட்டி உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா (ரலி)

நூற்கள் : புகாரி (5560) 

ஆறு மாதக் குட்டியைக் குர்பானி கொடுப்பது யாருக்கும் அனுமதியில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களுக்கு மட்டும் இவ்விஷயத்தில் அனுமதி வழங்கியுள்ளார்கள். இச்சலுகை அபூதர் (ரலி) அவர்களுக்கு மட்டும் உரியது என்பதை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள். 

தனிப்பட்ட சலுகை என்றோ விதிவிலக்கென்றோ சொல்வதாக இருந்தால் இது போன்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாக உணர்த்த வேண்டும். அல்லது தெளிவாக உணர்த்தா விட்டாலும் விதிவிலக்கு என்பதைச் சுட்டுவதற்குரிய வாசகம் ஹதீஸில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு உதாரணமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்துக் கொள்ளலாம். 

நபி (ஸல்) அவர்கள் பத்ரு கிணற்றுக்கருகில் நின்று கொண்டு (கிணற்றில் வீசப்பட்ட இறந்து விட்ட எதிரிகளைப் பார்த்து) உங்களது இறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா? என்று கூறினார்கள். பின்பு நான் கூறுவதை இவர்கள் இப்போது செவியுறுகிறார்கள் என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள்

நூல் : புகாரி (3981)

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது பொதுவான விதி. ஆனால் இந்த விதிக்கு விலக்காக இறந்துவிட்ட எதிரிகள் இந்த இடத்தில் மட்டும் கேட்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறவில்லை. மாறாக இப்போது கேட்கிறார்கள் என்று கூறுவதன் மூலம் எப்போதும் கேட்க மாட்டார்கள். விதிவிலக்காக இப்போது தான் கேட்பார்கள் என்று உணர்த்துகிறார்கள். 

பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த பெண் அல்லது இளைஞர் ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என மக்கள் தெரிவித்தனர். நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதிவிட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள் என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு இந்த அடக்கத்தலங்கள் அவற்றில் வசிப்போருக்கு இருள் நிறைந்து காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (1742)

இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு மண்ணறையில் சென்று நாம் இறந்தவருக்கு ஜனாஸா தொழுகலாம் என்று விளங்கக் கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் இது எனக்கு மட்டும் உரிய சட்டம் என்று தெளிவாகக் கூறாவிட்டாலும் எனது தொழுகையின் மூலம் என்று கூறுவதால் இந்த வழிமுறை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது என்பதை விளங்கிக் கொள்கிறோம். 

இது போன்று சாலிமிற்குச் சொன்ன சட்டம் சாலிமிற்கு மட்டும் உரியது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவோ மறைமுகமாகவோ கூறினார்களா? என்பதே நமது கேள்வி. அவ்வாறு கூறாத போது எல்லோருக்கும் பொருந்துமாறு அமைந்த ஹதீஸை சாலிமிற்கு மட்டும் குறிப்பானது என்று கூறி இதை ஓரங்கட்டுவது ஏன்?

 இந்தச் செய்தி விகாரமான முடிவைத் தருவதால் இதைச் செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்த இவர்கள் சாலிமிற்கு மட்டும் உரியது என்று கூறி அந்தக் காலத்துடன் இந்த அசிங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட எண்ணுவது தான் ஹதீஸைப் பாதுகாக்கும் முறையா? 

இந்தச் சம்பவத்தில் வீடு நெருக்கடியாக இருப்பதாகவும் சாலிமை பிள்ளை போன்று வளர்த்து விட்டதாகவும் பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது. இச்சட்டம் எல்லோருக்கும் உரியது என்று கூறாவிட்டாலும் குறைந்த பட்சம் இது போன்ற நிலை யார் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களும் இந்தச் சட்டத்தை அமுல்படுத்தலாம் என்றாவது இவர்கள் கூற வேண்டும்.

சாலிமிற்கு மட்டும் இச்சட்டம் உரியது என்று கூறுவதினால் இவர்களும் ஒரு விதத்தில் நம்மைப் போன்று இந்த ஹதீஸை மறுக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் இதை நபி (ஸல்) அவர்கள் செய்யச் சொன்னார்கள் என்பதை மட்டும் ஒத்துக் கொண்டு இவர்கள் செயல்படுத்த மறுக்கிறார்கள். 

இந்தச் செய்தி விகாரமான பொருளைத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ள மனதில்லாமல் இச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்று எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் சிலர் கூறியுள்ளார்கள். நாம் கூறியதைப் போன்று தெளிவாக யாரும் மறுக்கவில்லை என்றாலும் இந்த ஹதீஸை ஓரங்கட்டுவதற்குரிய முயற்சிகளை நமக்கு முன்பே செய்துள்ளார்கள். 

இவர்கள் கையில் எடுத்துள்ள பிரத்யேகமான சலுகை என்ற இந்த அளவுகோலை நாம் கையில் எடுத்து பல ஹதீஸ்களுக்கு தீர்ப்பு சொன்னால் இவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். 

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நெஞ்சில் கையை கட்டினார்கள் என்று வரும் செய்தி அவர்களுக்கு மட்டும் உரியது என்று வாதிட்டால் அந்த வாதம் சரியா? இப்படியே பல ஹதீஸ்களுக்கு நம் மனம் போன போக்கில் பிரத்யேகமானது என்று கூறினால் மார்க்கத்தை இழக்க நேரிடும். எனவே பிரத்யேகமான சட்டம் என்று கூறுவதானால் மேல் சொன்ன அளவுகோலைப் பயன்படுத்தியே சொல்ல வேண்டும். 

யூகம் வேண்டுமா? ஹதீஸ் வேண்டுமா?

இந்த விளக்கத்தை இந்த அறிஞர்கள் கூறுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உள்ளது. ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்களின் அனைத்து நபிமார்களும் இச்சட்டம் சாலிமிற்கு மட்டும் உரியது என்று கூறியுள்ளதால் இந்த விளக்கம் தான் சரி என்று நினைக்கிறார்கள். 

ஆனால் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் கூறியதாக வரும் வாசகங்களை முறையாகக் கவனித்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள்.

(சாலிமிற்கு பால்புகட்டும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியதால்) இதை வைத்துக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னை யார் பார்க்க வேண்டும் என்றும் தன்னிடத்தில் யார் வர வேண்டும் என்றும் விரும்பினார்களோ அவர்களுக்குப் பால்புகட்டும் படி தனது சகோதர சகோதரிகளின் மகள்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர் பெரியவராக இருந்தால் ஐந்து முறை (பால் குடித்துவிட்டு) தன்னிடத்தில் வரும் படி (கூறினார்கள்). மக்களில் யாருக்கும் தொட்டிலில் பால் புகட்டாமல் இவ்வாறு பால் புகட்டி தங்களிடத்தில் வரவைப்பதை உம்மு சலமாவும் நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார்களும் நாடவில்லை. அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமாக (இதன் விளக்கம்) எங்களுக்குத் தெரியாது. மக்களுக்கன்றி சாலிமிற்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அளித்த சலுகையாக இச்சட்டம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உர்வா பின் சுபைர்

நூல் : அபூதாவுத் (1764) 

நபி (ஸல்) அவர்கள் சாலிமிற்கு மட்டும் இச்சலுகையை வழங்கினார்கள் என நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் உறுதிப்பட கூறியதாக எந்த வாசகமும் மேலுள்ள ஹதீஸில் இடம் பெறவில்லை. மாறாக எங்களுக்குத் தெரியவில்லை. இது சாலிமிற்கு மட்டும் உரிய சட்டமாக இருக்கக் கூடும் என்று யூகமாக கூறியதாகத் தான் வந்துள்ளது. 

ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் இச்சட்டம் பொதுவானது என்பதை யூகமாகக் கூறாமல் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்தியும் காட்டியுள்ளதாக இச்சசெய்தி கூறுகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் சரி காணும் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் மனைவிமார்கள் கூறியுள்ள யூகத்தை விட்டுவிட்டு பொதுவான சட்டம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்திக் காட்டிய ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறையை ஏற்பதே ஏற்புடையது.

 ஏனென்றால் உறுதியான கூற்றை ஏற்க வேண்டுமா? அல்லது யூகத்தை ஏற்க வேண்டுமா? என்று வரும் போது உறுதியாகக் கூறும் நபரின் தகவலை ஏற்பது தான் அறிவுடமை. 

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டிருப்பதால் இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக மாற்றுக் கருத்துள்ளவர்கள் சாலிமிற்கு மட்டும் உரியது என்ற வாதத்திற்கு இதைச் சான்றாகக் காட்டுவதினால் இந்த ஹதீஸில் அவர்கள் வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக அவர்களுக்கு எதிரான கருத்தே உள்ளது என்று சுட்டிக் காட்டுவதற்காக இந்த ஹதீஸைக் கூறியுள்ளோம். 

விவாதத்தில் வென்றவர்.

இச்சட்டம் சம்பந்தமாக உம்மு சலமா மற்றும் ஆயிஷா (ரலி) ஆகிய இருவர்களுக்கிடையில் விவாதம் நடந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. அதைக் கவனித்தால் பருவ வயதை அடைந்தவருக்கு பால்புகட்டி பால்குடி உறவை ஏற்படுத்தலாம் என்றச் சட்டம் அனைவருக்கும் உரியது என்ற முடிவையே இவர்கள் ஏற்கவேண்டி வரும். 

உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் அந்தச் சிறுவன் உங்கள் வீட்டிற்குள் வருகிறானே. ஆனால் அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்ப மாட்டேன் என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்கவில்லையா? என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள். 

அபூ ஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் என் வீட்டிற்குள் வருகிறார். அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் அபூ ஹுதைஃபாவின் மனதில் அதிருப்தி நிலவுகிறது என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ சாலிமுக்குப் பால் கொடுத்து விடு. (இதனால் பால்குடி உறவு ஏற்பட்டு) அவர் உன் வீட்டிற்கு வரலாம் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி)

நூல் : முஸ்லிம் (2881)

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீதாணையாக (பால்குடிப் பருவத்தைக் கடந்து விட்ட) பால் குடிக்கும் அவசியமில்லாத நிலையில் உள்ள சிறுவன் (திரையின்றி) என்னைப் பார்ப்பதை என் மனம் விரும்பவில்லை. என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் எதற்காக (நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்)? என்று கேட்டுவிட்டு (சஹ்லா (ரலி) அவர்களின் சம்பவத்தைக்) கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி)

நூல் : முஸ்லிம் (2881)

பெரியவருக்குப் பால் புகட்டுவதை உம்மு சலமா (ரலி) அவர்கள் மறுக்கிறார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைக் காட்டி அல்லாஹ்வின் தூதரிடத்தில் முன்மாதிரி இல்லையா? என்று கேட்டு இச்சட்டத்தை எல்லோரும் கடைப்பிடிக்கலாம் என்று உறுதிப்படுத்துகிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் மேற்கொள் காட்டிய இந்த ஹதீஸிற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டார்கள். இவ்வாறு இந்தச் செய்தி கூறுகிறது. 

சாலிமிற்கு மட்டும் உரியது என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுவது தான் நபிவழி என்றால் உம்மு சலமா அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வாதத்திற்கு எந்தவிதமான மறுப்பும் தராமல் ஏன் அமைதியாக இருந்தார்கள்? 

ஆயிஷா (ரலி) அவர்கள் உம்மு சலமாவை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்கு முன்மாதிரி இல்லையா? என்று கேட்ட கேள்விக்கு சாலிமிற்கு மட்டும் உரியது என்று இன்றைக்குக் கூறுபவர்களும் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். 

இமாம் அல்பானீ அவர்களும் இப்னு ஹஸ்ம் அவர்களும் சாலிமுடைய இந்த ஹதீஸை மையமாக வைத்து பெரியவருக்குப் பால்புகட்டும் இச்சட்டத்தைப் பொதுவானது என்றும் நேரடியாக ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பால்குடித்து பால்குடி உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்கள். 

அதிக எண்ணிக்கை ஆதாரமாகாது.

ஆயிஷாவைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சாலிமிற்கு மட்டும் உரியது என்று கூறுவதால் அதிகமானவர்கள் சொல்லுகின்ற கருத்தையே ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விளக்கத்தைத் தருகிறார்கள். இவர்கள் முக்கியமான இரண்டு விஷயங்களை இங்கு கவனிக்க மறந்து விட்டார்கள். 

1.             ஆயிஷா (ரலி) அவர்கள் இச்சட்டத்தை தன்னுடைய யூகமாகச் சொல்லாமல் இது தான் நபிவழி என்று உறுதி செய்கிறார்கள். எனவே இங்கு அதிகமானவர்கள் என்ற பேச்சிற்கே இடமில்லை. 

2.             ஆயிஷா (ரலி) அவர்களும் மற்ற மனைவிமார்கள் அனைவரும் ஹதீஸைப் பற்றிய ஞானத்தில் சமமான அந்தஸ்து உடையவர்கள் என்றால் இந்த வாதத்தை முன் வைக்கலாம். ஆனால் விஷயம் அப்படியல்ல. நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார்களை விட ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க விஷயத்தில் மிகச்சிறந்த தனித்துவத்தைப் பெற்றிருந்தார்கள். 

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் ஹதீஸை அறிந்திருக்காத காரணத்தால் ஒரு தவறான முடிவுக்குச் செல்லும் போது நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் சுட்டிக்காட்டி அது தவறு என்பதை உணர்த்தும் அளவிற்கு மார்க்க ஞானம் கொடுக்கப்பட்டவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள். இதற்குப் பின்வரும் சம்பவம் சான்றாக உள்ளது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது அவர்களின் மனைவிமார்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்து (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான் (அவர்களைப் பார்த்து) (இறைத்தூதரான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லவில்லையா? என்று கேட்டேன். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

நூல் : புகாரி (6730)

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் அதிக ஹதீஸை அறிவித்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களே. சஹாபாக்கள் யாருக்கும் தெரியாத சட்டங்களை ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸைக் கூறி விளக்கியுள்ளார்கள். அபூஹுரைரா, உன்ர், இப்னு உமர் போன்ற பெரும் சஹாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களில் குறையைக் கண்டு பிடித்து சரி செய்தவர்கள். 

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஹதீஸைச் சொல்லும் போது அதில் குறுக்கு விசாரணை செய்து துல்லியமாக விளங்கிக் கொண்டவர்கள். இவ்வளவு பெரிய மேதை சாலிமுடைய சம்பவம் பொதுவானது என்று கூறியதாக வரும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதிகமான ஆட்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்தை எழுப்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்! 

நமது விளக்கம் : 2

சாலிம் சம்பவத்தில் உள்ள விகாரத்தைக் குறைப்பதற்கு சஹ்லா (ரலி) அவர்கள் சாலிமிற்கு பாலைக் கறந்து கொடுத்திருக்கலாம் என்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள் என்ற வாதத்தை எடுத்து வைத்தார்கள். இந்த விளக்கமும் இந்த சம்பவத்தோடு பல விதங்களில் பொருந்தவில்லை. 

ஹதீஸில் அர்ளியீஹி (சாலிமிற்கு பால்புகட்டு) என்ற அரபி வாசகம் இடம் பெற்றுள்ளது. மார்பகத்தில் வாய் வைத்துக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தை ஏராளமான ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

எந்தத் தாயும் தன் குழந்தைக்கு நேரடியாக பால் கொடுப்பாலே தவிர கறந்து கொடுக்க மாட்டாள். கறந்து கொடுப்பதற்கான அவசியமும் வராது. கறந்து கொடுப்பதற்கும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்கு ஏதாவது ஒரு ஹதீஸையாவது அல்லது குறைந்தது அகராதியிலாவது ஆதாரம் காட்டியிருக்க வேண்டும். 

நேரடியாகக் குடிப்பதற்குத் தான் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள் என்று அறிந்து கொண்டே இல்லாத அர்த்தத்தைக் கூறி விகாரமான இந்தச் செய்தியில் உள்ள குறைகளை மறைக்கப் பார்க்கிறார்கள். நேரடியாகக் கொடுப்பதையே இந்த வார்த்தை குறிக்கும் என்பதற்கு உதாரணமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம். 

ஹாமிதிய்யா குலத்தைச் சார்ந்த பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் விபச்சாரம் செய்து விட்டேன். (தண்டனை கொடுத்து) என்னைத் தூய்மைப்படுத்துங்கள் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்னை (தண்டனை கொடுக்காமல்) அனுப்பி விட்டார்கள். மறு நாள் அப்பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னை ஏன் அனுப்புகிறீர்கள்? மாயிஸை (தண்டனை கொடுக்காமல்) அனுப்பியதைப் போல் என்னை அனுப்ப நினைக்கிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் (விபச்சாரத்தினால்) கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் (இப்போதும்) தண்டனையை நிறைவேற்ற முடியாது. குழந்தையை பெற்றப் பின் வா என்று கூறினார்கள். குழந்தையைப் பெற்றவுடன் அப்பெண் குழந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதை நான் பெற்றெடுத்து விட்டேன் என்று கூறினார். இக்குழந்தைக்கு பால்குடியை மறக்கடிக்கும் வரை பால் புகட்டிவிட்டு (பின்பு) வா என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : புரைதா (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் (3500)

சாலிமுடைய ஹதீஸில் இடம்பெற்ற அர்ளியீஹி என்ற அதே வாசகம் இங்கேயும் வந்துள்ளது. இந்த இடத்திலே குழந்தைக்கு இரண்டு வருடம் கறந்து பால் கொடுத்து விட்டு வா என்று இவர்கள் அர்த்தம் செய்வார்களா?

கறந்து கொடுத்தார்கள் என்ற விளக்கத்தைக் கூறிய அறிஞர் எந்த ஹதீஸையும் இதற்கு ஆதாரமாகக் காட்டாமல் கறந்து கொடுத்திருக்கக் கூடும் என்று யூகமாகத் தான் கூறியுள்ளார்.

شرح النووي على مسلم  جزء 10 – صفحة 31 

قال القاضي لعلها حلبته ثم شربه من غير أن يمس ثديها ولا التقت بشرتاهما

காலி (இயாள்) கூறுகிறார் : சஹ்லா அவர்கள் சாலிமிற்கு பாலைக் கறந்து கொடுத்திருக்கக் கூடும். சாலிம் சஹ்லாவின் மார்பகத்தைத் தொடாமலும் அவ்விருவரின் தோல் உரசாமலும் சாலிம் அப்பாலைப் பருகியிருக்கக் கூடும். 

மார்க்கத்தில் யூகத்தைப் புகுத்துகிறார்கள் என்று கர்ஜிப்பவர்கள் இந்த யூகத்தை ஆதாரமாக வைப்பது பெரும் தவறாகும். 

பால்குடி உறவு ஏற்படுவதற்கு எப்படி இரண்டு வருட காலம் நிபந்தனையாக இருக்கிறதோ அது போல் தாயின் மார்பகத்தில் குழந்தை வாய் வைத்துக் குடிப்பதும் ஒரு முக்கியமான நிபந்தனை. கறந்து கொடுத்தார்கள் என்ற வாதத்தை எழுப்புபவர்கள் கூட கறந்து கொடுத்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தையே கொண்டிருக்கிறார்கள். சாலிமுடைய சம்பவத்தில் மாத்திரம் பல்டி அடித்து விடுகிறார்கள். 

இந்த ஒரு சம்பவத்தைச் சரிகாணப் போய் குர்ஆன் வசனத்திற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் எதிரான பல கருத்தைக் கூற வேண்டிய மோசமான நிலையை இவர்கள் அடைந்திருக்கிறார்கள். மார்பகத்திலே உறிஞ்சிக் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்கு பால் புகட்டுவதினாலே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால்புகட்டுவது பால்குடிகாலம் (2 வருடம் முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) 

நூல் : திர்மிதி (1072

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (ஒரு குழந்தை செவிலித் தாயிடம்) ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (அவ்விருவருக்குமிடையே) பால்குடி உறவு ஏற்பட்டு விடாது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) 

நூல் : முஸ்லிம் (2869)

இதே சம்பவம் தப்ரானீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் வாசக அமைப்பு மார்பகத்தில் பால் புகட்டும் கருத்தை ஒளிவு மறைவின்றி தெளிவாக உணர்த்துகிறது. 

நான் (முழுமையான) ஆடையை அணிந்திருக்காத போது அபூ ஹுதைஃபாவின் பொறுப்பில் இருந்த சாலிம் என்னிடத்தில் வந்து செல்பவராக இருந்தார். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் நான் கூறினேன். அதற்கு அவர்கள் (உங்களிடத்தில்) அவரை உறிஞ்சுப் பால்குடிக்க வையுங்கள் அவருக்கு நீங்கள் பால்குடி அன்னையாகி விடுவீர்கள் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : சஹ்லா (ரலி)

நூல் : அல்முஃஜமுல் அவ்சத் (7178) பாகம் : 7 பக்கம் : 168 

மஸ்ஸத் என்ற சொல் நேரடியாக உறிஞ்சுப் பால் குடிப்பதற்குச் சொல்லப்படும். இந்த வார்த்தை தான் இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. 

சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் பால்புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பெரிய மனிதராக இருக்க நான் எப்படி அவருக்குப் பால் புகட்டுவேன்? என்று ஆட்சேபனை செய்ததாகவும் இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்ததாகவும் முஸ்லிமில் 2878 வது செய்தியில் பதிவாகியுள்ளது. தாடி உள்ளவராக சாலிம் உள்ளாரே என்று கேட்டதாக முஸ்லிமில் 2882 வது செய்தியில் இடம் பெற்றுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் சஹ்லா (ரலி) அவர்கள் பெரிய மனிதராக உள்ளாரே? தாடியுள்ளவாக இருக்கிறாரே? நான் எப்படி பால் புகட்டுவேன்? என்று ஏன் கேள்வி கேட்க வேண்டும்? கறந்து கொடுக்கச் சொல்லியிருந்தால் சஹ்லா (ரலி) அவர்கள் இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள். இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்திருக்க மாட்டார்கள்.

 இந்த ஹதீஸின் முன் பின் வார்த்தைகளைக் கவனிக்காமல் ஒன்றுக்கும் உதவாத விளக்கங்களைக் கூறி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

இப்னு அபீமுலைக்கா என்பவர் இந்த ஹதீஸை அறிவிக்கும் நபர்களில் ஒருவர். இவருக்கு இந்த ஹதீஸை காசிம் என்பவர் அறிவித்துள்ளார். இப்னு அபீமுலைக்கா இந்த ஹதீஸை அறிவிக்கப் பயந்து ஒரு வருடம் வரை இந்த ஹதீஸை யாருக்கும் சொல்லாமலேயே இருந்துள்ளார். பிறகு இந்தச் செய்தியை தனக்கு அறிவித்த காசிமைச் சந்தித்து விஷயத்தைக் கூறிய போது காசிம் அவர்கள் இப்னு அபீமுலைக்காவிடம் பயப்படாதே நான் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னதாக மக்களிடம் அறிவிப்புச் செய் என்று கூறினார்கள். இந்தத் தகவல் முஸ்லிமில் 2880 வது எண்ணில் இடம் பெற்றுள்ளது. 

இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளருக்கே இந்தச் செய்தியைச் சொல்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த ஹதீஸ் கறந்து கொடுப்பதைப் பற்றி பேசினால் இப்னு அபீமுலைக்கா ஏன் இதை அறிவிப்பதற்குப் பயப்பட வேண்டும்? சாலிமிற்கு நேரடியாகப் பால்புகட்டும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மக்களுக்கு சொன்னால் மக்கள் தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் தான் அவரை இதைச் சொல்லவிடாமல் தடுத்துள்ளது. 

சுயநலம்.

இந்தச் செய்தியைச் சரிகாணுபவர்கள் தங்களுடைய மனைவிமார்களிடத்தில் ஒரு அன்னிய ஆண் இது போன்று பாலருந்துவதை விரும்புவார்களா? அதைச் செயல்படுத்துவார்களா? என்று நாம் சவால் விடுகிறோம். அபூ ஹுதைஃபா இதற்குச் சம்மதித்தார் என்று வாய் கூசாமல் இவர்கள் சொல்லி விடுகிறார்கள். ஆனால் இச்சட்டத்தை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த இவர்களின் உள்ளம் எள்ளவும் இடம் கொடுப்பதில்லை.

ஆகுமான ஒன்றைச் செய்யவும் செய்யாமல் இருக்கவும் அனுமதி இருக்கும் போது செய்வீர்களா? என்று கேட்பது அறிவீனம் என்று பேசி தப்பித்துச் செல்லப் பார்க்கிறார்கள்.

 ஆகுமான விஷயத்தைச் செய்யவும் செய்யாமல் இருக்கவும் அனுமதி இருக்கிறது என்பதை நாம் மறுக்கவில்லை. நம்முடைய கேள்வி எதுவென்றால் மார்க்கத்தில் ஒரு விஷயம் ஆகுமானதாக இருந்தால் அதைச் செய்யக் கூடியவர்களும் இருப்பார்கள். அதைச் செய்யாதவர்களும் இருப்பார்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் எவராலும் ஏற்று நடத்த முடியாத வகையில் கண்டிப்பாக இருக்காது. 

சாலிமிற்கு கூறப்பட்ட சட்டம் அனுமதிக்கப்பட்ட காரியம் என்று இவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் இதைச் செயல்படுத்தாதவர்கள் பலர் இருக்கும் போது செயல்படுத்துபவர்கள் யாராவது உள்ளார்களா? அனுமதிக்கப்பட்ட இந்தச் காரியம் ஏன் யாராலும் செயல்படுத்த முடியாத வகையில் அமைந்துள்ளது? என்பதே நமது கேள்வி. 

உங்களுடைய உள்ளமும் மக்கள் அனைவரின் உள்ளமும் ஏற்றுக் கொள்ளாத இந்தச் சட்டம் எப்படி அனுமதிக்கப்பட்ட காரியமாக இருக்கும்?. மனிதன் சுயநலம் கொண்டவன். பிறருக்கென்றால் ஒரு மாதிரியாகவும் தனக்கென்றால் இன்னொரு விதமாகவும் நடந்து கொள்பவன். 

இந்தக் காரணத்தினால் தான் சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் சாலிம் பாலருந்த அபூ ஹுதைஃபா ஒத்துக் கொண்டார் என்று கூறும் இவர்களைப் பார்த்து அப்படியானால் உங்கள் மனைவியிடத்தில் ஒரு அன்னிய ஆண் பாலருந்த ஒத்துக் கொள்வீர்களா? என்று கேட்டோம். 

மோசமான கருத்தைக் கூறுபவர்களிடத்தில் இது போன்ற கேள்வியைக் கேட்டால் தான் தாங்கள் கூறும் கூற்று தவறு என்பதை உணர்வார்கள். இந்த யுக்தியை நபி (ஸல்) அவர்கள் கூட ஒரு நேரத்தில் கடைப்பிடித்துள்ளார்கள். 

ஒரு இளைஞன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே எனக்கு விபச்சாரம் செய்வதற்கு அனுமதி தாருங்கள் என்று கூறினார். அப்போது (அங்கிருந்த) கூட்டத்தினர் அவரை எச்சரித்து நிறுத்து நிறுத்து என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தன் பக்கத்தில் வரச் சொன்னார்கள். அவரும் அருகில் வந்து அமர்ந்தார். (அவரிடத்தில்) நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய தாயிடத்தில் விபச்சாரம் புரிவதை நீ விரும்புவாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் மீதாணையாக தங்கள் தாயிடத்தில் விபச்சாரம் புரிவதை நானும் மக்களில் எவரும் விரும்ப மாட்டோம் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய மகளிடத்தில் இவ்வாறு செய்வதை விரும்புவாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே நானும் மக்களில் எவரும் தன் மகளிடத்தில் இச்செயலை செய்வதை விரும்ப மாட்டார்கள் என்று கூறினார். இது போன்றே நபி (ஸல்) அவர்கள் அந்த வாலிபரின் சகோதரி மாமி சின்னம்மா ஆகியோரைக் கூறி இவ்வாறு கேட்டார்கள். அந்நபர் நான் உட்பட யாரும் விரும்ப மாட்டார்கள் என்று பதில் கூறினார்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : அஹ்மத் (21185)

கருத்துப் பிழைகள்.

1.             வாலிப வயதை அடைந்த ஒரு அன்னிய ஆணிற்கு அன்னியப் பெண்ணைப் பால்புகட்டும்படி கூறுவது அசிங்கமான காரியம். இவ்வாறு பலருக்குச் சொல்லாமல் ஒருவருக்கு மட்டும் சொன்னாலும் அசிங்கம் அசிங்கம் தான். கெட்ட வார்த்தைகளைப் பேசாமல் அதிக வெட்கத்தைப் பெற்றிருந்த நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இந்தக் காரியத்தை செய்யும் படி சொல்லவே மாட்டார்கள். 

2.             சாலிம் தனது வீட்டிற்குள் வருவதைக் கூட விரும்பாத அபூ ஹுதைஃபா அவர்கள் தன்னுடைய மனைவியின் மார்பகத்தில் சாலிம் பால்குடிப்பதை எப்படி ஒத்துக் கொள்வார்கள்? சிரிய விஷயத்திற்காக அதிர்ப்தியடைந்தவர் இவ்வளவு பாரதூரமான காரியத்திற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டார்.

3.             சாலிம் வருவதை சஹ்லா அவர்களும் விரும்பவில்லை என்று ஒரு செய்தி கூறுகிறது. சாலிம் வந்து போவது இப்பெண்ணிற்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் போது சாலிமிற்கு பால்கொடுக்கச் சொல்வது சந்தோஷத்தை ஏற்படுத்தாது.

4.             சாலிம் (ரலி) அவர்களுக்கு ஹிந்த் என்ற பெண்ணை மணமுடித்திருந்தார்கள். ஒரு பெண் தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணிடத்தில் பாலருந்துவதை எக்காலமும் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

5.             நம்முடைய சொந்தத் தாயாக இருந்தால் கூ.ட குறிப்பிட்ட வயது வந்தவுடன் சிறுவனாக இருக்கும் போது அவர்களிடத்தில் நடந்துகொண்டதைப் போல் அல்லாமல் பழகும் முறையை மாற்றிக் கொள்கிறோம். சஹ்லா (ரலி) அவர்களை சாலிம் தாயாக கருதியிருந்தால் அவர்களின் மார்பகத்தில் பாலருந்த சாலிம் ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்.

6.             தன்னிடத்தில் யார் யாரெல்லாம் வரவேண்டும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பினார்களோ அந்த ஆண்களை தன்னுடைய சகோதர சகோதரிகளின் மகள்களிடத்தில் அனுப்பி பால்குடிக்க வைத்து வர வைத்தார்கள் என்று பச்சையாக ஆயிஷா (ரலி) அவர்களின் மீதும் ஏனைய நபித்தோழியர்கள் மீதும் பழிசுமத்தும் இச்செய்தி இஸ்லாத்திற்கு உகந்ததா? ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதர சகோதரியின் மகள்கள் கணக்கின்றி ஆயிஷா (ரலி) அவர்கள் அனுப்புகின்ற ஆண்களுக்கெல்லாம் பால் புகட்டினார்கள் என்று ஒத்துக் கொள்பவர்கள் இப்பத்தினிப் பெண்களின் மீது அவதூறு சொன்ன குற்றத்திற்கு ஆளாகுவார்கள். 

7.             அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் சாலிமை வளர்ப்புப் பிள்ளையாக எடுத்துக் கொண்டதைப் போல் நபி (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை வளர்ப்புப் பிள்ளையாக கவனித்து வந்தார்கள். முஹம்மதுடைய மகன் ஸைத் என்று சொல்லும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களை நேசித்தார்கள். ஸைத் (ரலி) அவர்களின் மேலுள்ள பிரியத்தினால் ஸைத் (ரலி) அவர்களின் மகன் உஸாமா அவர்களையும் கடுமையாக நேசித்தார்கள். உஸாமா (ரலி) அவர்களுக்கு ஹிப்பு ரசூலில்லாஹ் (அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமானவர்) என்ற பெயர் கூட மக்களால் சூட்டப்பட்டது. பெரியவருக்கு பால்புகட்டி தாய் மகன் உறவை ஏற்படுத்துவது மார்க்கத்தில் ஆகுமான காரியமாக இருந்தால் முதலில் நபி (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களை தன்னுடைய மனைவிமார்களில் யாரிடத்திலாவது அனுப்பி பால்குடிக்க வைத்து இரத்த பந்த உறவை ஏற்படுத்தி இருப்பார்கள். இதிலிருந்து சாலிமுடைய சம்பவம் உண்மையல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

8.             பெரியவருக்குப் பால் புகட்டினாலும் பால்குடி உறவு ஏற்படும் என்றால் இன்றைக்கு எத்தனையோ கணவன்மார்கள் தங்கள் மனைவியிடத்தில் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள். இதனால் மனைவியிடத்தில் பால்குடித்த கணவன் மனைவிக்கு மகனாக மாறி விடுவான் என்ற அறிவீன தீர்ப்பை இவர்கள் கூறுவார்களா?

முரண்பாடுகள்.

1.             சஹ்லா (ரலி) அவர்கள் சாலிமிற்கு 5 முறை பால் புகட்டடியதாக அபூதாவுதில் (1764) என்ற எண்ணில் இடம்பெற்ற செய்தி கூறுகிறது. ஆனால் அஹ்மதில் (25111) என்ற எண்ணில் இடம் பெற்ற இதே சம்பவத்தில் சஹ்லா (ரலி) அவர்கள் சாலிமிற்கு 10 முறை பாலூட்ட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது. ஒரே சம்பவம் தொடர்பாக வரும் ஹதீஸில் முரண்பாடு இருந்தால் இந்த முரண்பாடே அந்த ஹதீஸ் சரியில்லை என்பதற்குப் போதிய சான்றாகிவிடும். இவ்விதி ஹதீஸ் கலையில் உள்ள விதியே.

2.             புகாரியில் (2647) வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி பெரிய வயதை அடைந்த பிறகு பால்குடித்தால் பால்குடிஉறவு ஏற்படாது என்ற சரியான தகவலைத் தருகிறது. இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். ஆனால் அபூதாவுதில் (1764) வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னுடைய சகோதர சகோதரியின் மகள்களிடத்தில் ஆட்களை அனுப்பி பால்குடிக்க வைத்து தன்னிடத்தில் வருவதற்கு அனுமதித்தார்கள் என்று மோசமான கருத்தைக் கூறுகிறது. சாலிமுடைய சம்பவமும் இதையே கூறுகிறது. இந்தத் தகவலையும் ஆயிஷா (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். பெரியவர்களுக்கு பால்குடி சட்டம் கிடையாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியிருக்கும் போது பெரியவருக்கு பால்புகட்டி பால்குடி உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அவர்களே எப்படி செய்வார்கள்? இந்த முரண்பாடும் சாலிமுடைய சம்பவம் குளறுபடியானது என்பதை வலுப்படுத்துகிறது. 

3.             சாலிமுடைய சம்பவத்தில் 5 முறை பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து இந்த எண்ணிக்கைக்கு மாற்றமாக 10 முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் 7 முறை குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் 3 முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் முரண்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 7 5 3 இந்த நான்கில் எந்த எண்ணிக்கையில் பால்புகட்ட வேண்டும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று குழப்பம் நிலவுவதால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பான விரிவான விளக்கம் குர்ஆனில் நீக்கம் செய்யப்பட்டதா? என்ற பின்வரும் தலைப்பில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. 

 

« Older Entries