ஹதீஸ் கலை விதி

குர்ஆனுக்கு முரணாக ஹதீஸை அறிவிப்பவர் பொய்யரா?

arivippavar copy

­

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டபட்டவை என்றால் அந்த ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்களில் நிச்சயம் ஒரு பொய்யர் இருப்பார். அவர் யார் என்று கண்டுபிடித்து விட்டால் இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டபட்டவை என இலகுவாக ஒதுக்கி விட முடியும். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று இருந்தால் எமது இரண்டு மூலாதாரங்களில் ஒன்றான ஹதீஸ்கள் இவ்வளவு சிக்கலினூடாகவா எங்களுக்குக் கிடைக்கப்பெற்று இருக்கிறது ? என்பதை தெளிவாக விளக்கவும். Read more

ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

kalayil

குர்ஆனைப் படிக்காத ஒருவர் குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது என்று சொல்பவர்களைப் பார்த்து யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள் என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் சொல்லப்படவில்லை என்று யார் கூறுகிறார்களோ அவர்களும் அறியாமையில் தான் இருக்கிறார்கள்.

இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததால் ஹதீஸ் கலையில் இல்லை என்று ஆகிவிடுமா? ஒன்று இரண்டு என்றில்லாமல் அதிகமான ஹதீஸ் கலை நூற்களில் இவ்விதி இடம் பெற்றிருக்கிறது. ஹதீஸ் கலைக்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் நூற்களில் இவ்விதி இடம் பெற்றும் கூட இவர்கள் ஏன் இப்படி செத்துப் போன வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியவில்லை.

இமாம் ஷாஃபியின் கூற்று

المسألة الخامسة خبر الواحد إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438

இமாம் குர்துபீயின் கூற்று.

والخبر إذا كان مخالفا لكتاب الله تعالى لا يجوز العمل به.

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.

நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213

இமாம் ஜுர்ஜானியின் கூற்று.

الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من مخالفة آية

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113

இமாம் சுயூத்தியின் கூற்று.

أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276

இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று.

ومنها مخالفة الحديث صريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும்.

நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

فصل مخالفة الحديث الموضوع لصريح القرآن ومنها مخالفة الحديث لصريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.

நூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218

இமாம் அபூபக்கர் சர்ஹஸீயின் கூற்று.

فأما الوجه الاول وهو ما إذا كان الحديث مخالفا لكتاب الله تعالى فإنه لا يكون مقبولا ولا حجة للعمل به

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.

நூல் : உசூலுஸ் ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364

இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

وَذَلِكَ أَرْبَعَةُ أَوْجُهٍ أَيْضًا مَا خَالَفَ كِتَابَ اللَّهِ

இதை (நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.

நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492

وَالْأَوَّلُ عَلَى أَرْبَعَةِ أَوْجُهٍ : إمَّا أَنْ يَكُونَ مُعَارِضًا لِلْكِتَابِ

(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத செய்தி என்று முடிவு செய்யும்) முதல் வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.

நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368

இமாம் இப்னு ஜவ்ஸியின் கூற்று.

وقال ابن الجوزي ما أحسن قول القائل إذا رأيت الحديث يباين المعقول أو يخالف المنقول أو يناقض الأصول فاعلم أنه موضوع

சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277

وقال ابن الجوزي الحديث المنكر يقشعر له جلد الطالب للعلم وينفر منه قلبه في الغالب

எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275

அர்ரபீஉ பின் ஹய்ஸமின் கூற்று.

عن الربيع بن خثيم قال إن من الحديث حديثا له ضوء كضوء النهار نعرفه به وأن من الحديث حديثا له ظلمة كظلمة الليل نعرفه بها

சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகலின் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்து கொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்து கொள்ளலாம்.

நூல் : மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62

முஹம்மது பின் அப்தில்லாஹ்வின் கூற்று :

இந்த அறிஞரின் கூற்றை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்இஹ்காம் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்.

الإحكام لابن حزم  جزء 2 – صفحة 209

 وقال محمد بن عبد الله بن مسرة الحديث ثلاثة أقسام فحديث موافق لما في القرآن فالأخذ به فرض وحديث زائد على ما في القرآن فهو مضاف إلى ما في القرآن والأخذ به فرض وحديث مخالف لما في القرآن فهو مطرح

முஹம்மது பின் அப்தில்லாஹ் என்பார் கூறுகிறார் : ஹதீஸ் மூன்று வகையாகும்.

1.             குர்ஆனிற்கு ஒத்து அமைகின்ற ஹதீஸ் (முதலாவது வகையாகும்). இதை ஏற்றுக் கொள்வது கட்டாயம்.

2.             குர்ஆனில் இருப்பதை விட கூடுதலான தகவலைத் தருகின்ற ஹதீஸ் (இரண்டாவது வகையாகும்). இதையும் குர்ஆனுடன் இணைத்து ஏற்றுக் கொள்வது கட்டாயம்.

3.             குர்ஆனுடைய கருத்திற்கு முரணாக வரும் ஹதீஸ் (மூன்றாவது வகையாகும்). இது ஒதுக்கப்பட வேண்டியது.

நூல் : அல்இஹ்காம் பாகம் : 2 பக்கம் : 209

அறிவீனர்களின் வழிமுறையல்ல. அறிஞர்களின் வழிமுறை.

ariveenargal

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விளக்கவுரை எழுதியதைப் போல் ஜைனுத்தீன் என்ற இப்னு ரஜப் என்ற அறிஞரும் புகாரிக்கு விளக்கவுரை கொடுத்துள்ளார். அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத திர்மிதி அவர்களால் சஹீஹானது என்று சொல்லப்பட்ட பின்வரும் ஹதீஸை அறிஞர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினால் மறுத்துள்ளார்கள். இந்தத் தகவலை இப்னு ரஜப் தனது நூலில் பதிவு செய்கிறார்.

ولهذا المعنى رد طائفة من العلماء حديث قطع الصلاة بمرور الكلب وغيره ، وقالوا: إنه مخالف للقرآن في قوله تعالى : { وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى } الأنعام:164،

நாயும், மற்றவைகளும் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்துவிடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை அறிஞர்கள் மறுக்கிறார்கள். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் (6 : 164) என்ற இறைவனுடைய கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

நூல் : ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப் பாகம் : 3 பக்கம் : 342

இக்கட்டுரை ஒரு சுருக்கம் மட்டும் தான். இங்கு குறிப்பிடப்பட்டாத இன்னும் பல தகவல்கள் உள்ளன. வேறு பல கோணங்களிலும் இந்த விமர்சனத்திற்கு பதில் உள்ளது. தேவை ஏற்பட்டால் அதையும் சமுதாயத்திற்கு தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம்.

அறிஞர்களின் பார்வை.

ஒரு ஹதீஸைச் சரிகாணுவதற்கு அறிஞர்கள் கடைப்பிடித்த வழிமுறையை நம்மை விமர்சனம் செய்பவர்கள் முறையாக அறிந்து கொள்ளவில்லை. அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லையே என்று பாமர மக்கள் கேட்பதைப் போல் கேட்கிறார்கள். அறிவிப்பாளர் தொடரில் குறை இல்லாவிட்டால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடும் என்ற தவறான இவர்களின் எண்ணமே இதற்குக் காரணம். ஹதீஸ் கலை மாமேதைகள் ஹதீஸைச் சரிகாணுவதற்கு இரு வழிமுறைகளைக் கடைப் பிடித்துள்ளனர்.

1.             அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது

2.             அறிவிக்கப்பட்ட செய்தியிலும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது.

இந்த இரண்டு நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே ஹதீஸ் சரியாகும். ஆனால் நம்மை விமர்சிப்பவர்கள் இந்த இரு நிபந்தனைகளில் முதலில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டாவதைக் கவனிக்க மறந்து விட்டார்கள்.

ஒரு ஹதீஸில் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இரண்டு நிபந்தனைகளில் முதல் நிபந்தனைக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸ் ஆகிவிடும்.. அத்துடன் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸின் கருத்து இருக்க வேண்டும்.

1.             அதன் கருத்து குர்ஆனுடன் முரண்படும் வகையில் இருக்கக் கூடாது.

2.             ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரண்படக் கூடாது.

3.             நிரூபிக்கப்பட்ட வரலாறுக்கு முரண்படக் கூடாது.

4.             முரண்பாடாக பல விதங்களில் அறிவிக்கப்படக் கூடாது.

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைந்து ஹதீஸின் கருத்தில் மேலுள்ள குறைகளைப் போன்று ஏதேனும் இருக்குமானால் இது போன்ற நிலையில் அறிஞ:ர்கள் அந்த ஹதீஸிற்கு (சஹீஹுல் இஸ்னாத்) அறிவிப்பாளர் தொடர் சரியான செய்தி என்று மட்டுமே கூறுவார்கள். செய்தி சரி என்பதற்கு அவர்கள் அங்கீகாரத்தைத் தர மாட்டார்கள். இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

இப்னுஸ் ஸலாஹ் அவர்களின் விளக்கம்.

مقدمة ابن الصلاح – (ج 1 / ص 6)

السابع قولهم هذا حديث صحيح الإسناد أو حسن الإسناد دون قولهم: هذا حديث صحيح أو حديث حسن، لأنه قد يقال: هذا حديث صحيح الإسناد، ولا يصح، لكونه شاذا أو معللا ” .

இது சஹீஹான செய்தி என்றோ அல்லது ஹசனான செய்தி என்றோ கூறாமல் இது அறிவிப்பாளர் தொடரில் சரியான செய்தி என்றோ அல்லது அறிவிப்பாளர் தொடரில் ஹசனானது என்றோ அறிஞர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால் (கருத்தைக் கவனிக்கும் போது) வலிமையான செய்திக்கு அது மாற்றமாக இருப்பதினால் அல்லது ஏதோ ஒரு குறை (அதிலே) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாமல் இருந்தாலும் இது சரியான அறிவிப்பாளர் தொடர் உள்ள செய்தி என்று சொல்லப்படும்.

நூல் : முகத்திமது இப்னிஸ்ஸலாஹ் பாகம் : 1 பக்கம் : 6

அல்குலாஸத் என்னும் நூலில் தய்யிபியின் கூற்று.

 قولهم : حديث صحيح أو حسن ، وقد يصح الإسناد أو يحسن دون متنه لشذوذ أو علةا.هـ..

வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹ் அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாக சில வேளை இருக்கும்.

இமாம் நவவீ அவர்களின் கூற்று.

لأنه قد يصح أو يحسن الإسناد ، ولا يصح ولا يحسن لكونه شاذا أو معللاا

வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹ் அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாக சில வேளை இருக்கும்.

நூல் : அல்இர்ஷாத்

இமாம் ஹாகிமின் கூற்று.

معرفة علوم الحديث للحاكم – (ج 1 / ص 261)

وعلة الحديث ، يكثر في أحاديث الثقات أن يحدثوا بحديث له علة ، فيخفى عليهم علمه ، فيصير الحديث معلولا ،

குறை தெரியாத காரணத்தினால் நம்பகமான அறிவிப்பாளர்கள் குறையுள்ள ஹதீஸை அறிவிப்பார்கள். எனவே ஹதீஸ் குறையுள்ளதாக மாறிவிடும். நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் குறை அதிகமாக இதனால் வருகிறது.

நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 261

இதே கருத்தை இப்னுல் முலக்கன் என்பவரும் இப்னு ஜமாஆ என்பவரும் கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மன்ஹலுர்ரவீ பாகம் : 1 பக்கம் : 37

நூல் : அல்முக்னிஃ பாகம் : 1 பக்கம் : 89

இப்னு ஜவ்ஸியின் கூற்று.

الموضوعات – (ج 1 / ص 99)

وقد يكون الاسناد كله ثقات ويكون الحديث موضوعا أو مقلوبا

சில நேரங்களில் அறிவிப்பாளர் தொடர் முழுவதும் நம்பகமானவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட வகையைச் சார்ந்ததாகவோ அல்லது மாற்றிக் கூறப்பட்ட செய்தியாகவோ இருக்கும்.

நூல் : அல்மவ்லூஆத் பாகம் : 1 பக்கம் : 99

இப்னு தய்மியா அவர்களின் கூற்று.

مجموع الفتاوى  جزء 18 – صفحة 47

كم من حديث صحيح الإتصال ثم يقع فى أثنائه الزيادة والنقصان فرب زيادة لفظة تحيل المعنى ونقص أخرى كذلك

முழுமையான தொடரில் சரியாக இருக்கும் எத்தனையோ ஹதீஸ்களில் கூட்டுதலும், குறைத்தலும் நிகழ்ந்து விடுகிறது. சில நேரங்களில் ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது அர்த்தத்தையே மாற்றி விடும். ஒரு வார்த்தையைக் குறைப்பதும் இவ்வாறே அர்த்தத்தை மாற்றி விடுகிறது.

நூல் : மஜ்மூஉல் ஃபதாவா பாகம் : 18 பக்கம் : 47

இப்னுல் கய்யும் அவர்களின் கூற்று.

الفروسية  جزء 0 – صفحة 245

وقد علم أن صحة الإسناد شرط من شروط صحة الحديث وليست موجبة لصحته فإن الحديث إنما يصح بمجموع أمور منها صحة سنده وانتفاء علته وعدم شذوذه ونكارته

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைய வேண்டும் என்பது ஹதீஸ் சரியாகுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பதினால் (மட்டும்) அந்த ஹதீஸும் சரியானது என்று முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் பல விஷயங்கள் இருந்தால் தான் ஹதீஸ் சரியாகும். தொடர் சரியாக இருப்பதும் கருத்தில் குறை வராமல் இருப்பதும் வலிமையான தகவலுக்கு முரண்படாமல் இருப்பதும் மோசமான கருத்தைத் தராமல் இருப்பதும் இவற்றுள் அடங்கும்.

நூல் : அல்ஃபரூசிய்யா பக்கம் : 246

حاشية ابن القيم ள جزء 1 – صفحة 77

 أما قولكم إنه قد صح سنده فلا يفيد الحكم بصحته لأن صحه السند شرط أو جزء سبب للعلم بالصحة لا موجب تام فلا يلزم من مجرد صحة السند صحة الحديث ما لم ينتف عنه الشذوذ والعلة

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ளது என்று நீங்கள் கூறுவது அந்த ஹதீஸ் சரியானது என்ற கருத்தைக் கொடுக்காது. ஏனென்றால் தொடர் சரியாக இருக்க வேண்டுமென்பது சரியான செய்தியை அறிந்து கொள்வதற்கான ஒரு நிபந்தனை தான். முழுமையான அளவுகோல் அல்ல. எனவே முரண்பாடும் குறையும் ஹதீஸை விட்டும் நீங்காத வரை அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடாது.

நூல் : ஹாஷியதுல் இப்னில்கய்யிம் பாகம் : 1 பக்கம் : 77

சன்ஆனீயின் கூற்று.

توضيح الأفكار ள جزء 1 – صفحة 234

اعلم أن من أساليب أهل الحديث أن يحكوا بالصحة والحسن والضعف على الإسناد دون متن الحديث فيقولون إسناد صحيح دون حديث صحيح لأنه يصح الإسناد لثقة رجاله ولا يصح الحديث لشذوذ أو علة

ஹதீஸ் கலை அறிஞர்கள் ஹதீஸின் தகவலைப் பற்றி பேசாமல் அறிவிப்பாளர் தொடருக்கு சரியானது ஹசனானது பலவீனமானது என்று தீர்ப்பளிப்பார்கள். இது அவர்களின் வழமை. சரியான ஹதீஸ் என்று சொல்லாமல் சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்று சொல்வார்கள். ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதினால் தொடர் சரியாகி விடும். முரண்பாடு அல்லது நுட்பமான குறை (செய்தியில்) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாது.

நூல் : தவ்ளீஹுல் அஃப்கார் பாகம் : 1 பக்கம் : 234